504திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

இவ்வாறு விரிவாய் ஒரு பாட்டினாற் கூறியருளி இதன் பெருமையினை உபதேசித்தருளியது ஆசிரியரது தெய்வக் கவிநலம். இது குறிக்கவே முன்னர்க் "காணுங் கண்ணாற் காண்பதுமெய்த் தொண்டே யான கருத்துடையார்" (3593) என்று எடுத்துக்காட்டிய திறமும் காண்க.
குழிவாய் - குளத்தினுள்ளே மண்ணை அகழ்ந்து குழியாக்கும் இடம்.
குறி நட்டு - குறியாக - குறி காட்டுதற்கு ஒரு தறியினை நட்டு; கரையின்மேல் முதலில் தறிநட்டுப் பின்னர்க் குழிவாயின் நடுவராயின் வழி பிழைத்து நேர் காணலாகாமையின் முதலில் அகழவேண்டிய குழிவாயிற் குறிநட்டார், அகழ்ந்தெடுத்தலே செயற்குறிப்பாதலின்; இது தொழிற் குறிப்பின் நுட்பம்.
குளக்கரையின் இழிவாய் - இழிவு - கையாற் பற்றித் தடவுதற்குரிய தணிந்த இறக்கமான இடம் என்பதுமாம்.
குளக் குலையின் - என்பது பாடமாயின் குலை - கரை என்க. புறத்து - கரையின் மேலே புறத்தே; கரையின் புறத்தே குறி நடுதலே கயிற்றைத் தளரவிடாது தாங்கும் வலிமை தருவதாம்.
இடை தடவுதல் - கண் காணாராதலின் வழி பிழையாது உதவும் இந்தச் சாதனம் வேண்டற் பாலதாயிற்று.
ஓதும் எழுத்தஞ்சு உடன் உய்ப்பார் - மண் அகழ்ந்து கொட்டும் இத்தொண்டினை உடல் செய்ய அதனுடனே வாயினால் திருவஞ் செழுத்தினை ஓதும் தொண்டும் செய்தனர் என்பது; இங்கு உய்த்தல் தம்மைச் செலுத்துதல் என்ற பொருளில் வந்தது; இறைபணி நிற்பாரெல்லாம் எப்போதும் திருநாமமாகிய திருவைந்தெழுத்தினை உரு எண்ணியே செய்தல் வேண்டும் என்பது விதி. முன்னர்த் திருக்கோயில் வலம் வரும்போதும் இவ்வாறு செய்தமை கூறப்பட்டது (3594) காண்க; வாயினாலும் மனத்தினாலும் வேறு வேறு பேசியும் எண்ணியும் தொண்டு செய்தல் பயன்தராததுடன் அபசாரமுமாம்; திருத்தொண்டு செய்வோர் இதனைக் குறிக்கொள்வாராக என்று ஆசிரியர் இங்கு இருமுறை வற்புறுத்திக் காட்டி உபதேசித்தருளினர். மேலும் (3610) இவ்வாறே காண்க.
உய்ப்பார் - முற்றெச்சம்; உய்ப்பார் - கல்ல என வரும் பாட்டுடன் முடிக்க.
3597. (வி-ரை.) நயந்த விருப்பு - மேற்கொண்ட அழுந்திய பெரு விருப்பம்.
நற்றொண்டர் - நன்மையாவது உண்மையினின்றும் மாறுபட்ட கருத்தொன்று மில்லாது சிவன் திருவடியிலே செலுத்திய மனநிலை; "ஆதரவால்" (3595) என்ற கருத்து.
மிகப் பெருகி - தொடக்கத்தில் ஒரு ஆளின் சிறுவேலையாய்க் காட்டியது பின்னர் முயற்சியினாற் பெரிய பணியாக உலகுக்கு வெளிப்பட்டு.
கண்ட - கண்ணில்பட்டு மாறுபாடு கொண்டு உறுத்த.
பொறாராகி - பொறாமையுடையாராகி; "அழுக்கா றெனவொரு பரவி திருச்செற்றுத், தீயுழி யுய்த்து விடும்" என்றபடி இஃது இவ்வமணர்களின் கேட்டுக்குக் காரணமாயினமை காண்க. இங்குப் பொறாமை, சைவம் விளங்குதலின் மேற்பூண்ட சீற்றம்; இனி அஃதேயுமன்றித் தமது ஆக்கிரமிப்பாகிய அனுபவ இடங்களை இழக்க வேண்டி வரும் சுயநலம் பற்றிய சீற்றமுமாம்.
எண்ணி - தம்மில் கூடிச் சதியாலோசனை செய்து; இஃது அவர் இயல்பு; அரசுகள் சரிதத்தில் தம் வயப்பட்ட பல்லவ அரசன்பால் வஞ்சனையாக அறிவித்த