[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 30. திருமூலதேவ நாயனார் புராணமும் உரையும்479

  (வி-ரை) திருமூலரா யெழலும் - அவ்வுடம்பு வீடிக்கிடந்த முன்னை நிலையில் மூலன் என்றும், உயிர்பெற்றெழுந்த இந்நிலையில் திருமூலர் என்றும், உடம்பு ஒன்றே உள்இருந்த உயிரின் வேறுபாடு நோக்கி உயர்வு தாழ்வுடைய இருவேறு பெயர் பெற்றது. உயிரின் அளவே பெருமை என்னும் உண்மையினைத் தேற்றியவாறு. மனவசீகரக் கலைஞானம் கற்ற புலவன் மாணாக்கனது புலன்களைத் தன் வசமாக்கி, அவன் தன்னை மறக்கச் செய்து. வேறு கருத்தினைப் புகட்ட, அதன் வழியே நின்று தன்னை மறந்த நிலையில் அவனது சொற்செயல்கள் நிகழ்தல் இங்குக் காணத்தக்கது. (Mesmerism - Hypnotism)
  பசுக்களெலாம்......மேய்ந்தனவால் - முன்னர்த் (3575) துயரத்தின் மெய்ப் பாடுகளைக் கூறினார்; இங்கு அது நீங்கிய மகிழ்ச்சியின் மெய்ப்பாடுகளையும் செயல்களையும் கூறுகின்றார்; நக்குதல், மோத்தல், கனைப்பொடு நயத்தல்; வாலெடுத்துத் துள்ளுதல், நிரைந்து போய் மேய்தல் இவை களிப்பினாலாவன. சண்டீச நாயனார் புராணம் பார்க்க.
  துயர் நீத்தனவாகி - என்க. விரைவுபற்றிப் பெயரெச்சவினை முன் வைக்கப் பட்டது. "வென்ற வைம்புலன்" (401) நிரந்து போய் -வரிசையாகச் சென்று,
  திருமூலராய் எழலும் - (வினைமாள) விடமுண்ணுதலால் வீடி நஞ்சுத்தன்மை; பெற்ற அவ்வுடம்பே பின்னும் யோகியார் இருத்தற்குத் தகுதிபெற்ற கருவியாக ஆகுமோ? எனின், ஆகும்; முன்னை வினைப்படி வந்த சாவுக்குக் காரணமாகியநோய் அவ்வுயிருடன் ஒழிந்தது; அது, பின்னை அங்குப் புகுந்த வேறு உயிரினைத் தொடர்தற்கு இயைபில்லை என்க. அலகை கோட்பட்டார் செயலும் தன்மையும் எல்லாம் அலகையி னுடையவே யாதல் காண்பதுபோலக் கொள்க. இவ்வுடலினின்றே யோகியார் பல்லாயிரம் ஆண்டு யோகிருந்து திருமந்திரம் அருளவேண்டுமென்பது இறைவரது திருவுள்ளமாதலின், அவ்வருளே அவ்வுடம்பை அதற்கேற்றவாறு ஆக்கியதென்றலும் ஆம். இடையனே அன்று வீடியொழியாம லிருந்தாலும் இவ்வுடம்பு அவனுயிர்க்கு மேலும் சில ஆண்டுகளே கருவியாகும். ஆனால் யோகியார் உயிருக்குப் பல்லாண்டுகள் கருவியாய் அழியாதிருந்தமையின் அஃது அவ்வுயிரின் தன்மையும் அருளின் தன்மையுமாதலும் கருதுக.
 

14

3578
ஆவினிரை மகிழ்வுறக்கண் டளிகூர்ந்த வருளினராய்
மேவியவை மேய்விடத்துப் பின்சென்று மேய்ந்தவைதாங்
காவிரிமுன் றுறைத்தண்ணீர் கலந்துண்டு கரைஏறப்
பூவிரிதண் புறவினிழ லினிதாகப் புறங்காத்தார்.
 

15

  (இ-ள்) ஆவின் நிரை......அருளினராய் -பசுக் கூட்டங்கள். முன் கூறியபடி மகிழ்ச்சி பொருந்தக் கண்ட கருணைமிகுந்த அருள் கொண்டவராகி; மேவி.......பின் சென்று - அவைகள் கூடி மேய்கின்ற இடங்களில் அவற்றின் பின்னே சென்று; அவைதாம்......கரை ஏற - அவைகள் தாம் காவிரியாற்றின் முன் துறையில் தண்ணீர் கலந்து உண்டு கரை ஏற; பூவிரி....புறங்காத்தார் - பூக்கள் விரிதற்கிடமாகிய குளிந்த புறவில் நிழல் உள்ள இடத்தில் இனிதாகத் தங்கவைத்துப் பாது காத்தனர்.
  (வி-ரை) ஆவினிரை........அருளினராய் - பசுக்கள் துன்பநீங்கி யின்பமுறக் காண்பதே விரும்பி முன்கூறியபடி செயல் செய்தாராதலின் தாம் கருதியவாறே அவை மகிழக் கண்டபோது தாமும் மகிழ்ந்து அவற்றின்மேற் றண்ணளி செய்து கருணை பூத்தனர்.