484திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  படமாட்டார். என்று சொல்ல; துயர் எய்தி.....மையலுற - துன்பப்பட்டு அவளும் மயங்க; மருங்குள்ளார் கொண்டகன்றார் - பக்கத்திலிருந்தவர்கள் அவளை அழைத்துக் கொண்டு நீங்கினார்கள்.
 

21

  3582. (வி-ரை) இல்லாளன் - மனைக்கு - இல்லினுக்கு - உடையவன்; தலைவன்; கணவன். முன்,தொடர்ச்சியில்லை யாயினவன் - என்றதும் குறிப்பு.
  இயல்பு வேறானமை - அதுவரை கொண்டிருந்த இல்வாழ்க்கைத் தொடர்பினை மறுத்து மாறுப்பட்டதன்மை.
  இரவெல்லாம் சொல்லாடாதிருந்து - இது மனவருத்தத்தால் விளைந்த தன்மை; சொல்லாடுதல் - பேசுதல். இல்லாளன் - இல்லாள் என்பதன் ஆண்பால்.
  அணையாது துயிலாதாள் - அவர் பக்கத்திற் சென்றிருக்கவு மாட்டாமையில் துயிலப் பெறாதவளாகி.
  பிற்றை நாள் - அந்நாளின் பின்நாளிலே.
  பல்லார் முன் பரிசு உரைப்ப - பல்லார் - அப்பதியிலுள்ள பெரியோர் பலர்; பல்லார் - பலர் என்பதன் விகாரம். பரிசு - தன்மை.
  நல்லார்கள் - அவ்வாறுரைப்பக் கேட்ட பதியவர்களுள்ளே நல்லவர்களா யுள்ளோர்; அறிஞர்கள். நன்மையாவது - பிறரது துன்பங் கண்டு தரியாமையும் இரங்கிப் பணி செய்தலுமாம்.
  திறத்து நாடியே - அவர்பாற் சென்று அவர் திறத்தினை நன்கு ஆராய்ந்து அறிந்து; நாடுதல் - பலவகையாலும் அறிவினால் ஊன்றி ஆராய்தல்; நாடியே - ஏகாரம் தேற்றம். நயந்து - அன்புகொண்டு; நாடியநிலை மேல் உரைக்கப்படும்.
  உரைப்பார் - எனவுரைப்பார் - என்றுரைப்ப - என மேல்வரும் பாட்டுக்களுடன் முடிக்க.
  இவர்க்கடுத்த - என்பதும் பாடம்.
 

19

  3583. (வி-ரை) பித்துற்ற.....உளதன்று - அங்குக் காணப்பட்டது அறிவைப்பற்றிய மாறுதலாதலின் அதற்கு அகமும் புறமுமாகிய இருவகைக் காரணங்கள் உள்ளன; ஒன்று அகத்தே உடம்பினுள்ளே பற்றும் அதிகப் பித்தம் முதலிய நோய்; மற்றொன்று புறத்தே நின்று வந்து பற்றும் பேய் முதலிய வற்றின் பீடை; நாடிக் கண்ட அந்நல்லார்கள் இது பித்தம் அதிகரித்துப் பொருந்திய உள்நோய் காரணத்தாலுமன்று; பிறிதொரு சார்பு எனப்படும் பேய் முதலிய பீடைகள் பற்றுதலானுமன்று; என்பார்; (1) பித்துற்ற மயலன்று; (2) பிறிதொருத சார்பு உளது மன்று என்று கண்டனர்; பித்து.....மயல் - பைத்திய மென்பர்.
  பிறிதொரு சார்பு - வெளியிலிருந்து வந்து சார்புகொள்ளும் பேய் முதலிய பீடையினால் வரும் அறிவு மாறாட்டம்.
  சித்த விகற்பம் களைந்து தெளிந்த - சித்தவிகற்பமாவது வஞ்சப் புலன்களின் வழியே மனஞ் செலுத்துதலால் வரும் மயக்கம்; "மாறி நின்றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைந்து" "சித்த விகாரக் கலக்கம்" (திருவா).
  விகற்பமாவது ஒன்றை மற்றொன்றாகக் கருதுவது. "பொருளல் லவற்றைப் பொருளென் றுணரும் மருள்" (குறள்); களைதல் - மயக்கஞ் சாராது காத்தல்; தெளிதல் - மெய்யுணர்தல்.
  சிவயோகத்தில் வைத்த கருத்தினர் - சிவனொடு அறிவினால் இரண்டறக் கலந்து அழுந்திய மனத்தினர்.