[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்459

  தருளினர். திருக்கச்சூராலக் கோயிலினும் அவ்வாறே நகரினுட் சென்று சோறிரந்து கொண்டுவந்து ஊட்டியருளினர். எல்லா உயிர்களினுள்ளும் நிறைந்திருந்து அவ்வவர் கன்மத்துக் கேற்றவாறு இன்பதுன்பங்களை அறிந்து ஊட்டுபவர் சிவபெருமானே யன்றோ?
  18. இறைவர், தாம் உலகர் கண்காண வெளிப்பட உருவங்காட்டி அருட்செயல் செய்யும்போது அவரை அன்னரென்று அறியமாட்டாது வைத்தலும், மறைந்தபோது அறிய வைத்தலும் அவரது வல்லமையாம். நம்பிகளுக்குத் திருவதிகைச் சித்தவட மடத்தில் திருவடி சூட்டிய நிலை, குருகாவூரிலும் கச்சூராலக் கோயிலிலும் சோறுதந்த நிலைகள், கூடலையாற்றூரில் கூட வழிபோந்த நிலை முதலியவை காண்க; இவை தேவார அகச்சான்றுகளால் விளங்க நிற்பனவும் காண்க.
  19. திருக்குருகாவூரில் இறைவர் நம்பிகளுக்குத் தாமே பொதிசோறுந் தண்ணீருங் கொண்டுவந்து கொடுத்தருளினர்; திருக்கச்சூராலக் கோயிலில் அந்நகரின் செல்வ மனைதோறும் சென்று சோறு இரந்து கொணர்ந்தளித்தனர் இவ்வேறுபாடு என்னை எனின்? இதனால் திருக்கச்சூர் வாழ்வார்களை ஈடேற்றும் பொருட்டுப் போலும் என்க. இறைவரது திருவிளையாட்டும் அருளும் வண்ணங்களுமாம்.
  20. திருக்கயிலையினின்றும் போந்து முன்னை யுணர்வுடன் வந்து பிறந்து வளர்ந்தனர் சங்கிலியார். இவ்வாறு முன்னுணர்வுடன் வந்து பிறப்பது தவவலிமையாலும் திருவருளாலும் சிலர்க்கே கிடைப்பதாம். கோச்செங்கட் சோழனார் சரிதமும், பிறவும் பார்க்க. (3362-3367-3377)
  21. பெண்கள் பெற்றோர் உற்றார்களி னீங்கிச் சிவபெருமானது பற்றே பற்றாகக் கொண்டு கன்னிமாடத்தில் தங்கி உலகத் தொடர்பின்றிச் சிவன் பணியே செய்திருந்து, பின் திருவருள் பணித்தவழி மணம் செய்து கொள்ளும் வழக்கு முன்னாளில் உண்டு. (3374-3375); அவ்வாறு தவஞ்செய்யும் கன்னியரின் மணம் இறைவன் காட்டியருளியபடி தொண்டர்களால் முடிக்கப்படும்.
  22. சிவனறிய உரைத்த சபதம் பிழைக்கின் யாவரேயாயினும் அதற்குரிய படி தண்டம் செய்யப்பெறுவர் என்பதனை உலகுக்குக் காட்டி உய்விப்பதற்கு நிகழ்ந்தது நம்பிகளது திருவொற்றியூர் நிகழ்ச்சியாம்.
  23. கண்ணைக் கெடுத்த தெய்வம் கோலைக்கொடுக்கும் என்ற பழமொழி திருவொற்றியூரில் கண்ணிழந்த நம்பிகளுக்குத் திருவெண்பாக்கத்தில் ஊன்று கோல் அருளியதன் வழிவந்தது போலும்.
  24. காஞ்சிநகரில்இறைவர் இடக்கண் கொடுத்தருளியபோது "கம்பனெம் மானைக் காணக் கண்ணடியேன் பெற்றவாறே" என்று திருவருளைப் பாராட்டிப் போற்றித் திளைத்தனர் நம்பிகள். கண்பெற்ற பேறு இறைவனைக் காண்பதற்கே என்ற உண்மையினையும் வற்புறுத்தி யருளினர். ஆனால் திருவாரூரிற் புக்கபோது, அவனைக் காண்பதற்கு வாழ்ந்த மலர்க்கண் ணொன்றாலாறக் கண்டின்புறார், மற்றொரு கண்ணையும் வேண்டிப் பெற்று இரண்டு கண்ணாலும் புற்றிடங்கொண்ட பெருமானருளை ஆரப் பருகித் திளைத்தனர். இஃது அன்புமிக்க காதலின் விளைவாகும். (3465)
  25. கற்புடை நாயகியார்க்குத் தமது நாயகர் வேறொரு பெண்ணை மணந்தார் எனக் கேட்டபோது தரியாது புலவி மூள்வது இயல்பு. (3469)
  26. தம்மையன்றி வேறு பற்றுக்கோடில்லாத அடியார்க்கு வரும் எத்தகைய வருத்தத்தையும் தீர்த்தல் ஆண்டவன் கடன். (3483)