[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்407

  3526. (இ-ள்) "எம்பெருமானீர்!....குறை" என்ன - "எமது பெருமானே! எனது உயிரைக் காவல் செய்யாது துன்பம் செய்கின்ற கொம்பு போன்ற பரவையிடத்தினின்றும் யாது குறை கொண்டு வந்தீர்?" என்று வினவ; தம்பெருமானும்.....என்ன - "தமது பெருமானாகிய இறைவரும் தாழ்ந்த குழலினையுடைய பரவையினது புலவியினால் வந்த கோபத்தினைத் தணியச் செய்தோம்; நம்பியே! இனி நீ போய் அவள்பாற் சேர்வாயாக" என்று அருள,
 

372

  3527. (இ-ள்) நந்தி......அருள் செய்ய - நந்தி என்னும் திருநாமமுடைய எமது பெருமானார் வந்து இவ்வாறு அருளிச்செய்ய; நலமெய்தும்...திகழ்கின்றார் - நன்மை பொருந்தும் திருவுள்ளத்திலே ஆசை மிகுதலினாலே உண்டாகிய மகிழ்ச்சி பொருந்தி விளங்குகின்றாராகி; பந்தமும்.....என்றார் - பந்தத்தையும் வீட்டையும் நீரே உயிர்களுக்கு அருளும் நிலைக் கேற்றவாறே செய்தருளினீர்! எமது பெருமானீரே! இனி எனக்கு என்ன துன்பம் உள்ளது? என்று போற்றினார்.
 

373

  இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
  3525. (வி-ரை) மன்மதன் வாளிக்கழிவார் - என்ற துபசாரம்; உலகியல்பற்றிக் கூறியதாம். நம்பிகள் காமவசப்பட்டு வருந்தினார் என்பதன்று. இது பற்றி முன் உரைத்தவை பார்க்க; எவ்வண்ண நிற்பினும் சிவன் பாலன்றிச்சிந்தை பிறழாத சிவயோக நிலையின் நிற்பது நம்பிகள் திருவுள்ளம் என்பது ஈண்டுக் கருதத்தக்கது. "சீவன்முத்தர் சிவமேகண் டிருப்பர்" (சித்தி - 11 - 1).
  உயிர் நல்கும் - முன் "ஆவியளிக்கும்படி போனார்" (3524) என்றது காண்க.
  மூவுலகுஞ் சென்றடையும் தாள் - மூவுலகிலும் உள்ள எல்லாவுயிர்களும் துன்பநீக்கத்தின் பொருட்டுச் சென்று புகலடையும் திருவடி. இவ்வாறன்றிச் சங்கார காலத்து யாவும் திருவடியினொடுங்கிச் சிருட்டிக் காலத்து ஒடுங்கிய முறையே தோற்றும்திருவடி என்று உரைத்தனர் முன் உரைகாரர்.
  என் சொல்லுவர் என்றே தெளியாதார் - முன்முறை "உறுதிசெய் தணைந்தார் என்றே" (3505) எண்ணிக் கொண்டதற்கு மாறாக நிகழ்ந்தமையால் இம்முறை தெறியாராயினார். இதனாலே "என் கொடுவந்தீர் குறை" என்றுமேல் வினவலாயினர். தெளியாதார் - தெளியாராகி; முற்றெச்சம்,.
  தெளியாதார் - என்ன - எனவரும் பாட்டுடன் முடிக்க.
 

371

  3526. (வி-ரை) என்னுயிர் காவாது இடர் செய்யும் கொம்பனையாள் - உயிர் காத்தல் - உயிரைப் பாதுகாத்தல்; இடர் செய்யும்- பாதுகாத்தல் நாயகியின் கடனாயிருப்பவும் அதனைச் செய்யாமையே யன்றி இடரையும் செய்யும் என்பது; இடர் செய்தலினாலே காவாது என்றுரைப்பினுமாம்; கொம்பு அனையாள் - உவமை, உணர்வின் குறைவு காட்டும் குறிப்புமாம்.
  குறை என் கொடுவந்தீர் - என்க; குறை - முன்னர்க் கொண்டு வந்தது போலச் செயல் நிறைவேறாத நிலை; என் கொடு - வேறும் ஒன்றை என்றது குறிப்பு.
  தாழ்குழல் - பரவையார்; வினைத்தொகையன் மொழி; தாழ்தல் - வணங்குதல் என்ற குறிப்புடன் நின்றது; தாழ் - முன்னர் வணங்காது நின்றதுபோ லன்றி அடியில் வீழ்ந்து தாழ்ந்த என்ற குறிப்புக் காண்க. "தாளினைமுன்சேர விரைவினாற் சென்று வீழ்ந்தார்" (3517).