[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும் | 451 |
| இசைவி னாலே திருக்கோயிற் புறத்திற் பக்கத்திலே கன்னிமாடம் அமைத்துச், சேடியர்களையும் பரிசனங்களையும் மற்றும் ஏவற் பரிசனங்களையும் தக்க செல்வமும் வகுத்துக் காவலும் அமைத்து, அதில் அம்மையாரை இருத்தித் தந்தையார் அவரை அடிவணங்கி"யாங்கள் உமக்குப் பணி செய்ய நீர்இறைவருக்கு ஏற்ற பணிசெய்து இப்பெரிய கன்னிமாடத்தில் உறைகின்றீர்"என்ற தாங்குதற்கரிய கண்ணீர் பொழியத் தரியாது வணங்கித் தமது பதியிற் சென்றனர். அம்மையார் காலந்தோறும் சென்று இறைவரைப் பணிந்து திருப்பூமண்டபத்துள் திரைசூழ்ந்த ஒரு பக்கத்திருந்து அவ்வக்காலங்களுக் கேற்றபடி முன்னைநிலையிற் றிருக்கயிலையிற் றாம் செய்து வந்தவாறே இறைவர்க்கு ஏற்ற பூமாலைகளைத் தொடுத்துக்கொடுத்து அமர்வாராயினர். | | நம்பிகள் | | இந்நான்களில் ஒருநாள் இவரது மணம் நிகழும் பருவமாதலினால் முந்தை விதியின்படி நம்பிகள் இறைவரை வணங்கத் திருக்கோயிலுட் புகுந்து பணிந்து துதித்துப், புறம்போந்து அங்கு அடியார்கள் செய்யும் திருப்பணிவிடைகளைக் கண்டு தொழுது செல்கின்றவர் திருப்பூமண்டபத்தினுட் புகுந்தார். அங்கு, அன்பே நாராகக் கொண்டு திருவைத்தெழுத்தினையும் நெஞ்சம் தொடுக்கக் கைகளால் மலர் தொடுத்து என்பும் உள்ளுருகப் பணிசெய்யும் அடியார்களைத் தொழுத சென்று, வேறோரிடத்தில்முன்பு போல், திரைநீக்கி இறைவர் சாத்தும் திருமாலையினைக் கொடுத்து மின்போல மறைந்த சங்கிலியாரை விதியினாலே கண்ணுற்றார், கோவைபடாத முத்தும் வண்டுகள் உண்ணாத கொழுமையுடைய மெல்லிய அரும்பினையும் போன்ற சங்கிலியாரைக் கண்டபோது நம்பிகளது சிந்தை நிறைகாவாது அவர்பாற் போய் வீழ்ந்தது. காமனது பூவாளிகள் வந்து வீழ்ந்தன. நம்பிகள் புறம்போந்து அங்கு உள்ளாரை நோக்கி "இங்குத் திரையினுள்ளே பொன்னும் மணியும் விளங்கும் புதிய ஒளியுடன் அமுதுடன் கலந்த சந்திரனுடைய நீர்மையாலே சமைத்த மின்கொடி போல்வாள் என்னை உள்ளம் திரிவித்தாள்; அவர் யார்கொல்!" என்ன. அவர்கள் "அவர்தாம் நங்கை சங்கிலியார்; பெரிய தவத்துடனே இறைவரது பணியினைப் பேணும் கன்னியாராகும்" என்றார். அப்போது நம்பிகள்"இறைவர் இருவரால் இப்பிறவியில் என்னை அடைய வகுத்தருளினர்; அவருள் பரவையார் ஒருத்தி; இவள் மற்றையவளாகும்" என மருண்டு, "இறைவரிடம்போய் விண்ணப்பித்து இவளைப் பெறுவேன்" என்று உட்சென்று அவ்வாறே விண்ணப்பித்துப் புறத்துவந்து, ஒருபக்கம் இருந்து நினைந்து நினைந்து வருந்த, இறைவர் போந்து "பெருந்தவத்துச் சங்கிலியை உனக்குத் தருகின்றோன்; கவலை ஒழிக" என்றருளிச் செய்தனர். நம்பிகள் மகிழ்ந்தனர். இறைவர் சங்கிலியார்பால் கனவில் எழுந்தருளச், சங்கிலியார் அன்பு பொங்க வணங்கி நின்றனர்; அவரை நோக்கி, மேருமலையின் மேம்பட்ட தவத்தை யுடையானும், நாமே வலிய ஆட்கொள்ள உரியவனும், நம்பாற் பேரன்புடையவனும் ஆகிய வன்றொ ண்டன் உன்னைத்தரும்படி என்னை இரந்தான்.அவனை நீ மணத்தினால் மகிழ்ந்து அணைவாய்" என்றருளிச் செய்தனர். சங்கிலியார் வணங்கி எழுந்து நின்று, "இறைவரே! தேவரீர் அருளிச் செய்த ஒருவர்க்கு யான் உரியேன்தான். ஆனால் என்னை மணத்தால் அவருக்குக் கொடுத்தருளும்பொழுது அவர்தாம் திருவாரூரில் மகிழ்ந்துறைவராவர் என்பதனை அறிந்து அதற்குத் தக்கவாறு அருள்புரிய வேண்டும்" என்று விண்ணப்பித்தார். இறைவர் "அவன் உன்னைவிட்டு நீங்கிப் போகா திருக்க ஒரு சபதம் செய்வான்" என்று கூறி, அங்கு நின்று நீங்கி வன்றொண்டர்பால் எழுந்தருளி, "நீ |
|
|
|
|