|
  |  |  | 
  |  | கவறு - சூதாட்டம். கவறு - சூதாடுதல்; "கவறுங் கழகமும்" (குறள்); இஃது இங்கு   ஆகுபெயராய்ச் சூதாட்டத்தைக் குறித்தது; சூதாட்டத்திற் கைக்கொண்ட என்க; உருபுமயக்கம்;   வல் - சூதாடு கருவி; "வல்லுப் பலகை" (கலித்); ஆயம் - ஊதியம்; லாபம்; சூதாடு   கருவியால் வரும் பந்தயப் பொருளாகிய தாயம் என்க; வல் ஆயம் - வல்லால் வந்த ஆயம்;   ஆதாயம்; பரிமேலழகர் வடமொழித்திரிசொல் என்பர்; "உருளாயம்....பொருளாயம்" (குறள்);  கவறாடல் - சூதாடுதல்; நண்டு அலை நீர் - நண்டுகள் அலைதல் கவறாடு   கருவிகளின் அசைவுபோல உள்ளதென்பர்; சரித முற்குறிப்புப்பட இத்தன்மையால் நகர்வளங் கூறினார்.   "அலவனாடும் வகைபோல் அரும்பொற் கவறங் குருள" (சீவக); ஆயம் - சூதாடு கருவி; வன்சூதர்   - சூதில் வலிந்து வஞ்சித்து மறுப்போர் (3626); முண்ட நன்னீற்றன் - சிவன்; குடந்தையின்   மேவும் - திருவேற்காட்டூரினின்றும் குடந்தையிற் சென்று சேர்ந்த; நற்சூதன் -   சூதாடுதல் ஐம்பெரும் பாதகங்களுள் ஒன்றென்பது நீதிநூல்; ஆயினும் அதனைச் சிவன் அடியார்க்   கமுதாக்க எண்ணிப் பயன்படுத்தி, அதனால் தீமையினையே நல்லதாக ஆக்கினவர்; "நற்சூதர் மூர்க்கரெனும்   பெயர்" (3626). | 
    |  | தொகை நூல் நாயனாரது பெயரினை எடுத்துரைத்தது; வகை நூல் - ஊரும் பெயரும் சரிதவரலாறும்   திருத்தொண்டின் றிறமும் வகுத்தோதிற்று; இவை விரிந்தபடியை விரிநூலுட் கண்டுகொள்க. | 
    |  | 3618. (இ-ள்.) மன்னி....அதனில் - நிலைபெற்றுப் பெருகும் பெரிய தொண்டை வளநாட்டிலே,   வயல் பரப்பும்....நலங்கொள் பதி - வயல்களில் பரப்புகின்ற நல்ல முத்துக்களை வீசும்   அலைகளையுடைய பாலி ஆற்றின் வடகரையில் நன்மையுடைய பதியானது; அன்னப்பெடைகள்....புக்காட   - பெட்டை அன்னங்கள் தாம் நீர்குடைந்தாடுகின்ற வாவிகளில் உள்ள தாமரை முதலிய பூக்களிற்   புகுந்து நின்று ஆட; அரங்கினிடை....வேற்காடு - ஆடரங்குகளில் மின்னுக் கொடி போன்ற பெண்களும்   துகிற் கொடிகளும் விழாக்களின்போது ஆடுதற்குரிய திருவேற்காடு என்பதாம். | 
    |  | (வி-ரை.) வேற்காடு - பதி - என்று பெயர்ப் பயனிலை கொண்டு முடிந்தது. | 
    |  | மன்னி....பதி - நாட்டுச் சிறப்பும் நகரச் சிறப்பும் ஆற்றுச் சிறப்பும் உடன்    கூறும் நயமும், அதனை, வளநாடு - நித்திலத்திரை நதி - நலம் கொள்பதி என்ற ஒவ்வோர்    அடைமொழிகளாற் கூறும் நயமும் கண்டுகொள்க. வயல் பரப்பும் - 7ம் வேற்றுமைத்தொகை. | 
    |  | கொடிகள் விழவிற்கு ஆடுதல் - நகரத்தின் மங்கல அணிச்சிறப்பு. | 
    |  | பெருந் தொண்டை வளநாடு - பெருமையாவது வாய்மை வழுவாத நன் மக்களுடைமை; வளநாடு   - அந்நாளில் நாடுகளின் பெயர் வழங்குமுறை. | 
    |  | நித்தில வெண்திரைப் பாலி நதி - பாலி நதியின் வெள்ளப் பெருக்கினால் நீர் தெளிவின்றி     வருதல் சில நாட்களேயாய்த், தெளிந்து வருதலே பல நாட்களாதலின் அக்குறிப்புப்பட வெண்     திரை - என்ற சிறப்புடன் கூறினார். | 
    |  | நலங்கொள் பதி - நன்மையல்லாத சூதினையும் நன்மையாய்ச் செய்துகொண்ட நாயனார்     அவதரித்த பதி என்பது நலங்கொள் என்றதன் குறிப்பு; "தாம்முன்பு கற்ற தன்மை     நற்சூதால்" (3623) என்பது காண்க. நலங்கொள் - நன்மை மிக்க. "நலங்கொள்     காழி" (பிள். தேவா). | 
    |  | குடைவாவி அலர்புக்கு - குடையும் வாவிகளில் உள்ள அலர்களின் மேற்புகுந்து என்று     விரிக்க; குடைதல் - நீராடுதல்; "மாதரார் குடையும் பொய்கை." |