| பின்மை தெரிந்தமையால் பேயனேன் என்றார்; இருந்தது - என் ஆவி - எழுவாய் பின் வந்தது இழிவு மிகுதிக்கண் வந்த விரைவுக் குறிப்பு. உயிர் மாயாது தாழ்த்திருந்த தாமத நிலை குறிப்பார் கேட்ட என்றொழியாது செவியாற் கேட்பதாயின என்று நீட்டித்தார். "கண்டு இங்குநின் றங்குவந் தத்துணையும் பகர்ந்த" என்ற திருக்கோவையாரின் குறிப்புப் போல. கேட்பது - கேட்பதென்பது. |
| ஆயினபின்னும் - நேர்ந்த பிறகும்; செவியால் என்பது வேண்டாது கூறலாகிய விதப்பு மொழி; இச்செவி இக் கொடுமொழியைக் கேட்க என்ன தீவினை செய்ததோ என்ற குறிப்புப்பட நின்றது; "விதப்புக் கிளவி வேண்டியது விளைக்கும்"; "வழுக்கியும் வாயாற் சொலல்" என்றார்போல; இருந்தது - இருந்ததே என்க; என்பார் - என்று வருந்திக் கூறுவாராகி. |
| 384 |
| 3539. (வி-ரை) ஏவ - ஏவியதனாலே. |
| காரிகை.....காதலால் - பெண்ணிடத்துச் சாரு மாசையால் என இழிவுக்குறிப்பும், ஒருவன் என இகழ்ச்சிக்குறிப்பும் படக் கூறியதாம். காதலால் ஏவ - பெண்ணிடம் சாரும் ஆசையால் மயங்கி விதி விலக்குக் கடந்து ஏவ என்பதாம். |
| நோவ நடந்து - செல்வதும் - வருவதும் ஆகி - என்க; அருமைபட இரங்கிக் கூறியதாம். பாத தாமரை - தாமரை போன்ற பாதம்; தாமரை மலருக்காயிற்று. |
| தேரணி வீதியூடு - தேரிலும் ஏனைய அயிராவணம், இடபம் முதலிய ஊர்திகளிலும் ஊர்ந்து செல்வதன்றி இறைவரை நிலமுற நடந்து செல்லக் கண்டறியாத வீதியில் என்பது குறிப்பு. தேரோடுகின்ற அழகிய திருவீதி; "ஆழித்தேர் வித்தகன்" (தேவா). |
| ஒருவர் ஓர் இரவெல்லாம் உழல்வராம் - என்க; ஒருவர் ஒப்பற்றவர் என்ற அருமைப்பாடு; முன் ஒருவன் என்றும், இங்கு ஒருவர் என்றும் கூறும் வேற்றுமை கண்டு கொள்க. |
| உழல்வராம் - ஒருவன் ஏவ - ஒருவர் நடந்து - இரவெல்லாம் உழல்வாராம்; இதுவும் செய்யத் தகுந்ததொரு காரியமாமோ! என்று செற்றமும் பரிவும் பற்றி அச்செயலைப் பன்னிப் பன்னிக் கூறியது. |
| ஓர் இரவெல்லாம் - என்றது கால நீட்டிப்பையும், வீதியூடு - என்றது இடநீட்டிப்பையும், பாத தாமரை நோவ நடந்து - என்றது முயற்சி நீட்டிப்பையும், செல்வது வருவதாகித் தூதுக்கு உழல்வதாம் - என்றது செயல் நீட்டிப்பையும் செயலின் தாழ்வு நீட்டிப்பையும் குறிப்பாலுணர்த்தின. |
| 384 |
| 3540. (வி-ரை) அடிமை ஆற்றாராகியே - தாம்அடிமை நெறியினில்நின்று ஒழுகிக் காட்டுபவராகியே; ஆறு - நெறி என்றலுமாம். அடிமையற்றாராகியே - என்பது பாடமாயின் தாழ்வாகிய இச்சிறு வேலையைத் தானும் ஏவிச் செய்விப்பதற்குரிய அடிமைகள் ஒருவரும் தமக்கு இல்லாது தாமே போந்தாரானாலும் என்றுரைக்க. நம்பர் தமக்கு அடிமை செய்வாராக வேறு அடிமையற்றுப் போய்த்தாம் இவ்வாறு இகழ்வு செய்தேனும் இவ்வடியவனைப் பெறவேண்டு நிலையினில் வந்தாராயினும் என்றலுமாம்; ஆறு - வழி. |
| இசைந்தால் - பெரும் கருணையினால் இசைந்தாலும் என்க. சிறப்பும்மை தொக்கது. |
| ஏவப் பெறுவதே? - ஏகாரம் வினா; ஏவப் பெறுவது தக்கதன்று என எதிர்மறைப் பொருள் தந்தது. ஏவப்பெறுதல் - ஒரு சொல். |
| இதனுக்கு....எந்தாள் - இப்பெரும் பிழையைச் செய்ய மன நடுங்காதவனைக் காணுவதும் ஒருநாளோ? |