| |
| பாய்கள் - சமணர்களின் உடையாகிய தடுக்குகள். பாய் உடுப்பது அவர்கள் வழக்கு; வழிச் செலவுக்கு உதவும் உடையாகப் பாய் வேண்டினர் என்பது. "பறிதலைக் கையர் பாயுடுப் பார்களை" (பிள். தேவா). |
| பறிதலையர் - அமணர்கள் தலைமயிர் பறித்தல் அவரது சமய ஒழுக்கங்களுள் ஒன்று; இங்கு நேரிட்ட துன்பத்தினாலே தலைமயிர் பறித்துத் துக்கித்தவர் என்றலுமாம். |
| 22 |
| 3614. (வி-ரை) பீலி - மயிற்பீலிக் கற்றை; மயிற் பீலியினைக் கையிலேந்திச் செல்லுதல் அமணர் வழக்கு. இதனால் வழியில் எறும்பு முதலிய பிராணிகள் பட்டிறவாது வழி தடவிச் செல்வரென்ப. இங்கு ஊரைவிட்டுத் துரத்தப்பட்டு வழிச் செல்கின்றாராதலின் இதனை வேண்டினர் என்பது; தடவித் தேடி என்றதுமிது. |
| நின்று - பீலி காணாது பெயர்வார் சிலரும், அதனால் பெயராது நிற்பார் சிலரும் என்பதாம். பேதுறுதல் - செயலறியாது திகைத்தல்; பேது - பேதைத்தன்மை. |
| தம்மிற்றாமே முட்டிடுவார் - உடல் மோதுதலுடன் அறிவினான் மயங்கி ஒருவரையொருவர் மாறுகொண்டு கலாய்ப்பர் என்றலுமாம்; "கந்தியர் தம்மிற் றாமே கனன்றொழு கலாங்கள் கொள்ள வந்தவா றமணர் தம்மின் மாறுகொண் டூறு செய்ய" (2532); தண்டியடிகளுடன் கலாய்த்து ஒட்டி இவ்வாறு அரச தண்டனை விளைவித்தார் அவர்களுள் ஒருசிலரேயாக, அவர்களால் எல்லாருக்கும் நேர்ந்த துன்ப நோக்கி அவருள்ளே கலாய்த்தல் இயல்பாம். |
| மாலும் - மயங்கும்; பெயரெச்சம். மனமும் - இவ்வாறு பலவும் சிந்தித்து வழிதேடுதற்குத் துணை காண மயங்கிய நிலையிலேனும் துணை காணும் கருவியாய் எஞ்சிநின்ற மனமும் உடைந்து மேலே சிந்திக்கவும் இயலாமல் என்று உம்மை சிறப்பும் எச்சமுமாம். |
| வழிகள் - மேற்செயலாவன வழிகள். |
| 23 |
| 3615. (வி-ரை) அன்னவண்ணம் ஆரூரில் அமணர் கலக்கம் கண்டு - அன்ன வண்ணம் (மன்னன்) - கண்டு என்க; அரசன் கண்ட நிலையினை வைத்து ஆசிரியர் சரித வரலாறு கூறுகின்றாராதலின் இன்ன வண்ணம் என்னுது அன்ன என்றர்; சேய்மைச் சுட்டினாற் கூறிய குறிப்புமாம். |
| அமணர் கலக்கங் கண்டு - (திருவந்தாதி 37) "அமணர் கண்ணாங் கிழப்பவமணர் கலக்கங் கண்ட" என்ற வகைநூ லாட்சி போற்றப்பட்டது; கலக்கம் - ஈண்டுச் சபதம் கூறியவாறே கண்ணிழந்தமையால் அமணர் கொண்ட மயக்கம் என்ற பொருளில் வந்தது; கண்டு - கண்டமையால்; கண்டு துரந்ததற்பின் - என்று கூட்டுக; (3591) பார்க்க; கனவில் இறைவராணைவழி நின்றானாயினும் அரசநீதி முறைப்படி உலகறியச் சபதத்தின்படி அமணர்கள் கண்ணிழந்ததனை நேரே கண்டபின்பே முறை செய்தனன் என்க. |
| அவர்தாம் சொன்ன வண்ணமே - அவர் தாமே தண்டியடிகளிடம் ஒட்டிய தன்றித் தன் முன்னரும் இசைந்தபடியே; "அதற்கிசைந்தார்" (3609); தாம் - தாமே; பிரிநிலை ஏகாரம் தொக்கது; பிறரெவரும் சொல்லாது தாமே; வண்ணமே - அரசன் விதிக்கும் குற்றத் தண்டனையின் அளவு அவர் தாம் கூறிய அளவே என்றபடி; அந்த அளவு ஊரில் இரோம் என்றபடி அவ்வூரில் நில்லாது செய்தல்; இஃது மிகையும் குறைவுமின்றி அக்குற்றத்துக்கேற்றபடி அமைதலான் என்பது; "தீங்கு செய்த தன்மையாற் சாலு மென்றே, மிகையிலா வேந்தன் செய்கை" (2752) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. "நீமெய் கண்ட தீமை காணின், ஒப்ப நாடி யத்தக வொறுத்தி" (புறம்). |