[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்45

பண் தங்கு இசை - பண் - பதிகப்பண்ணாகிய கொல்லிப்பண்; இசை பண் தங்குதலாவது - பண்ணோடு இசை பொருந்தி நிகழ்ந்த மாறுகொள்ளாதிருத்தல்.
வாழ்த்து மதுர - என்பதும் பாடம்.

51

திருப்புகலூர்
திருச்சிற்றம்பலம் பண் - கொல்லி - 7-ம் திருமுறை
தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினுஞ் சார்வி னுந்தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடா தேயெந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மை யேதருஞ் சோறுங் கூறையு மேத்த லாமிடர் கெடலுமாம்
அம்மை யேசிவ லோக மாள்வதற் கியாது மையுற வில்லையே.

(1)

செறுவி னிற்செழுங் கமல மோங்குதென் புகலூர் மேவிய செல்வனை
நறவப் பூம்பொழி னாவ லூரன் வனப்ப கையப்பன் சடையன்றன்
சிறுவன் வன்றொண்ட னூரன் பாடிய பாடல் பத்திவை வல்லவர்
அறவ னாரடி சென்று சேர்வதற் கியாது மையுற வில்லையே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு : - புலவீர்! உலகில் பொய்ம்மையாளரைப் பாடாதே எந்தை புகலூரைப் பாடுமின்; இம்மையே சோறுங் கூறையும் தரும்; இடர்கெடும்; அம்மையே சிவலோகமாள்வதற்கியாது மையுறவில்லையே என்று இறைவர் தமக்குச் செங்கல் செம்பொன்னாக்கித் தந்தருளியதனைப் பாராட்டும் முகத்தால் உலகரை வழிப்படுத்தியது.
பதிகப்பாட்டுக் குறிப்பு:- (1) தம்மையே - பாடப்படுகின்ற அவர்களையே; இச்சைபேசுதல் - தம் கருத்து எதுவாயினும் அவர் இச்சை வழியே பேசுதல்; கூறை - துணி; சோறுங் கூறையும் என்ற இரண்டும் இம்மை வாழ்வுக் கின்றியமையாதன என்பது;-(2) மிடுக்கு - ஆண்மை - விறல். வில்லுக்கு விசயன் - என்க. இது பழமொழியாய் வில் திறத்துக்கு எடுத்துக்காட்டாகப் பேசப்படுவது; பாரி - கடையெழு வள்ளல்களுள் ஒருவர்; "பாரி வேள்பாற் பாடினை செலினே" (புறம். 105) "வண்புகழ் பாரிகாரி யென்றிசை வாது கூறி" (திருப்புகழ்), அடுக்கு மேல் - அவ்வாறு பாடுதல் கூடுமாயின்; அதன் அருமை தோன்றக் கூறியது. பொடி - திருநீறு - (3) காணியேல் - விளை நிலங்களாயின்; காணியேல்...ஓம்புமே என்று - நிலமுடைமை, கல்வி, சுற்றமும் விருந்தும் ஓம்புதல் என்ற தன்மைகளிலராயினும் என்பது இசையெச்சம்; ஏனைப் பாட்டுக்களின் கருத்துப்போல; பூணி - எருது; ஆணி - ஆதரவு:-(4) நரைகள் - பல அங்கங்களிலும் நரைத் தன்மை; மெய்தளர்தல் - திரைத் தன்மை; மூத்து - மூப்புத் தன்மை; உடல் நடுங்கி - பிணித் தன்மை; அரையன் - அரசன்; தலைவன்:-(5) சழக்கன் - கொடியவன்; வழக்கு - நல்வழக்கு; பஞ்ச துட்டன் - பொய், கொலையாதி ஐம்பொரும் பாதகங்களும் செய்தோன்; சாது - நல்லவன்; பொன் செய் - செய் - உவம உருபு; உஞ்சு - உய்ந்து. மரூஉ;-(6) புலம் - விளை நிலம்; வெறி - மலர் தேன் முதலியவற்றின் மணம்; அலமருதல் - வருந்துதல்;-(7) நொய்யை - கீழ்மை; கண்குழிதல் - பசி - வறுமை முதலியவற்றால் கண் குழிப்படைதல்; ஆயம் - வருத்தம்;- (8) எள் விழுந்திடம் பார்த்தல் - ஈக்குமீகிலாத்தன்மை - உலோபம்; கூட்டத்தில் எள் விழுந்தாலும் அதையும் பிறர் கொள்ளவிடாது தேடும் தன்மை; ஈக்கும் கொடாத தன்மை.