| |
| அருளிய - அப்போது இது நிகழ்ந்தது அவர் அருளே(3646) என்று முன்பாட்டிற் றுணிந்தபடி சிவன் அருளிய. |
| அத்தொழில் - அன்பு நிறைவாகி இறைவர் திருமேனிமேற் கல்எறிந்து வழிபடும் முறைச் செயல். |
| ஒழியா....கடன் - இடையறாது தொடர்ந்து நியதியாகிய கடமையாக; புரிதல் - செய்தல் என்றலுமாம். |
| அது கண்டு - அருளால் வந்த செயல் என்ற உண்மையினைக் கண்டு; அவ்வழிபாட்டு நியதியினுடன் சிவலிங்கத்தினைக் கண்டு என்றதும் குறிப்பு; சிவலிங்கங் கண்டுண்ணும் அது நயந்து மேற்கொண்ட (3644) கருத்தினைச் செயல் முறையில் ஆற்றுநெறி அது என்று கண்டு என்ற குறிப்புமாம். |
| |
| எறிவார் - தவிரார் - தவிராமே எறிவார் என்க; தவிராராகி எறிவாராய் - இவர் செய்ய என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க. |
| மாதவர்தாம் - பசுபதியார்....ஆதலினால் - வேடம் தவிராமைக்கும், கல் எறிவதனுக்கும் நியதியாகத் தொடர்ந்து அச்செயலே செய்வதனுக்கும், மாதவர் திருமணத்தில், துணிந்த நிலைக்குங் காரணங்கூறியவாறு; துவராடை வேடத்துடன் சிவவழிபாடு செய்தல் விதிமுரண்; வழிபடும் இறைவன் மேனிமேற் கல்லெறிதலும் அவ்வாறே; அதனை வழிபாடாகிய நியதியாய்த் தொடர்ந்து செய்தலும் முரணாம்; ஆயின் இவையெல்லாம் பசுபதியார் தஞ்செயலே என்ற தெளிவு பிறந்தமையால் அமைவன என்பது துணிந்தாராதலின் அவ்வாறே செய்து வந்தனர். "நன்மை தீமை நின்செய லாதலின், நானே யமையும் நலமில்வழிக்கே" என்ற பட்டினத்து அடிகளார் திருவாக்கு இங்கு நினைவுகூர்தற் பாலது. |
| மாதவர் ஆம் இவர் - தெளிந்தாராதலினால் - வேடந் தவிரார் - கல் எறிவார் - செய்யத் தொண்டாகி முடிந்தபடி மொழிதல் - வழக்கினால் - வினை - பூசனையாம் என்று இவ்விரண்டு பாட்டுக்களையும் தொடர்ந்து முடித்துக்கொள்க. |
| துவராடைப் படம் - புத்தர்களணியும் செந்நிறப் போர்வை; இதனால் அவர்களது ஏனைக்கோல நியமங்களும் கொள்ளப்படும். அவற்றுள் திருநீறணியாமையும் கருதவைத்தார், அதனை வாக்கினாற் சொல்லலும் தகாதென்ற நியமமுடைய ஆசிரியர் என்க. இதன் உள்ளுறையினை முன் (3641) விளக்கியவாறு காண்க. இச்சரிதத்தாற் போந்த சிறந்த உண்மை இதுவேயாதலின் இவ்வாறு விதந்து கூறி முடித்துக் காட்டினார். முன்னர்த் தம் தொடக்கத்தில் "சாக்கியர் தம் வடிவினால் வரும்" (3636) என்று மேற்கொண்டதும், பின்னும் "துன்னிய வேடந் தன்னைத் துறவாதே" (3641) என்றதும் இவ்வுண்மையினைச் சிறப்பாயுணர்த்துதற்கென்க. வகை நூலுடையார் "தகடன வாடையன்" என்று தொடங்கிக் காட்டிய கருத்தினை விரித்தருளினார். "பட்டைத் துவராடைப் படிவம்" (பிள்.தேவா). |
| பசுபதியார் - பசுக்களுக்கெல்லாம் பதியாகிய தலைவர் என்ற இத்தன்மையாற் கூறியது உயிர்களின் பக்குவத்துக்கு ஏற்ப உணர்த்திச் செலுத்தும் இறைவரது தன்மையினை ஈண்டு உட்கொள்வதன் பொருட்டு. |
| தம் செயலே அடங்கலும் ஆம் - ஏகாரம் பிரிநிலை; அடங்கலும் - முரண்பாடுகளாகக் காணப்படினும் அவை முழுதும். |
| மாதவர் தாம் - தவமுதிர்ச்சியினாலே என்று அவர் தெளிந்தமைக்கும், ஏனையோர் தெளியாமைக்கும் காரணங் கூறியபடி. |
| கடன் புரிவால் - என்பதும் பாடம். |
| 12 |