| |
| வரே அறிவார்; உலகரால் இன்னதென்று கண்டு துணியலாகா தென்பது. "நாளுமற் றவர்க்கு நல்கு நம்பர்தா மளக்கி லன்றி, நீளுமித் தொண்டி னீர்மை நினைக்கிலா ரளங்க வல்லார்" (606) என்ற நிலையினை இங்கு நினைவு கூர்க. |
| அவர் தாள்சூடி - மேற்சரிதம் கூறுதற்குத் துணை செய்ய என்பது குறிப்பு. |
| சூடிச் செப்பித் - தீது - நீக்கலுற்றேன் என்க. |
| "கல்லா லெறிந்த பொல்லாப் புத்த, னின்னினைந் தெறிந்த வதனா, லன்ன வன்றனக்கு மருள்பிழைத் தன்றே" (திருவிடை - மும் - கோ.25) என்ற திருவாக்கும் ஈண்டு இச் சரித ஆதரவாகக் காணத்தக்கது. |
| 18 |
| |
| |
| சரிதச்சுருக்கம்: - திருச்சங்க மங்கைப் பதியிலே வேளாளர் குலத்திலே ஒரு பெரியவர் அவதரித்தார். அவர் எல்லா உயிர்களிடத்தும் அருள் பூண்டு ஒழுகி வந்தார். பிறவிச் சூழல் நீக்கும் வழியினை ஆராய்வாராய்த் திருக்காஞ்சி நகரில் வந்தார். முதலிற் சாக்கியர் புத்தர்களது அறத்தின் வழிச்சார்ந்து நல்ல ஞான மடைவதற்குப் பல வழிகளையும் அவர்கள் நூல்களைப் பயின்று ஆராய்ந்தனர். ஏனையவற்றையும் பயின்றாராய்ந்தார். புத்தரது சமய ஞானமும் சமண முதலாகிய ஏனைப் புறச்சமய முடிவுகளாகிய ஞானங்களும் பொருளல்ல என்றும், ஈறில் சிவநன்னெறியே பொருளாவதென்றும் உணர்ந்தார். சிவனை அடைவதே உய்யும் வகையென்று அருளாலே உணர்ந்தார். |
| எந்நிலையினின்றாலும் எந்தக் கோலம் கொண்டாலும் சிவன்றாள் மறவாமையே பொருள் என்றும் துணிந்தார். ஆதலினால் புத்த வேடமாகிய துவராடை முதலியனவற்றைத் துறவாதே, சிவனை மறவாது பணிசெய்வாராயினார். சிவனை அடைவதற்குச் சிவலிங்க வழிபாடு சிறந்த வழி என்று தெளிந்தார். நாடோறும் சிவலிங்கம் கண்டு உண்ணும் நியதியினை அவ்வழிபாடாகக் கொண்டனர். |
| அத்துணிபால் வெளியிடையே ஒரு சிவலிங்கங் கண்டார்; கண்ட உடன் நீளும் களிஉவகை நிலைமை வந்தது; செய்வதின்ன தென்றறியாராயினர்; பதைத்தனர்; பக்கத்திருந்ததோர் கல்லினைப் பறித்து அன்புடனே சிவலிங்கத் திருமேனிமேல் அருச்சனை வழிபாடாக எறிந்தார். பிற்றை நாள் வழிபடச் சென்ற போது முன்னை நாள் நிகழ்ச்சியின் குறிப்பினை நினைந்தனர். அது சிவனருளால் நிகழ்ந்ததென்று உணர்ந்து அதனைத் தவிராது தொடர்ந்து நாடோறும் செய்து வந்தனர். அன்புநெறி வழக்கினால் அதுவே சிவனுக்குச் சிறந்த பூசனையாயிற்று. |
| ஒருநாள் நினைந்த அந்நியதியினை மறந்து உண்ணப்புகுந்தனர்; உடனே உண்டி வினை ஒழித்து எழுந்து காதலுடன் ஓடிவந்து கல் எறிந்தனர். இறைவர் அவரது செயலினையும் வேட்கையினையும் உடன்கண்டு விடைமேல் எழுந்தருளிக் காட்சி கொடுத்து அவருக்குச் சிவலோகத்தில் பழவடிமைப் பாங்கு அருளினார். |
|
|
| கற்பனை:- 1. எல்லா உயிர்களிடத்தும் அருளுடையாராக வாழ்தல் பெரியோரியல்பு. (3637) |
| 2. பிறந்திறக்கும் நிலை ஒழிவேன் என்று அஞ்சி அதற்கு உரிய வழி தேடுதல் அறிவுடைய மக்கள் செயல். (3637) |
| 3. காஞ்சிபுரம் முன்னாளில் பல சமயத்தவர்களும் சமய விசாரணை நடத்தும் கழகங்களைக் கொண்டிருந்தது. |