[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 30. திருமூலதேவ நாயனார் புராணமும் உரையும்477

  கருதாததோ ருணர்வினை மனங்கொளச் செய்தது திருவருள் என்றபடி; திருவருட் குறிப்பு உலகில் பசுக்களாகிய உயிர்கள் பிறவிவிடந்தீர்ந் துய்யும்வழி காட்டுதலாம் என்பது "ஊனுடம்பிற் பிறவிவிடந் தீர்ந்துலகத் தோருய்ய" (3589) எனப் பின்னர்க் காட்டுதலாலுணர்க. ஈண்டு யோகியர் பசுக்களின்மேல் வைத்துத் துயர்நீங்க ஒழிப்பேன் என்றெழுந்த கருத்து, அப்பசுக்களை முன்னிலையாகக் கொண்டு உலகுயிர்களாகிய, பசுக்கள் என்று ஞானநூல்கள் பேசும், உயிர்களைத் துன்பநீங்கி இன்பமடையச் செய்வதற்கு யோகியர்மூலம் இறைவர் கொண்ட திருவருட்கிடையாகிய திருவுள்ளமேயாம் என்பார் நம்பருளாலே - உணர்கின்றார் என்றார்; இங்குப் பசுக்கள் தம்மைப்பேணும் தலைவனை யிழந்து துயருற்று அவனைப் பெற வேண்டி நின்ற நிலைபோல, இவ்வுலகில் பக்குவமுடைய உயிர்கள் "கதிப்பாற் செல்ல ஏது நெறி" என்றும், "தலைவனை நனிகாணேன்" என்றும் அவனைப் பெற்று அடையும் வழிதேடித் துன்பமுறும் உயிர்களுக்கு ஞானோபதேசம் செய்யும் திருமந்திரம் யோகியர் மூலம் பெறவைத்தல் இறைவரது திருவுள்ளக் கருத்தாதல் காண்க (3586).
  நம்பரருளாலே - ஒழிப்பன் - என்று கூட்டியுரைப்பது மொன்று.
  உணர்கின்றார் - என்று - பாய்த்தினார் என மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க.
  நற்றவம் - வரைவின்றி எல்லாவுயிர்களின் மாட்டும் செல்லும் பேரருளுடைமை குறிக்க நற்றவமென்றார்.
  மொய்ப்பன - அது நீங்கி - என்பனவும் பாடங்கள்.
 

12

  3676. (வி-ரை) "இவன்....நீங்கா" என்று - பசுக்களின் துயர் நீங்குதல் வேண்டுமாயின் அதற்கு இதுவே உபாயம் என்று யோகியார் துணிந்த மனக்கருத்து. இடையனை உயிர்ப்பிப்பது அவனை இன்னும் சின்னாள் வாழவைக்க வேண்டும் என்ற கருத்தாலன்று; பசுக்களின் துன்பநீங்குதற்கு அதுவே வழி என்றதாம்.
  எழில் அன்றி - இடர் நீங்கா - எதிர்மறையாற் கூறியது வேறு உபாயமில்லை என்ற துணிபை வற்புறுத்தி உறுதி கூறுதற்கு.
  அவனுடலில் தம்முயிரை அடைவிக்க - இடையன் உயிர்பெற் றெழுவதற்கு அவனுயிரையே மீள வரச்செய்வது ஓர் உபாயம். ஆனால் அவன்பொருட்டு யோகியார் அவனை உயிர்பெற் றெழச்செய்தல் வேண்டினாரலர்; ஆக்கள் இடர்நீங்கச் செய்தலே கருதினார்; அன்றியும் வினைமாள ஆயுள் தீர்ந்த அவனுயிரையே மீட்டும் வரச் செய்தலும் கூடாத காரியம்; வேண்டாத காரியமுமாம். ஆதலின் பசுக்களுக்காகச் சிலபோதுமட்டும் அவனை உயிர்பெற்றெழச் செய்து, பசுக்களைத் துயர்நீக்கி, மனைகளிற் போக்குதலே கருதிய யோகிகள் அதன்பொருட்டுத் தம் உயிரை அவன் உடலிற் அடைவிக்கவே எண்ணினார். பின் நிகழ்ச்சியிலும் அதனையே செய்தனர். இவ்வாற்றால் இறைவரருளும் இதனையே அவர் கருத்தில் எழச் செய்தது.
  அருள் புரியும் தவமுனிவர் - யோகியார்; அருள் புரியும் - பசுக்களின் துயருக்கிரங்கியே எண்ணிச் செயல் செய்தாராதலின் அருள் புரியும் என்றார்; தவம் - எண் சித்தி கைவந்த யோகமும் அருளுமுடைமை. "அளிகூர்ந்த அருளினராய்" (3578).
  தம் உடம்புக்கு அரண் செய்து - இடையனது உடலிற் தம் உயிரைப் புகுத்தி அவ்வுடலோடு ஆக்களைக் கொண்டு அந்தந்த மனைகளிற் செலுத்தி மீண்டும் வந்து தம் உடம்பிற்கு முன்போல மேற்செல்ல எண்ணினாராதலின் அதுவரை தமது உடம்பை அரண்தருகாப்பில் வைத்துக் காவல் செய்தார். அரணாவது நரி, கழுகு, நாய் முதலிய பிராணிகளாலும் மக்களாலும் ஊறு செய்யப்படாது காக்கும் காவல்.