| சிலம்பின் ஒலியின் பயனாதலின் அழைத்தால் என்ன என்றார்; என்ன - உவமவுருபு; வினைபற்றிய உவம முள்ளுறுத்த தற்குறிப்பேற்ற அணி. |
| காலம் இது - "இறைவன் கிளர்கின்ற காலமிக் காலம்" (4); "காலமுண்டாகவே காதல் செய்துய்ம்மின்...பிரான்றன் னடியவர்க்கு, மூலபண் டாரம் வழங்குகின் றான்வந்து முந்துமினே" (5) (திருவா - பாண்டிப் பதிகம்) என்ற திருவாக்குக்களின் கருத்துக்கள் ஈண்டுக் கருதத்தக்கன. |
| அவரை - "மாலும் அயனும்" என்ற அவ்விருவரையும். |
| கடல் விளைத்த ஆலம் - விளைத்த - விளைவிக்கப்பட்ட; கடலில் விளைவிக்கப்பட்ட என்பதைக் கடல் விளைத்த என்றுபசரித்தார்; இடத்து நிகழ் பொருள் இடத்தின்மேல் ஏற்பட்டது. ஆலம் இருண்டகண்டம் - ஆலம் - விடம்; ஆலமிருண்ட - ஆலத்தால் இருண்ட. |
| நீல மலர் - குவளை; இது பெண்களின் கண்ணுக்கு உவமிக்கப்படும்; நீலமலர் போன்ற கண்; மெய் பற்றிய உவமம். |
| நேர் நோக்கி - நேராக அதனையே குறிவைத்து. |
| 334 |
| குறிப்பு:- 3486-3487-3488 இம்மூன்று பாட்டுக்களும் சில பிரதிகளில் இல்லை. |
| 3489. (வி-ரை) திருவீதியில் இறைவர் எழுந்தருளும் பொழுது அவரைத் தொடர்ந்து சென்றாரையும் சென்ற பொருள்களையும் கூறுவது இத்திருப்பாட்டு. |
| எய்துமவர்கள் - முன் மூன்று பாட்டுக்களினும் குறிப்பிட்டவர்கள். இவர்கள் இறைவரது பின் தொடர்ந்தவர்கள். |
| அறைகொள்....சுரும்பு தொடர - நீர் தொடர் சடையில் அரவும், பிறையினருகு இதழிப் பிணையலில் சுரும்பும் தொடர; அறை - ஓசை; இரைச்சல்; இறைவருடனே திருமேனித் தொடர்பு கொண்டன. |
| உடன் மறைகள் தொடர - இறைவரைத் தம்முள் வைத்தலால் உடன் தொடர்ந்தன. |
| வன்றொண்டர் மனமும் தொடர - வன்றொண்டர் திருமேனி மட்டில் தேவாசிரியன் மருங்கு நின்றதன்றி, அவரது மனம் இறைவரைப் பின்பற்றிச் சென்றது என்பதாம்; உம்மை முன்கூறிய ஏனையவையே யன்றி மனமும் என இறந்தது தழுவிய எச்சவும்மை; இனி, மனமும் என்பதற்குப் பிரியாது சிவயோக நிலையிற் கூடியிருக்கும் நம்பிகளது மனமும் என்று சிறப்பும்மை யாக்கி உரைத்தலுமாம்; பிரியாது கூடியிருந்தாலும் இங்கு உலகியல் நிலையில் நடிப்பார் போன்று இறைவர் போதலும் அவர் மனந் தொடர்தலுமாகிய செயல்கள் நிகழ்ந்தனஎன்பதாம்."ஏடுதரு மலர்க்குழலார் முலைத்தலைக்கே யிடைக்கே, எறிவிழியின் படுகடைக்கே கிடந்து மிறை ஞானங், கூடுமவர் கூடரிய வீடுங் கூடிக் குஞ்சித்த சேவடியும் கும்பிட்டே யிருப்பர்" (சித்தி-10) என்ற கருத்து ஈண்டுச் சிந்திக்கத் தக்கது. உலகியல் நிலையில் இவ்வாறு நம்பிகள் மனந்தொடர்ந்த தன்மைபற்றி மேல் 3502-3503 பாட்டுக்களிற் கூறுதல் காண்க. |
| இத்திருப்பாட்டு மிகுந்த இசை நயமும் பொருணயமும் கவிநயமும் பொருந்தி விளங்குவதாகும். |
| 335 |
| 3490. (வி-ரை) பெருவீரை - பெரிய கடல். |
| சூழ்வார் - முன் நான்கு திருப்பாட்டுக்களிலும் கூறப்பட்ட பல்வேறு திறத்தினர். |