| |
| சிறப்புடைத் திருச்செங் காட்டங் குடியினிற் செம்மை வாய்த்த விறற்சிறுத் தொண்டர் செய்த திருத்தொழில் விளம்ப லுற்றேன். | |
| 9 |
| (இ-ள்) அறத்தினின்....வாழ்த்தி - சிவதருமங்களால் மிகுந்த மேன்மை பெற்ற அந்தணர்கள் வாழும் திருவாக்கூரில் வந்த வேதியராகிய பெருவள்ளலார் வண்மையுடைய சிறப்புலியாரை வாழ்த்தி; சிறப்புடை....விளம்பலுற்றேன்- (அத்துணை கொண்டு) சிறப்பினையுடைய திருச்செங்காட்டங்குடியிலே செம்மைநலம் பொருந்திய விறலினையுடைய சிறுத்தொண்ட நாயனார் செய்த திருத்தொழிலினைச் சொல்லப் புகுகின்றேன். |
| |
| (வி-ரை) இது கவிக்கூற்று. ஆசிரியர் தம் மரபின்படி, இதுவரை கூறி வந்த சரிதத்தை வடித்தெடுத்து முடித்துக்காட்டி இனி வரும் சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்கின்றார். |
| அறம் - சிவதருமம். வைதிக தருமமுமாம். |
| மேன்மை அந்தணர் ஆக்கூர் - மேன்மையுடைய அந்தணர்கள் வாழும் திருஆக்கூர். ஆளுடைய பிள்ளையார் திருவாக்கிற்பட்ட மேன்மை குறித்துத் தொடங்கியவாறே முடித்தபடி; மீண்டும் குறிப்பிட்டது அச் சிறப்பினை மறவாது உட்கொண்டு நினைவு கூர்தற்பொருட்டு. |
| வள்ளலார் - தொகைநூற் கருத்தினை வற்புறுத்தி மனங்கொள வைத்தார். |
| வள்ளலார் வண்சிறப்புலியார் - வள்ளலார் என்றது பண்பினையும், வண்மை என்றது செயலினையும் குறித்தன; வள்ளற் றஞ்செயல் வாய்ப்ப - என முன்கூறியது காண்க; இஃது இச் சரிதச் சிறப்பாகிய பகுதி என அறிவித்தவாறு. வள்ளலார் என்றது புகழ்தரும் ஈகைத்திறத்தினையும், வண்மை என்றது அடியார்களைப் பேணிய நிலையினையுங் குறித்தன என்றலுமாம். |
| சிறப்புடை - பழஞ் சரிதத் தொடர்பாகிய சிறப்பு. |
| செம்மை வாய்த்த விறல் - செம்மை - "தெள்ளிவடித் தறிந்தபொருள் சிவன் கழலிற் செறிவென்றே....அன்பு பள்ளமடை யாயென்றும் பயின்றுவரும் பண்பு" உடைமை (3663); விறல் - அப்பண்பில் ஒழுகும் ஆற்றல்; செவ்விய நெறியின் படைத் தொழில் விறலுமாம். (3666) |
| திருத்தொழில் - திரு - இவர் செய்த செயலின் பேரருமைப்பாடு குறித்த அடை மொழி. |
| 6 |
| |
| சரிதச் சுருக்கம்: - காவிரிபாயும் சோழநாட்டிலே சிறந்த பதி திருஆக்கூர் என்பது; அப்பதி, ஆளுடைய பிள்ளையார் திருவாக்கினால் ஈகைத் திறம் பற்றிப் பாராட்டப் பெற்ற சிறப்புடைய அந்தணர்கள் வாழும் பெருமையுடையது. அதில் வேதியர்குலத்து வந்தவர் சிறப்புலிநாயனார். |
| அவர் ஈகையினாற் புகழ்பெற்று விளங்கியதனோடு அடியார்க்களிக்கும் சிவபெருமான் திருத்தொண்டிலும் சிறந்து விளங்கினார். சிவன் அடியார்களை விதிப்படி வழிபட்டு அமுதூட்டி அவர்கட்கு வேண்டுவன நல்கி வந்தார்; திருவைந்தெழுத்தினை ஓதி முத்தீ வேட்டனர்; சிவ நல்வேள்விகளைச் செய்தனர்; உலகில் வள்ளற்றன்மை பொருந்த நிதிமழை மாரிபோல அத்திறத்தினின் மேம்பட்டு நிகழ்ந்தனர். இவ்வாறு புகழும் சிறப்பும் பொருந்தப் பணிசெய்து சிவனடி சார்ந்து நிலைபெற்றனர். |
| |