| |
| 3648. (வி-ரை) நியதி - நியதியாகிய நியமச் செயலை; இரண்டனுருபு தொக்கது. |
| முன்னு திருத்தொண்டாகி முடிந்தபடி - முன்னுதல் - நினைத்தல்; நினைப்பின் தன்மையே திருத்தொண்டு நிற்கும் இடம் என்றது குறிப்பு; ஆகி - ஆக்கச் சொல் அல்லாதனவாகியவையே இவ்வாறு ஆயின என்ற விளைவு குறித்தது. "சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும், அத்தன்" (திருவாசகம்) என்ற இடத்து இது சிறந்து விளக்கப்படுதல் காண்க; முடிந்தபடி மொழியில் - முடிந்தது ; அதன் படியினைக் கூறுங்கால் - என்று பிரித்துரைத்துக் கொள்க; படியினை என இரண்டனுருபு விரிக்க; முடிந்த - விளைந்த. |
| அன்புநெறி வழக்கு - விதிவழக்கு, அன்பு வழக்கு என்றிரண்டனுள் இது பின்னைய வழக்காறுட் பட்டதென்க; இது விதி கடந்ததாகக் காணப்படினும் அன்பினால் இறைவர் ஏற்றுக்கொள்வதாம்; வைனகிகர் - மார்க்கர் என்ற வகையினர் கைக்கொள்வது விதிநெறி (விதி-மார்க்கம்) யாம் என்பர். |
| துன்னிய மெய் அன்புடனே எழுந்தவினை - துன்னுதல் - நிறைதல்; எழுந்த - உள்ளூற நிறைந்து தூண்டப்பட்ட; வினை - வழிபாடு. கல் எறிதலாகிய அத்தொழில்; அத்தொழில் பூசனையாம்; எதனாலெனின், அன்புநெறி வழக்கால் என்க. வழக்கு - முறைமை; இது கவிக்கூற்று. "அருளொடும் தாழ்வுறும் வழக்கால்" (அமர்நீதி. புரா - 536) |
| |
| தூயவர் - சிவபெருமான்; இயல்பாகவே பாசங்களி னீங்கியவர்; தூய்மையைச் செய்பவர் என்ற குறிப்புமாம்; வினை தூய்மையற்றதாயினும் அத் தன்மையினைப் போக்கித் தூய்மை செய்து ஏற்றுக்கொள்பவர் என்ற குறிப்புமாம். |
| மன்னும் மிகு பூசனை - மன்னுதல் - நிலைபேறு பெறுவித்தல்; மிகுதல் - தன்னியல்பின் மிக்குச் சிறத்தல். |
| தொண்டர் நிலை - பூசனையே யாமன்பு வழக்கினால் - என்பனவும் பாடங்கள். |
| 13 |
3649 | கல்லாலே யெறிந்ததுவு மன்பான படிகாணில் வில்வேடர் கெருப்படியுந் திருமுடியின் மேவிற்றால்; நல்லார்மற் றவர்செய்கை யன்பாலே நயந்ததனை அல்லாதார் கல்லென்ப ரரனார்க்கஃ தலராமால். | |
| 14 |
| (இ-ள்) கல்லாலே....காணில் - கல்லினாலே எறிந்த செயலும் அன்பினாற் செய்யும் திருத்தொண்டேயாயின தன்மையினை ஆராய்ந்தால்; வில்வேடர்....மேவிற்றால் - வில் ஏந்திய கண்ணப்ப நாயனாரது செருப்படியும் இறைவரது திருமுடியிற் பொருந்தப்பெற்றதாயின தன்மை கண்டோ மாதலின்; நல்லார்....கல்லென்பர் - நல்லாராகிய மற்று அச்சாக்கிய நாயனார் அன்பினாலே விரும்பிய அச்செய்கையினை அல்லாதவர்கள் அவர் எறிந்தது கல் என்று சொல்வார்கள்; அரனார்க்கு அஃது அலர்ஆம் (ஆல்) - சிவபெருமானுக்கு அஃது அலரே ஆகும். (ஆல் - அசை) |
| (வி-ரை) முன்பாட்டிற் கூறிய முடிபினை உதாரண முகத்தால் மேலும் விளக்கி முடித்துக் காட்டியவாறு. |
| இப்பாட்டும் முன் "அக நிறைந்த" (3645) என்ற பாட்டும் சிதம்பரத்துப் பிரதியில் இல்லை. |
| அன்பான - அன்பினாற் செய்யும் தொண்டாகிய; அன்பு - அன்பாற் செய்யும் தொழிலுக்காகி வந்தது; படி - படியினை - நிலையினை; இரண்டனுருபு விரிக்க. |