[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 30. திருமூலதேவ நாயனார் புராணமும் உரையும்469

  ஆடு திருஅரங்கு - இறைவர் அருட்கூத்தாடும் ஐம்பெரு மன்றங்களுள் ஒன்றாகிய; திருவாலங்காடு - இரத்தின சபை; சிதம்பரம் - பொற்சபை; மதுரை - வெள்ளிச் சபை; திருநெல்வேலி - தாமிர சபை; குற்றாலம் - சித்திரசபை என்பன இவ்வைந்து சபைகள்.
  ஆலவனம் - திருவாலங்காடு; காரைக்காலம்மையார் இறைவரது எடுத்த திருவடிக்கீழ் என்றுமிருக்கும் பெருமையுடைய பதி.
  திரு ஏகாம்பரம் - காஞ்சிபுரத்தில் இறைவர் எழுந்தருளிய திருவாலயம்; ஆம்பரம் - மாமரம்; ஏக ஆம்பரம்; ஒரு (ஒப்பற்ற) - வேதவடிவான - மாமரம்; இதனடியில் அம்மை பூசிக்க இறைவர் எழுந்தருளி யுள்ளார்; "மர வமர்ந்தநம் மிருக்கை"(1130); ஏகாம்பரம் என்பது வேறு; ஏகம்பம் என்பது வேறு. மாடு - பக்கம் என்றலுமாம்.
  காளத்தி - திருவாலங்காடு - திருவேகாம்பரம் இவற்றின் தலவிசேடங்களைப் பற்றி அவ்வவற்றின் பதிகங்களின் கீழ்ப்பார்க்க.
 

5

3569
ற்பதியங் கமர்யோக முனிவர்களை நயந்துபோய்க்
கற்புரிசைத் திருவதிகை கலந்திறைஞ்சிக் கறைக்கண்டர்
அற்புதக்கூத் தாடுகின்ற வம்பலஞ்சூழ் திருவீதிப்
பொற்பதியாம் பெரும்பற்றப் புலியூரில் வந்தணைந்தார்.
 

6

  (இ-ள்) நற்பதி....போய் - நல்ல பதியாகிய அந்தக் காஞ்சியிலே விரும்பித் தங்கியுள்ள சிவயோகியர்களாகிய முனிவர்களை விரும்பி அன்புடன் கலந்திருந்து சென்று; கற்புரிசை....இறைஞ்சி - கல்மதில் சூழ்ந்த திருவதிகை வீரட்டானத்தில் கூடி வணங்கி; கறைக்கண்டர் ....அணைந்தார் - திருநீலகண்டத்தினை உடைய இறைவர் அற்புதமாகிய அருட் பெருந் திருக்கூத்தினை ஆடுதற்கிடமாகும் திருவம்பலத்தினைச் சூழ்ந்த திருவீதியினை உடைய பொற்பதியாகிய பெரும்பற்றப் புலியூரில் வந்து அணைந்தனர்.
  (வி-ரை) நற்பதி - உயிர்களுக்குச் சிவபூசனையை விளங்கச்செய்து காட்டி உய்விக்கும் கருணைச் செயலினையும், எல்லா அறங்களையும் அம்மையார் செய்தற்கிடமாகிய பதி.
  அமர்யோக முனிவர்கள் - சிவயோகத்தில் உறைப்புக்கொண்ட சிந்தையினை யுடைய முனிவர்கள். இவர்களைப் பற்றி முன்னர்ச் "சத்தி தற்பர சித்த யோகிகளுஞ் சாத கத்தனித் தலைவரு முதலா, நித்த மெய்திய வாயுண்மெய்த் தவர்கணீடு வாழ்திருப் பாடியு மனேகம்" (1159) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. அமர்தல் - விரும்புதல்; வீற்றிருத்தல்.
  யோக முனிவர்களை நயந்து - நயத்தலாவது விரும்பி உடனமர்தல்; இவரும் சிவயோகிய ராதலானும், கேண்மையினாற் குறுமுனிபாற் செல்கின்றா ராதலானும் இங்குத் தன் ஒப்புடைய, அவரொப்புடைய, யோகமுனிவர்களை நயந்திருந்தனர் என்பதாம். இவ்வியோகிய ரியல்பு பற்றிக் "காமனை முனிந்து நெடுஞ்சடை முடித்துக் கவின்றகல் லாடைமேற் புனைந்தி, யாமெலாம் வழுத்துந் துறவியென் றிருந்து மொருத்திதனிளமுலைச் சுவடு, தோமுறக் கொண்டா ரெனச்சிறை யிடல்போற் சுடர் மனக் குகையுளே கம்பத், தோமொழிப் பொருளை யடக்கியா னந்த முறுநர்வா ழிடம்பல வுளவால்" என்ற காஞ்சிப் புராணக் (திருநகர்ப் படலம் - 109) கருத்தும் காண்க.