| |
| "ஐய னேயின் றமணர்கடா மென்னை யவமா னஞ்செய் நைவ தானே னிதுதீர நல்கு மடியேற்" கெனவீழ்ந்தார். | |
| 11 |
| (இ-ள்.) வெய்ய....அடிகள் தாம் - கொடிய தொழிலினையுடைய அமணர்களது இச்செய்கையின் மேல் வெகுண்ட தண்டியடிகளார் தாம்; மைகொள்....இறைஞ்சி - விடம் விளங்கும் கண்டத்தினையுடைய இறைவரது பூங்கோயிலின் முன்னே வந்து வணங்கி; "ஐயனே!....அடியேற்கென" வீழ்ந்தார் - எமது பெருமானே! இன்று அமணர்கள் தாம் வலியவந்து என்னை அவமானஞ் செய்ததனாலே நான் மனம் நைவதாயினேன்; இதனுக்குத் தீர்வு அடியேற்கு நல்கியருள வேண்டும் என்று முறையிட்டு நிலமுற வீழ்ந்தார். |
| (வி-ரை.) வெய்ய தொழிலார் செய்கையின்மேல் வெகுண்ட - இதுவரை வெருட்சியின்றிப் பணியே தலைநின்ற அடிகள் வெகுண்டமை அமணர்களது வெய்யதொழிற் செய்கை காரணமாக அதன் பின்பே நிகழ்ந்தது என்பதும், இதுவரை அமணர்களின் சொற்செயல்கள் கொடுமையானவை என்பதும் ஆம். |
| பூங்கோயிலின் முன்வந்து இறைஞ்சி....வீழ்ந்தார் - சிவனையன்றி வேறு பற்றுக்கோடில்லாதவர்கள் அடியார்களாதலின் அடிகள் பூங்கோலின்முன் போய் வணங்கி முறையிட்டு வீழ்ந்தனர்; திருவிளையாடற் புராணத்துள் வரும் வரலாறுகள் பலவும் காண்க. வீழ்தல் - முறைகிடத்தல். |
| என்னை அவமானம் செய்ய - சிவன் பணியும் தாமும் இணைபிரியாது பிணைக்கப்பட்டுள்ளமையால் திருப்பணிக்கு நேர்ந்த முட்டுப்பாடு தமக்கு நேர்ந்த அவமதிப்பாகக் கருதினார் அடிகள். நைவதானேன் - நைதல் - மனம் உடைதல்; இது - அவமானத்தால் திருப்பணிக்கு நேர்ந்த முட்டுப்பாடு; அடியேற்கு நல்கும் - இதற்குத் தீர்வினை அடியேன் பெறவருளும்; அஃதாவது அங்குக்கூறிய சூளுறவு முற்றுப்பெற அருளுவதனால் அத்திருப்பணி முற்றுப்பெறக் காணும் பேறு அடியேன் பெற; பின்னர் அரசனுக்கு இறைவராணை "அவன் கருத்தை முடிப்பாய்" (3605) என நிகழ, அவ்வாறே சூளுறவு முற்றக் கண்டு அரசன் முறை செய்து தானே சமணரது "பாழி பள்ளிகளும் பறித்துக் குளஞ்சூழ் கரைபடுத்து" (3615) வந்து அடிகளடி பணியும் நிகழ்ச்சி காண்க. |
| 11 |
3603 | பழுது தீர்ப்பார் திருத்தொண்டர் பரவி விண்ணப் பஞ்செய்து தொழுது போந்து மடம்புகுந்து தூய பணிசெய் யப்பெறா தழுது கங்கு லவர்துயிலக் கனவி லகில லோகங்கண் முழுது மளித்த முதல்வனார் முன்னின் றருளிச் செய்கின்றார், | |
| 12 |
3604 | நெஞ்சின் மருவுங் கவலையினை யொழிநீ; நின்கண் விழித்தந்த வஞ்ச வமணர் தங்கண்கண் மறையு மாறு காண்கின்றாய்; அஞ்ச வேண்டா"வென்றருளி, யவர்பா னீங்கி யவ்விரவே துஞ்சு மிருளி லரசன்பாற் றோன்றிக் கனவி லருள்புரிவார். | |
| 13 |
3605 | "தண்டி நமக்குக் குளங்கல்லக் கண்ட வமணர் தரியாராய் மிண்டு செய்து பணிவிலக்க வெகுண்டா னவன்பா னீமேவிக் கொண்ட குறிப்பா லவன்கருத்தை முடிப்பா"யென்று கொளவருளித் தொண்ட ரிடுக்க ணீங்கவெழுந் தருளினாரத் தொழிலுவப்பார், | |
| 14 |