| |
| இறைவர் அதற்கு மகிழும் தாய்தந்தையாகவும் கொள்ளப்படும். இப்பொருளில் தம் பெற்றோர்மாட்டுப் புதல்வர் வன்மை புரியும் இகழ்ச்சிச் செயல் அன்பினாற் செய்ய வாராமையின், இதன் பொருத்தம் ஆராயத் தக்கது. |
| புதல்வர்க் கின்பமே நிகழும் - அதுபோல் சடையோர் தாமகிழ்வார் என்ற சொற்கிடக்கை முறையினாலும், இச் செயலில் மகிழ்வு நிகழ்வது இறைவரிடத்தாதலானும் இறைவரை அன்பினால் வன்மை புரியப்பெற்ற இளம் புதல்வராகவுரைக்கப்பட்டது. |
| அதுபோல் அதற்கு - அது - புதல்வர்க்கு இன்பம் நிகழுமது; அதற்கு - வன்மைபுரி செயலினால் இகழ்வனவே செய்ததற்கு; ஈண்டுச் சிவநெறி விதியினால் விலக்கப்பட்ட கல் எறிந்த வலிய செயலுக்கு. |
| மகிழ்வார் - மகிழ்வாராயினார் என ஆக்கச்சொல் வருவிக்க. |
| மகிழ்ந் துரைப்பார்கள் - என்பதும் பாடம். |
| |
| 10 |
3646 | அன்றுபோய்ப் பிற்றைநா ளந்நியதிக் கணையுங்காற் கொன்றைமுடி யார்மேற்றாங் கல்லெறிந்த குறிப்புதனை நின்றுணர்வா "ரெனக்கப்போ திதுநிகழ்ந்த தவரருளே" என்றதுவே தொண்டாக வென்றுமது செயநினைந்தார். | |
| 11 |
| (இ-ள்) அன்றுபோய்...அணையும்கால் - அந்நாள் சென்று பின்னாளில் (சிவலிங்கம் கண்டபின் உண்ணுவது எனத் தாம் மேற்கொண்ட) அந்த நியதியின்படி செய்வதற்காக அணைந்தபோது;கொ ன்றைமுடியார்..நின்றுணர்வார் - கொன்றை மாலை சூடிய முடியினையுடைய இறைவரது திருமேனியின்மேல் தாம் முன்னை நாளில் கல் எறிந்த திருக்குறிப்பினைப் பற்றி நின்று உணர்வினிற் கொள்பவராய்; எனக்கு....என்று - "எனக்கு அப்போ திவ்வெண்ணம் நிகழ்வித்தது அவ்விறைவரது திருவருளேயாம்" என்று துணிந்து; அதுவே...நினைந்தார். அதுவே தாம்செய்யும் திருத்தொண்டாக மேற்கொண்டு இனி நாள்தோறும் அதனையே செய்ய எண்ணினார். |
| (வி-ரை) அன்று - கற் கண்டு அதனைப் பதைப்போடும் எடுத்தெறிந்த அன்று என முன்னறிசுட்டு; போய் - நாட்சென்று; கழித்து. |
| அந்நியதிக்கு - நாடோறும் சிவலிங்கம் முன்கண்டு உண்பேன் என்று நயந்து (3644) மேற்கொண்ட அந்த நியமமாகிய நியதியின் என முன்னறி சுட்டு; நியதிக்கு - நியமத்தின்படி செய்வதற்கு. |
| குறிப்பதனை நின்றுணர்வார் - குறிப்பு - தாம் வழிபட்டுய்ய எண்ணிய கடவுளின்றிருமேனிமேல் கல்லெறியும்படி நிகழ்ந்த அந்த ஒவ்வாத செயலின் காரணமாகிய திருக்குறிப்பு; அந்நிகழ்ச்சியின்போது "நீடோடு களியுவகை நிலைமைவர" அதன் வயமேயாகி, இது செய்வது இது தவிர்வது என்ற செயல் அறியாது - ஆராய்ந்து உணராது -செயல் செய்தனர்; அது நிகழ்ந்ததற்கோர் ஏதுவேண்டும்; அஃதெது? "அவனன்றி யோரணுவு மசையாது" என்ற உண்மைப்படி தம் செயலால் நிகழாமையின் அதனை நிகழ்வித்தவன் அனைத்துயிர்க்கு உள்ளே நின்று நியமிக்கும் சங்கரனேயாம் என்று இவ்வாறு நினைந்து உணர்ச்சியிற் றெளிவாராகி. முன்னை நாள் நினையாது செயல் புரிந்தனர்; பிற்றைநாள் அதன் காரணத்தினை ஆய்ந்து உணர்வாராயினர்; என்பதாம். நின்று - தீர நிதானித்து ஆய்ந்து; உணர்வார் - முற்றெச்சம்; உணர்வாராகி; உணர்வார் - நினைந்தார் என்று முடிக்க. |