512திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

விளைக்கும்போது அவற்றை ஆக்கிய அவரே அவற்றை முறை செய்வர் என்பது தெளிவிக்க இங்கு "முழுதும் அளித்த" என்ற தன்மையாற் கூறினார்.
முன்னின்று - தாமாந்தன்மை அறிய வெளிப்பட்டு எழுந்தருளி; முன்னிற்றல் - மறைந்த நிலையினின்றும் வெளிப்படுதல்; நீங்கி - (3604) என்றது மிவ்வாறே வெளிப்பட்ட நிலையினின்றும் மறைதல் குறித்தது.
அருளிச் செய்கின்றார் - முற்றெச்சம். அருளிச் செய்கின்றாராய் - என்றருளி என மேல்வரும் பாட்டின் எச்சவினையுடன் இயைக்க.

12

3604. (வி-ரை.) நெஞ்சின்....நீ - "தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லான், மனக்கவலை மாற்ற லரிது" (குறள்) என்ற கருத்து ஈண்டுச் சிந்திக்கற்பாலது; மனக்கவலையினை மாற்றும் ஆற்றல் இறைவனுக்கும் அவனருள் வழி அவனேயாய் நிற்கும் எந்தம் பெருமக்களாகிய பரமாசாரியார்களுக்குமே இயல்வதாகும். ஏனையோர் செய்வனவெல்லாம் உபசார மாத்திரையா யொழியுமென்க; நீ ஒழி - என்பது ஒழிநீ என வந்தது விரைவுபற்றி; அன்றியும் கண்விழித்துக் காண்கின்றாய் எனப் பின்வரும் வினைகட்கும் எழுவாயாகிய நீ என்பது அவற்றின் அணிமையில் நிற்கவேண்டிய நிலைபற்றியுமாம். "கவலை ஒழி" என்ற துன்ப நீக்கத்தினும் "காண்கின்றாய்" என்ற இன்ப ஆக்கத்தின் அணிமையில் அடிகளாரை ஆக்கும் கவிநயக் குறிப்பும் காண்க.
காண்கின்றாய் - காண்பாய் என்னும் எதிர்காலத்தை நிகழ்காலத்தாற் கூறியது விரைவும் உறுதியும் குறித்தற்கு.
நின்....மறையுமாறு - இதுவே அடிகள் அமணர்கள்பால் உரைத்த சூளுறைவு; இறைவரருளை முன்னிட்டு உரைத்தாராதலின் அதனை உண்ணின்று கேட்ட இறைவர் அவர்தாம் வேண்டுமதனையே யருளுகின்றார். வஞ்ச அமணர் - வஞ்சனையாற் கூறிய அறவுரையினைக் குறித்தது. மறையும் ஆறு - மறையும் நிலை; மறையும் மாறு எனப்பிரித்து அடிகளது விழியாநிலை அமணர்களது விழித்த கண்ணிற் கண்டது மாறி, அவர்களது விழியாதநிலை அடிகளது விழித்த கண்ணிற் காண என்று, இடமும் நிலையும் மாறப் பெறும் என்ற குறிப்புப்பட உரைக்கவும் நின்றது.
அஞ்ச வேண்டா - இவ்வாறு அபயங்கொடுக்கும் வன்மை சிவபெருமானுக்கே யியைவதாம், முழுமுதற்றன்மையும் எல்லாம் வல்லவ ராதற்றன்மையும் உடைமையால் என்க. "வெஞ்சம னஞ்ச வேலொ டெதிர்ந்தால் நமரங்காள், அஞ்சலெனுஞ்சொ லார்சொல வல்லார் நமரங்காள், மஞ்சிவ ரிஞ்சி மன்ற மிறைஞ்சீர் நமரங்காள், நஞ்ச மயின்றார் நல்குவர் மாதோ நமரங்காள்" (குமரகுருபரர் - சிதம்பரச் செய்யுட் கோவை - 40). அரனருள் பெற்றாரும் அஞ்சலளிக்க வல்லார்: "பயப்படேல்" (2377).
அவ்விரவே அரசன்பால்....அருள் புரிவார் - அடிகளையும் அரசனையும் இருவரையும் பொருத்தல் செய்யும் நிலையாதலின் இருவர்பாலும் சாரும் வகையை இவ்வொரு பாட்டிற் கூறிய நயம் காண்க. அவ்விரவே - என்ற கருத்துமிது. இறைவரது திருவருளின் விரைவும் குறிப்பு. துஞ்சும் இருளில் - துயிலும் வேளை.
தங்கள் கண் - என்பது பாடம்.

13

3605. (வி-ரை.) தண்டி....என்று - இஃது அரசனுக்கு இறைவர் உணர்த்தியருளியது.
தண்டி என்றதனால் அவர் பெயரும், நமக்குக் குளம் கல்ல என்றதனால் அது சிவன்பணியாதலும், கண்ட அமணர் விலக்க - என்றதனால் புறச்சமயிகள் தீக்குணம்