[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 30. திருமூலதேவ நாயனார் புராணமும் உரையும்491

  3589. (வி-ரை) ஊன்......உய்ய - ஊனுடம்பிற் பிறவி - "ஊனடைந்த உடம்பின் பிறவி" (2). ஊன்...விடம் - தசை செறிந்த உடம்பெடுத்துப் பிறக்கும் பிறவியாகிய விடம். பிறவி விடம் - உருவகம். உலகத்தோர் - எல்லா உயிர்களும்.
  நான்கும் - நான்கு பாதங்களும்; எண்ணலளவை யாகுபெயர்; முற்றும்மை.
  பிறவி விடம் - பிறவியாகிய விடம்; விடத்தைப் போலவே மரணத்தையின்றியமையாது உடன்கொண்டு வருதலின் பிறவியை விடம் என்று கூறினார். "தோற்ற முண்டேன் மரண முண்டு" (நம்பி - தேவா). முன்னர், "வெந்தொழில் வல் விடமுண்ண" (3573) என்று கொண்ட பாடத்தின் இயைபு இதனால் சிறந்து விளங்குதல் காண்க. இதற்கு இவ்வாறன்றி ஊனுடம்பி லிருந்துகொண்டே பிறவித் துன்பத்தை ஒழித்தல்கூடும் என்பதற்குச் சான்றுகள் திருமந்திரத்திற் பல கிடக்கின்றன; "அஞ்சனம் போன்றுடலையறு மந்தியில்......." (727) என்று ரைப்பாருமுண்டு; அது பொருந்துமாறு ஆராயத்தக்கது. இங்குக் குறித்தது பிறவியறுதல் திருமந்திர மாலையின் பயன் என்ற பொருள்; "அஞ்சனம் போன்றுடல்" என்ற பாட்டு இப்பிறவியில் சரீரசித்தி யுபாயம். (3-ம் தந்திரம்).
  பான்மை முறை - பான்மையாவது இறைவர் வகுத்த நியதி; நியதியின் வழியே அமைந்து; ஓர் ஆண்டுக்கொன்றாக வெளிப்படுத்திய நிலை பான்மை எனப்பட்டது. சிவயோகம் கைவந்தமையாற் காலத்தை வென்ற முற்றறிவுடையோர்க்கு யோக நிட்டையில் ஓர் ஆண்டு ஒரு கணமாய்க் கழியும். உலகியலிலும் இதனை ஒருவாறு காணலாம். "அவ்வூழியொரு கணமாம்" (3422).
  ஓராண்டுக் கொன்றாக - ஆண்டொன்றுக்கு ஒரு திருமந்திரமாக; இவ்வாறு ஓராண்டுக் கொன்றாக மூவாயிரம் ஆண்டுகளில் மூவாயிரம் திருமந்திரம் அருளினார் என்பது மேல்வரும் பாட்டானு முணர்க. ஆயின் இவ்வாறு ஆண்டுக் கொன்றாக 3000 திருமந்திரம் அருளினார் என்பதற்கு அகச்சான்றில்லை என்றும், அந்நாளில் ஆண்டு என்பது வேறு பொருளில் வழங்கி வந்ததோ என்பது தெரியவில்லை என்றும் ஈண்டு விசேட ஆராய்ச்சி செய்வாருமுண்டு; திருவாவடுதுறையில் பலகாலம் போதியின்கீழ் இருந்து ஆகம உண்மைகளைத் தமிழில் இறைவராணையால் அருளினார் என்ற சரிதப் பகுதிகள் எல்லாம் திருமந்திரங்களால் பெறப்படுகின்றன. "இருந்தேனிக்காயத்தில் எண்ணிலி கோடி; இருந்தேனிராப்பக லற்ற விடத்தே" (80); "ஞானத் தலைவிதன் னந்தி நகர்புக்கு, வூனமி லொன்பதுகோடி யுகந்தன்னுள், ஞானப் பாலாட்டி நாதனை யர்ச்சித்து, யானு யிருந்தேனற் போதியின் கீழே" (82); என்பன முதலியவை காண்க. ஈண்டு ஒன்பதுகோடி என்பது வகைப்பட்ட எல்லை; (கோடி எல்லை என்றும், யுகம் நீண்டகால எல்லை என்றும் பொருள் தருவனபோலும்.) ஆண்டுக்கொன்றாக 3000 திருமந்திரம் அருளினார் என்பது இச்சான்றுகளுடன் முரணாமை யறிக. இங்கு இச்சிறு செய்திக்கு அகச்சான்று வேண்டுவதும் பிறவும் ஈண்டுத்தகாத ஆராய்ச்சி முறையாமென்று விடுக்க. காலங் கடந்த ஞானோதய அருட்செயல்கள் நமது குறுகிய சில வாழ்நாளே யளவையாகக் கொண்ட ஆராய்ச்சி யெல்லையுட் படுவன வல்லவென்பது அறிஞர் துணிபு.
  ஞான முதல் நான்கும் - ஞானம், யோகம், கிரியை, சரியை என்றிவ்வாறு ஞானத்தை முதலாக வைத்துக் கூறுதல் சிருட்டிக் கிரமம்; "சங்கரனை யடையும் நன்மார்க்கம்D நாலவைதாம் ஞான யோக நற்கிரியா சரியையென நவிற்றுவதுஞ்