[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்55

யேற்ற கருத்தை வினவிக் கசிந்து வழிபடும் அடியவர்க்கு மெய்ப் பொருளாகிய வீடுபேற்றை அருளுபவர். "பரந்துல கேழும் படைத்த பிரானை, இரந்துணியென்பர்களெற்றுக் கிரக்கும்?, நிரந்தர மாகநினையு மடியார், இரந்துண்டு தன்னடியெட்டச் செய்தானே" (திருமந்). மெய்ப்பொருள் - "ஊனத் திரளை நீக்கு மதுவும் உண்மைப் பொருள் போலும்" (பிள். தேவா. அண்ணாமலை) மெய்ப்பொருள் - வீடுபேறு; -(10) வண்டு நாதகீதம் - ஓது - பொழில் என்க;
தலவிசேடம் : -திருவீழிமிழலை, III பக்கம் 439.
3215
செழுநீர் நறையூர் நிலவுதிருச் சித்தீச் சரமும் பணிந்தேத்தி
விழுநீர் மையினிற் பெருந்தொண்டர் விருப்பினோடுமெதிர்கொள்ள
மழுவோ டிளமான் கரதலத்தி லுடையார் திருப்புத் தூர்வணங்கித்
தொழுநீர் மையினிற் றுதித்தேத்தித் தொண்டர் சூழ வுறையுநாள்,

61

3216
புனித னார்முன் புகழ்த்துணையார்க் கருளுந் திறமும் போற்றிசைத்து
முனிவர் போற்ற வெழுந்தருளி மூரி வெள்ளக் கங்கையினிற்
பனிவெண் டிங்க ளணிசடையார் பதிகள் பலவும் பணிந்துபோந்
தினிய நினைவி லெய்தினா ரிறைவர் திருவா வடுதுறையில்.

62

3215. (இ-ள்) செழுநீர்....ஏத்தி - செழுமையாகிய நீர்ச் சிறப்பினையுடைய நறையூரில் நிலைபெற்ற திருச்சித்தீச்சரத்தினையும் பணிந்து துதித்து; விழுநீர்மையினில்....வணங்கி - நிலமுற விழுந்து வணங்கித் தாமும் தன்மையினையுடைய பெருமை வாய்ந்த திருத்தொண்டர்கள் விருப்பத்தோடும் எதிர்கொள்ளச்சென்று, மழுவினோடும் இளமான் கன்றைத் திருக்கரத்தில் ஏந்திய சிவபெருமானது திருப்புத்தூரினை வணங்கி; தொழு நீர்மையில்...உறையும் நாள் - தொழுது வழிபடும் விதிமுறைப்படி வணங்கித் துதித்துப் பரவி அங்குத் தொண்டர்கள் சூழ எழுந்தருளிய நாட்களில்,

61

3216. (இ-ள்) புனிதனார்...போற்றிசைத்து - இறைவர் முன்னாளில் புகழ்த்துணை நாயனாருக்கு இப்பதியில் படிக்காசு அருள் செய்த அருட்டிறத்தினைப் போற்றிப்பாடி; முனிவர் போற்ற எழுந்தருளி - முனிவர்கள் போற்ற எழுந்தருளிச் சென்று; மூரி...போந்து - பெரிய வெள்ளமாகப் பெருகும்கங்கையில் குளிர்ந்த சந்திரனை அணியும் சடையினையுடைய இறைவர் எழுந்தருளிய பதிகள் பலவற்றையும் பணிந்து சென்று; இனிய...திருவாவடுதுறையினில் - மகிழ்ச்சி பொருந்திய திருவுள்ளத்தினுடனே இறைவரது திருவாவடுதுறையில் வந்து சேர்ந்தருளினர்.

62

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
3215. (வி-ரை) செழுநீர் - காவிரிக் கரையாதலாலும் காவிரி நீர் பாய்தலாலும் நீர் வளம் பற்றிக் கூறினார். "வாரும் மருவி மணிபொன் கொழித்துச் சேரும்" என்றது முதலாக வருவன பதிகக் குறிப்புக்கள். "செழுநீர்நறையூர்" (5).
நறையூர் - ஊர்ப்பெயர்; சித்தீச்சரம் - கோயிலின் பெயர்; நறையூரில் உள்ள கோயில் என்பது.
சித்தீச்சரமும் - உம்மை முன் அணைந்தார் என்ற அரிசிற்கரைப்புத்தூரை அணையச் சார்ந்தவர் வழியில் இதனையும் என இறந்தது தழுவிய எச்சவும்மை.