| யனது உடம்பின் தன்மையினின்றும் தமது உயிரின் தன்மை வேறாக என்ற பொருள் குறித்தது. திருமூலராய்" (3577) என்பது விரிநூல்; ஆகின்ற - நிகழ்காலம் அவ்வாறே இன்றும் என்று மிருக்கும் நிலை குறித்தது. "முந்நிலைக் காலமுந் தோன்று மியற்கை, யெம்முறைச் சொல்லு நிகழுங் காலத்து, மெய்ந்நிலைப் பொதுச்சொற்கிளத்தல் வேண்டும்" (தொல் - சொல் - வினை - 43); அங்கணனே - அங்கண்மை யாவது வரைவின்றி எல்லா உயிர்களின் மேலும் செல்லும் அருளுடைமை; "அறனறிந்தொழுகு மங்கணாளனை" (கலித் - 144 - 70 ); துன்பமுற்ற பசுக்களைக் கண்டு "ஆவுற்ற துயரிவை நீங்க ஒழிப்பன்" (3575) என்று கொண்ட கருணையினாற் செயல்செய்த சரித நிகழ்ச்சிக் குறிப்பு; ஏகாரம் - தேற்றம். |
| பெயரும் பண்பும் தொகை நூலாகிய முதனூல் பேசிற்று; ஊரும் பேரும் பண்பும் சரிதவரலாறும் பிறவும் வகை நூலாகிய வழிநூல் பேசிற்று; இவை விரிந்தபடி விரிநூலுட் கண்டு கொள்க. |
| 3564. (இ-ள்) அந்தி....கயிலையினில் - மாலையிற்றோன்றும் இளம் பிறையாகிய கண்ணிமாலையினைச் சூடிய சிவபெருமானது திருக்கயிலை மலையிலே முந்தை நிகழ்....நாயகமாகி - பழமையாக உள்ள திருக்கோயிலுக்கு முதற்பெருங் காவலராகிய முதன்மை பெற்று, இந்திரன்....நந்தி இந்திரன், விட்டுணு, பிரமன் முதலாகிய தேவர்களுக்கு நெறியினை அருளிச் செய்யும் பணி பூண்ட நந்தி பெருமானுடைய; திருவருள்....ஒருவர் - திருவரு ளுபதேசத்தினைப் பெற்ற நான்மறைச் சிவயோகிகளாகிய ஒரு பெரியவர். |
| 1 |
| 3565. (இ-ள்) மற்றவர்தாம்....பெற்றுடையார் - அவர் தாம் மற்றும் அணிமா முதலாகிய அரிய எண்வகைச் சித்திகளையும் கைவரப் பெற்றுடையவர்; கொற்றவனார்....கேண்மையினால் - இறைவரது திருக்கயிலைமலையினின்றும் குறு முனி எனப்படும் அகத்திய முனிவரிடத்துப் பொருந்தியதொரு கேண்மையாகிய தொடர்பினாலே; உடன்....வழிக்கொண்டார் - அவரோடு உடனாகச் சில நாள் தங்கியிருத்தலைக் கருதி அதன்பொருட்டு அவரிருப்பிடமாகிய நற்றமிழ்ப் பொருத்தமுடைய இனிய பொதிய மலையினைச் சேர்வதற்காக வழிக்கொண்டு செல்வாராயினர். |
| 2 |
| இந்த இரண்டுபாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
| 3464. (வி-ரை) அந்தி....அண்ணலார் - "கூனற்பிறையாளன்" (திருவந்தாதி) என்ற வழிநூற்பொருளை விரித்தவாறு. |
| பிறைக்கண்ணி - அருளுடைமைக் குறிப்பும், ஞான ஒளிவளரச் செய்யும் குறிப்பும் தருவது; இறைவர் திருமுடியாகிய உயர்ந்த இடத்திலிருத்தலால் கலங்கரை விளக்கம் போல நெடுந்தூரத் திருப்பவர்களையும் இடமும் இயல்பும் காட்டி அழைக்கும் தன்மை குறித்தபடியுமாம். 252 - 253 பார்க்க. |
| பிறை - அண்ணலார் - கயிலை - கயிலை மிக உயர்ந்த மலை; அண்ணலார் அதன் மேல் உயர்ந்து நிற்பவர்; பிறை அவரது நீண்ட திருமுடியின் மேலது என்ற குறிப்புக்களும் காண்க. உலகுக்கு மிக உயர்ந்த ஞான ஒளிபரப்பி நெறி காட்ட வந்தவரது புராணமாதலின் இத் தன்மையாற் கூறியபடி. |
| முந்தை நிகழ் கோயில் - நீண்ட காலத்துப் பழங்கோயில்; முதன்மை பெற்ற கோயில் என்றலுமாம். நிகழ்கோயில் - எக்காலத்தும் அழியாதிருக்கும் கோயில் என்று முக்காலத்துக்கும் பொதுவாகிய நிகழ்கால வினைத்தொகையாற் கூறினார்; நொடித்தான்மலை ஊழியிலும் அழியாதது என்ற பொருட்குறிப்பு. |