| |
| உள் நிலாவும் புகழ் - சூது என்ற தன்மையாற் புறத்தில் இகழ்ச்சியாய்க் காணும் செயலே அகத்துள் அடியார் பணியாகிய புகழாக நிலவிற்று என்று சரிதக் குறிப்புப்பட நிற்பது காண்க. |
| 26 |
|
|
| சரிதச் சுருக்கம்: - தண்டியடிகள் திருவாரூரில் பிறக்கும் தவமுடையார்; சிவன் கழலல்லது வேறு காணாத அகநோக்குடைமை யன்றிப் புறநோக்கில் வேறு காணார் என்ற குறிப்பினாற் கண் துறந்தார் போலப் பிறவியந்தகராய் அவதரித்தவர்; சிவன் மெய்த்தொண்டினையே காணும் கண்ணாற் காண்பது என்ற துணிவினாலே சிவன் கழலே போற்றிப் பரவித் திருத்தொண்டிற் சிறந்தனர். |
| நாடோறும் திருத்தேவாசிரியன் முன் வணங்கித் திருவைந்தெழுத்தினை ஓதித் திருக்கோயிலினை வலஞ் செய்து வந்தனர். |
| அந்நாளில் திருக்கோயிலின் மேல்பால் இறைவரது தீர்த்தக் குளமாகிய கமலாலயத்தின் கரையில் எங்கும் ஆக்கிரமித்து அமணர் பாழிகளும் பள்ளிகளுமாய் அமைத்தனராதலின் குளம் இடத்தாற் குறைபாடுற்றது. அதனை அறிந்து தண்டியடிகள் அக்குளத்தினை உரியபடி கல்லி அகலப்படுத்திப் பணிசெய்ய எண்ணினார். அதற்கு வழி யறிதற்காகக் குளத்தினை அகலமாக்கும் குழிவாயில் தறிநட்டுக் கயிறு பிணித்து, அதனைக் கரையின்மேல் நட்ட தறியினுடன் இறுகப் பிணித்து, அதனைத் தடவி வழியறிந்து மண் கல்லி எடுத்து மேலே கொட்டித் திருவைந்தெழுத்தினையும் இடையறாது உடன் ஓதிக்கொண்டு பணி செய்தனர். |
| அதனைக் கண்ட அமணர்கள் பொறாராகித் தண்டியடிகள்பால் வந்து "மண்ணைக் கல்லிற் பிராணிபடும்; வருந்தவேண்டாம்" என்று தருமோபதேசம் செய்தனர்; அடிகள் அதற்குச் "சிவன் பணி எதுவோ அதுவே அறமாவது; அதனை நீர் அறிவீரோ?" என்றார். அதுகேட்ட அமணர் அவரை இகழ்ச்சி செய்து, "நாங்கள் சொன்ன அறத்தினைக் கேளாய்! கண்ணிழந்தது போலக் காதும் இழந்தனையோ?" என்று அவமதித் துரைத்தனர். அது கேட்டு அடிகளார் "மந்த உணர்வும் குருட்டுக்கண்ணும் செவிட்டுக் காதும் உங்களுக்கே இந்த உலகத்துள்ளன; சிவபெருமானது திருவடிகளல்லாது வேறு ஒன்றினையும் கண்ணாற் காணா நிலையுடையேன் யான்; அதனை அறிதற்கு உமக்கு என்ன தகுதி?; நீங்கள் உணர்வும் கண்ணுமிழந்து, என் கண் காணப்பெற்றால் நீங்கள் யாது செய்வீர்?" என்று கேட்டனர். அதுகேட்டு, அவ்வமணர் "உன் தெய்வத்தின் அருளால் நீ கண் பெற்றாற் பின்னை நாங்கள் இவ்வூரில் இருக்கமாட்டோம்" என்று எதிர் மொழி கூறி அவரது கையினின்றும் கொட்டை வலிந்து பற்றி எறிந்து அவர் வழியறியக் கட்டிய தறியுடன் கயிற்றையும் பறித்தெறிந்தனர். |
| அது கண்டு தண்டியடிகள் வெகுண்டு, இறைவரது பூங்கோயிலின் முன் வந்து வணங்கி, "ஐயனே! இன்று அமணர் என்னை அவமானஞ் செய்ததனால் மனமுடைந்தேன்; அது தீர அருளவேண்டும்" என்று முறையிட்டு வீழ்ந்தனர்; பின்பு தமது மடத்துட் புகுந்து, தூய பணிசெய்யப் பெறாமையின் அழுது துயின்றனர். இறைவர் அன்றிரவு கனவில் எழுந்தருளி "உன் கவலை ஒழிக! உன் கண்விழித்து அந்த வஞ்ச அமணர் கண் மறைதல் காண்பாய்" என்று அருளினர். அவ்விரவே அரசன் கனவிலும் இறைவர் எழுந்தருளி "தண்டி நமக்குக் குளங்கல்லக் கண்ட அமணர் மிண்டுசெய்து பணி விலக்கினர்; அவனிடம் நீசென்று அவன் உட்கொண்ட குறிப்பினால் அவனது கருத்தை முற்றுவிப்பாய்" என்றருளிச் செய்தனர். |