| |
| உ சிவமயம் |
| 35. சிறப்புலி நாயனார் புராணம் |
| தொகை |
| "சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கு மடியேன்" | |
| (6) |
| - திருத்தொண்டத் தொகை |
| வகை |
| "புவனியிற் பூதியுஞ் சாதன மும்பொலி வார்ந்துவந்த தவநிய மர்க்குச் சிறப்புச்செய் தத்துவ காரணனாம் அவனியிற் கீர்த்தித்தென் னாக்கூ ரதிப னருமறையோன் சிவனிய மந்தலை நின்றதொல் சீர்நஞ் சிறப்புலியே" | |
| (42) |
| - திருத்தொண்டர் திருவந்தாதி |
| விரி |
3654 | பொன்னிநீர் நாட்டி னீடும் பொற்பதி புவனத் துள்ளோர் "இன்மையா லிரந்து சென்றோர்க் கில்லையென் னாதே யீயுங் தன்மையா" ரென்று நன்மை சார்ந்தவே தியரைச் சண்பை மன்னனா ரருளிச் செய்த மறைத்திரு வாக்கூ ராக்கூர் | |
| 1 |
| புராணம்: - இனி, நிறுத்த முறையானே ஏழாவது, வார்கொண்ட வன முலையாள் சருக்கத்தில், இரண்டாவதாகச் சிறப்புலி நாயனார் புராணங் கூற த் தொடங்குகின்றார் ஆசிரியர்; சிறப்புலி நாயனாரது சரித வரலாறும் பண்பும் கூறும் பகுதி. |
| தொகை: - சிறப்பினைக்கொண்ட புகழையுடைய வள்ளலாகிய சிறப்புலி நாயனாருக்கும் நான் அடியேனாவேன். |
| சீர்கொண்ட - சீர் - சிறப்பு; சீராவது சிவனடியாரை வழிபட்டு வேண்டுவன நல்கும் பதிபுண்ணியச் சிறப்பு; "தவநியமர்க்குச் சிறப்புச் செய் தத்துவன்" (வகை); புகழ் வள்ளல் - "இரப்பார்க்கொன், றீவார்மே னிற்கும் புகழ்" (குறள்) என்றபடி இரப்போர்க் கில்லையென்னாது ஈயும் கொடைத் தன்மையால் வள்ளல் எனப் பெற்றவர். இது பசு புண்ணியம்; "அவனியிற் கீர்த்தி" (வகை); இவற்றை ஆசிரியர் இம்முறையே (3657 - 3658) பின்னர் விரித்தல் காண்க. சிறப்புலி - நாயனார் பெயர்; உம்மை முன் துதிக்கப்பட்டோர்களுடன் இவருக்கும் என இறந்தது தழுவிய எச்சவும்மை எண்ணும்மையுமாம். |
| வகை: - புவனியில்....காரணனாம் - இவ்வுலகத்திலே திருநீறும் அக்கமணியும் விளங்க வணிந்து வந்த மாதவ நியமமுடைய அடியார்களுக்குச் சிறப்புச் செய் |