| |
| பிரமன்; ஏன்ற - செருக்கியெழுந்த; அத்தலையினில் ஏற்று என்க. அத்தலையினில் என்பது இசையெச்சம். மாவிரதத்த - மாவிரதம் என்ற உட்சமயக் கோலத்தையுடைய; சான்று காட்டுதற் கரியவன் - "தனக்குவமையில்லாதான்" (குறள்); தன்னிலா மனத்தார் - தற்போத மில்லாது சிவனையே நினையும் மனத்தவர்கள்; மான்று - "மான்று மனங்கருதி நின்றீரெல்லாம் மனந்திரிந்து மண்ணின் மயங்காது...தொழுமின்களே" (பிள். தூங்கானை மாடம் - 4);-11 கலி வலங்கெட ஆரழலோம்பும் என்றது உலகங் காக்கச் செய்யும் பொதுவேள்விகளை. மறைமுற்றன லோம்பும் என்றது வைதிகர்கள் மனை தோறும் வளர்க்கும் முத்தீ; முன்னையது நகரின் புறத்தே யாகசாலைகளில் செய்யப்படுவது; வந்து - நாட்டியத்தான் குடியினின்றும் வடகிழக்காகத் திருவாரூர் செல்பவர் நேரே செல்லாது தென் கிழக்காக 4 நாழி வழி தேடி வந்து கண்டாராதலின் வந்து என்றார். ஏனைய பாட்டுக்களிலும் இவ்வாறே கொள்க; ஒலிகொள் இன்னிசை - இசை (பொருட்) சத்தம் பற்றியது; செந்தமிழ் - பொருளைப் பற்றியது; இயற்றமிழ் என்றலுமாம். |
| தலவிசேடம்:- திருவலிவலம் - முன் 2413-ன் கீழ் உரைக்கப்பட்டது பார்க்க. |
3200 | செறிபுன் சடையார் திருவாரூர்த் திருப்பங் குனியுத் திரத்திருநாள் குறுக வரலும் பரவையார் கொடைக்கு விழாவிற் குறைவறுக்க நிறையும் பொன்கொண் டணைவதற்கு நினைந்து நம்பி திருப்புகலூர் இறைவர் பாதம் பணியவெழுந் தருளிச் சென்றங் கெய்தினார். | |
| 46 |
| (இ-ள்) செறி....வரவும் - (அந்நாளிலே) செறிந்த புன் சடையினை உடைய சிவபெருமானது திருவாரூர்த் திருப்பங்குனி உத்திரத் திருநாளானது அணுக வரவே; பரவையார்....நினைந்து - பரவையார் கொடுப்பதற்கும் திருவிழாவில் அடியார்களுக்கு வேண்டுவன வெல்லாம் குறைபாடின்றிச் செய்வதற்கும் நிறைவாகிய பொன்னினைக் கொண்டு வருதற்கு எண்ணி; நம்பி...எய்தினார் - நம்பிகள் திருப்புகலூர் இறைவரது திருவடிகளைத் தொழுவதற்கு எழுந்தருளிப் போய் அங்குக் சேர்ந்தருளினர். |
| (வி-ரை) திருவாரூர்...குறுகவரலும் - புற்றிடங் கொண்ட பெருமானைக் கும்பிட்டு நம்பிகள் ஓவா இன்பமுற்றிருந்த அந்நாளில் திருப்பங்குனி உத்திரத் திருநாள் அணுக வந்தது. "அந்நாளிலே" என்பது சொல்லெச்சம்; திருப்பங்குனி உத்திரத் திருநாள் திருவாரூரில் மிகச் சிறப்புடையது. 48 நாட்கள் கொண்டாடப்படுவது. இதனுள் விநாயகர், சுப்பிரமணியர், சந்திரசேகரர் முதலாகச் சண்டேசர் இறுதியாக அவ்வம் மூர்த்திகளுக்கும் தனித்தனி விழாக்கள் உண்டு. பங்குனி உத்திரநாளில் வீதிவிடங்கராகிய ஸ்ரீ தியாகேசப் பெருமான் உருத்திர பாத தரிசனந் தந்து ஆழித்தேர் ஊர்ந்து திருவீதி எழுந்தருளுவது பெருஞ் சிறப்பாகும். |
| பரவையார் கொடைக்கு விழாவிற் குறைவறுக்க - அத்திருவிழாவில் பரவையார் விழாக் காணவரும் அவ்வவர்க்கும் வேண்டிய வேண்டியவாறு பொன்மணி துணி முதலியவற்றையெல்லாம் கொடுப்பதும், அடியார்களுக்கு அமுது உறையுள் முதலிய எல்லாம் குறைவின்றி உபசரித்துச் செய்வதும் வழக்கமாகும். அதன் பொருட்டு நம்பிகள் இறைவரிடம் பொன் வேண்டுவதும் வழக்கமாம். பின்னர்த் திருமுதுகுன்றத்திலும் திருப்பாச்சிலாச்சிராமத்திலும் பொன் வேண்டிப்பெறும் வரலாறுகளும் காண்க. அவையும் அவ்வப் பங்குனி உத்திரவிழாவின் பொருட்டே யென்க. |