| பின்பு திருப்புன்கூர் பணிந்து திருக்கோலக்காவினை அணைய இறைவர் எதிர் காட்சி கொடுத்தருளக் கண்டு வணங்கித் திருப்பதிகத்தாற் போற்றித் திருஞான சம்பந்தருக்குத் திருத்தாளம் அளித்த கருணையைச் சிறப்பித்துப் பாடியருளினர். |
| குருகாவூர் பொதிசோறு |
| அங்கு நின்று திருக்குருகாவூருக்குச் சென்ற போது நம்பிகள் உண்ணீரின் வேட்கையுடனே பசியினாலும் மிக வருந்தி வரும் இடத்தில் இறைவர் தண்ணீரும் பொதிசோறும் கொண்டு மறைவேதியராய் வேடங்கொண்டு அவ்வழியிலே சார்ந்து குளிர்ந்த பந்தரும் அமைத்து வன்றொண்டரது வரவு பார்த்திருந்தார். நம்பிகள் தொண்டருடனே அந்தப் பந்தரிடைப் புகுந்து அம்மறையவர்பால் பெருகிய ஆர்வத்துடன் "சிவாயநம" எனப் பேசி அணுகி யிருந்தனர். இறைவர் நம்பிகளை நோக்கி "நீர் மிகவும் பசித்திருந்தீர். இப்பொதிசோறு தருகின்றேன். தாழாது கைக்கொண்டு உண்டு தண்ணீர் குடித்து இளைப்புத் தீரும்" என்று கூற, அதனை மறுக்கலாகாது என்று இசைந்தருளி ஏற்றுத் தொண்டருடன் நம்பிகள் சோறருந்தித் தண்ணீருங் குடித்து இளைப்புத் தீர்ந்தனர். நம்பிகளுடன் வந்தார்களுமேயன்றி அம்மருங்குப் பசித்து அணைந்தார்களும் அருந்தும்படி வேதியர் தரும் பொதிசோறு வளர்ந்து பொலிந்தது. அதன்பின் நம்பிகள் இறைவர் நாமத்தைப் புகழ்ந்து ஏத்தி அங்குச் சிறிது பள்ளி யமர்ந்தனர். அருகணைந்தார்களும் துயின்றனர்; அப்போது இறைவர் அப்பந்தருடன் தாமும் மறைந்தருளினர்; நம்பிகள் உணர்ந்து எழுந்து அவரைக் காணாமையால் இஃது இறைவர் செயலே யென்று கண்டு மிக்க ஆர்வத்துடன் "இத்தனை யாமாற்றை யறிந்திலேன்" என்று தொடங்கித் திருப்பதிகம் பாடித் திருக்கோயிலிற் சென்று வணங்கிப் பருகா இன்னமுதத்தைக் கண்களாற் பருகிப் பாடி ஆனந்தத்தில் திளைத்து அங்குத் தங்கியருளினர். அதன்பின் திருத்தில்லை சென்று வணங்கித், திருத்தினை நகரும் திருநாவலூரும் சென்று வணங்கிப், பிறபதிகளையும் வணங்கச் செல்வாராயினர். |
| தொண்டை நாடு திருக்கச்சூருக்கு |
| திருத்தொண்டை நன்னாட்டிற் பலபதிகளையும் கும்பிட எண்ணிச் சென்று திருக்கழுக்குன்றத்தினை வழிபட்டுத் திருக்கச்சூருக்கு எழுந்தருளி வணங்கி அங்குத் திருக்கோயிற் புறத்து அணைந்தனர். அப்போது அமுதுசெய்யும் பொழுது ஆயிற்று; அமுது சமைத்தளிக்கும் பரிசனங்கள் வந்து சேராமையால் பசி வருத்தத்துடன் நம்பிகள் திருவாயில் மதிற் புறத்திருந்தனர். அப்பொழுது மலைமேன் மருந்தாகிய இறைவர் ஓர் அந்தணராக வேடந்தாங்கிக் கையில் ஓடேந்திக் கொண்டுவந்து அருள்கூர அவரது முகநோக்கி, "நீர் மிகப் பசித்திருந்தீர்; உமது பசிதீர இப்போதே சோறு இரந்து பெற்று உமக்குக் கொண்டு வருகிறேன்; இங்குவிட்டு நீங்காதே சிறிது பொழுது அமரும்" என்று சொல்லிச் சென்று திருக்கச்சூர்ச் செல்வ மனைகடோறும் புக்குப் பாத தாமரைகள் நிலம் பொருந்தவும், கண்டவர்கள் மனமுருகவும் கடும்பகலி லிடும்பலிக்குச்சென்று சோறு இரந்துகொண்டு தாம் விரும்பி யாட்கொண்டவர்முன் கொண்டு வந்தருளிப் "பசிதீர உண்க" என அளித்தனர். நம்பிகளும் அவரது பேரருளின் றிறத்தினைப் பாராட்டித் தொழுது வாங்கிப் பக்கத்தில் அணைந்த திருத்தொண்டர்களுடனே அத்திருவமுதினை உண்டு மகிழ்ந்திருப்ப, அவர் தம்மை யறியாதே இறைவர் மறைந்தெழுந்தருளினர். அது கண்டு நம்பிகள் வந்த மறையவனார் இறையவனார் தாமேயாம் என்று மதித்துக் கண்ணீர் சோரப் பதைத்து மன மிக உருகி "முதுவாயோரி" என்று பதிகம் பாடி மகிழ்ந்து வணங்கினார். பின்னர் அங்கு நின்று புறப்பட்டுப் பல பதிகளையும் வணங்கித் திருக் |