சிவமயம்

31. தண்டியடிகணாயனார் புராணம்

தொகை

"நாட்டமிகு தண்டிணக்கு (மூர்க்கர்க்கு) மடியேன்"

- திருத்தொண்டத் தொகை - (5)

வகை
கண்ணார் மணியொன்று மின்றிக் கயிறு பிடித்தரற்குத்
தண்ணார் புனற்றடந் தொட்டலுந் தன்னை நகுமமணர்
கண்ணாங் கிழப்ப வமணர் கலக்கங்கண் டம்மலர்க்கண்
விண்ணா யகனிடைப் பெற்றவ னாழர் விறற்றண்டியே"

- திருத்தொண்டர் திருவந்தாதி - (37)

விரி
3592
தண்டி யடிக டிருவாரூர்ப் பிறக்கும் பெருமைத் தவமுடையார்
அண்ட வாணர் மறைபாட வாடுஞ் செம்பொற் கழன்மனத்துக்
கொண்ட கருத்தி னகநோக்குங் குறிப்பே யன்றிப் புறநோக்குங்
கண்ட வுணர்வு துறந்தார்போற் பிறந்த பொழுதே கண்காணார்.

1

புராணம் :- தண்டியடிகள் என்னும் நாயனராது சரித வரலாறும் பண்பும் கூறும் பகுதி; இனி, ஆசிரியர் நிறுத்த முறையானே வம்பறா வரிவண்டுச் சருக்கத்தில் நான்காவது தண்டியடிகள் நாயனார் புராணம் கூறத் தொடங்குகின்றார்.
தொகை:- நாட்டம் மிகுகின்ற தண்டியடிகளுக்கும் - அடியேனாவேன்;- நாட்டம் - கண்; மிகுதல் - முன் இல்லாதிருந்து பின் உண்டாகப் பெறுதல்; முன்னர்ப் புறநோக்கின்றிச் சிவன் கழலே அகநோக்கும் குறிப்புமட்டு முடையாராய் இருந்து, பின்னர், அவ் வகநோக்குடன் அப்பொருளிற் புறநோக்குமாக இரண்டும் கூடப் பெற்றதனால் நாட்ட மிகு என்ற சரிதக் குறிப்புப்படக் கூறுதலுமாம்; தண்டி - நாயனார் பெயர்; உம்மை - எண்ணும்மை. தண்டிக்கும் மூர்க்கர்க்கும் என்க. முன் கூறிய அடியார்களுடன் என இறந்தது தழுவிய எச்சவும்மையுமாம்.
வகை :- கண்ணார்....தொட்டலும் - கண்மணியின் ஒளி சிறிது மில்லாமையாலே கயிற்றினைப் பிடித்துத் தடவிச் சிவபெருமானுக்காகக் குளிர்ந்த நீரினையுடைய தடாகத்தினை அகழ்ந்து தோண்டுதலும்; தன்னை....கண்ட - வெஞ்சொற்கள் கூறி இகழ்ந்து கொடுமை செய்த அமணர்களது நிலை கலங்குதலைக் கண்ட; அம்மலர்க்கண்....தண்டியே - (அவர்கள் ஒட்டிய) அந்த மலர்போன்ற தமது கண் ஒளியினைத் தேவர் தலைவராகிய சிவபெருமானிடம் வரப்பெற்றவர் திருவாரூரில் அவதரித்த வலிமையுடைய தண்டியடிகளாவர்.