58திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

பணி செய்தலும், மற்றும் திருக்கோயிலுள் அணிமையாகப் பல பணி செய்தலும் உரிமையாக்கொண்ட சிவவேதியன். அந்தணன் - (ஆகிய) புகழ்த்துணை என்று கூட்டுக. "அங்கணர் கோயி லுள்ளா வகம்படித் தொண்டு செய்வார்" (தில்.புரா. 4); புகழ்த்துணை நாயனார் புராண வரலாறு பார்க்க. அச்சரித ஆதரவு. புகழ்த்துணையாரது அன்பின் பெருமை "புடைசூழ்ந்த புலியதண்மே லரவாட வாடி பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணை" என்ற திருத்தொண்டத் தொகையானுமறியப்படும்;-(7) எச்சம் - யாகம். (யக்ஞம்); தெழித்தல் - அழித்தல், தண்டித்தல்; விழிக்கும் தழைப்பீலி - கண் போன்ற அமைப்பும் தழை போன்ற வடிவும் உடைய மயிற்பீலி;-(8) பறைக் கண் நெடும் பேய் - பறையினைப் போன்று பெரிதாய் அகன்று வட்டமாகிய கண்களையுடைய பேய்; "பறைபோல் விழிகட் பேய்" (அம்மை - மூ - தி); பாரிடம் - பூதம்;-(9) மழைக் கண் - மேகம் போல மையிட்ட கண். மேகம் போன்ற கருவிழியினை யுடைய கண் என்றலுமாம்; உருவுவமம்; மேகம் போன்று கைமாறின்றிக் கருணை பொழியும் என்று பண்புவமமுமாம்; - (10) கடிக்கும் அரவால் - வாசுகியைக் கடைகயிறாகக் கொண்டு; ஒடிக்கும் - அழிக்கும்;-(11) போரூர்புனல் - போர் செய்தல் போல மோதியலைக்கும் வெள்ள நீர் பொருது.
தலவிசேடம் : - திரு அரிசிற் கரைப்புத்தூர் - முன் உரைக்கப்பட்டது. 2301 - ன் கீழ்ப் பார்க்க.
3217
விளங்குந் திருவா வடுதுறையின் மேயார்கோயில்புடைவலங்கொண்
டுளங்கொண் டுருகு மன்பினுட னுள்புக் கிறைஞ்சி யேத்துவார்
வளங்கொள் பதிக"மறையவ"னென்றெடுத்து வளவன் செங்கணான்
தளங்கொள் பிறப்புஞ் சிறப்பித்துத் தமிழ்ச்சொன் மாலைசாத்தினார்.
(இ-ள்) விளங்கும்....வலங்கொண்டு - விளங்குகின்ற திருவாவடுதுறையில் எழுந்தருளிய இறைவரது திருக்கோயிலினைச் சுற்றி வலமாக வந்து; உளங் கொண்டு....ஏத்துவார் - உள்ளத்தினைத் தன் வசமாக்கி உருக்கும் அன்பினோடும் திருக்கோயிலினுக்குள்ளே புகுந்து வணங்கிப் போற்றுவாராகி; வளங்கொள்...எடுத்து - வளமுடைய திருப்பதிகத்தினை "மறையவன்" என்று தொடங்கி; வளவன்...சிறப்பித்து - கோச் செங்கட் சோழரது இடம் பொருந்திய பிறப்பினையும் சிறப்பித்துப் போற்றி; தமிழ்ச் சொன்மாலை சாத்தினார் - தமிழ்ச் சொல்மாலையாகிய அத்திருப்பதித்தினைச் சாத்தி யருளினார்.
(வி-ரை) விளங்கும் - அருள் விளங்கும்; உலகு விளங்குதற்குக் காரணமாகிய; இவ்விளக்கமாவது இங்குத் திருமூல நாயனார் பசுக்கள் உய்யும்படி சிவாகமப் பொருளைத் திருமந்திரமாகத் தமிழில் வெளிப்படுத்தி யருளியதும், பிறவுமாம். அவர் சரிதம் பார்க்க. இத்திருப்பதிகத்தினுள், இறைவரருள் பலவும் விளங்கக் கண்டு அடைந்தேன் என்ற கருத்துப் பற்றியும் விளங்கும் என்றார்.
மறையவன் - இது பதிகத் தொடக்கம். முதற் குறிப்பு.
வளவன் செங்கணான் - கோச்செங்கட் சோழ நாயனார். தளங்கொள் பிறப்பு - முன்பு சிலந்தியாயிருந்து பணி செய்த அந்தத் தலத்திலேயே அரசராக வந்து பிறந்த பிறவி: "தொடர்ச்சி" என்ற பதிகம் இக்குறிப்புத்தருவதாம்; தலம் தளம் என வந்தது. வடமொழி வழக்கு. தளம் மேன்மை என்றனர் முன் உரைகாரர்கள்.
சிறப்பித்து - போற்றி - துதித்து; பதிகப் பாட்டுப் பார்க்க.