| |
| கருதுக.) இவையெல்லாம் அறிந்து வைத்தும் அரசன் உலகியல் அரசினும் சிவன்றொண்டே பெரிது என்றும், சிவன்றொண்டரை வணங்கி, அவர் வழியொழுகுவதன்றித் தன்கீழ்ச் சேவகத்தில் வைத்து ஏவல் கொள்ளுதல் அடாத பாவம் என்றும் உண்மை நீதியினை உணர்ந்தானாதலின் அவ்வழி ஒழுகினான் என்பார் அறம்புரி செங்கோல் அரசன் என்று சிறப்பித்தார். செங்கோல் - அரசின் உலகியல் நிலை; அறம்புரி - அரசின் உயர்ந்த தெய்வநிலை. அறம் - சிவனியமமாகிய வேத சிவாகமங்களின் மேலாக முடித்துக் கூறும் சிவ தரும விதிகள் என்ற பொருளில் வந்தது. |
| உரைக்கின்றான் - சொல்வானாகி, முற்றெச்சம்; உரைக்கின்றானாகி - என - விடை கொடுத்தான் என்று மேல் வரும் பாட்டுடன் முடிக்க. |
| எதிரிறைஞ்சி - என்பதும் பாடம் . |
| 9 |
| 3669. (வி-ரை) இது அரசன் கூறிய முடிவும் தீர்ப்பும் ஆகும். பரஞ்சோதியார், தமது உரிமைத் தொழிலின் கடமையே செய்தேன், அதனிற் றீங்கில்லை என்று கூறியதனை அரசன் ஏற்றுக் கொள்ளவில்லை. உலகியற் கடமைகளினியல் வேறு; சிவனடிமைத்திறத்தின் பண்பு வேறு; பின்னையது அதனினும் சிறந்தது; மேலாய்க்கொண்டுய்க்கத் தகுந்தது. அரசியல், மக்களின் உடம்பின் நன்மைகளையே கருதி அதனோடொழிவது; சிவனியலாகிய பண்பு அதனின் மேம்பட்ட உயிரின் நன்மை பற்றியது என்பதாம். |
| உம்முடைய....உய்த்தீர் - நிலைமை - உயர்ந்த நிலை; அறியாமை - பிறர் அறியாத வண்ணம். உய்த்தல் - செலுத்துதல்; அறியாமற் கொண்டுய்த்தோம் என்ற பாடம் சிறப்பின்று. சிவன் திருத்தொண்டு, அன்பினாலே சிவனும் உயிருமே அறியச் செய்வதன்றி, உலகரறிய ஆரவாரமாகச் செய்வதன்று என்பது சிறந்த ஒழுக்கமாம். |
| எம்முடைய....இசைந்து - இதனை நீர் மறுக்கலாகாது என்று அரசன் வேண்டியபடி. |
| மெய்ம்மை புரி உமது செயல் - என்க; மெய்ம்மை புரி - மெய்யாகிய (சத்) இறைவர்பாற் செய்யும் அன்பின் றிறங்கள். |
| வேண்டியவாறே சரித்து - அன்பின்றிறம் வெளிப்பாடாகும் நிலைகளும், அதுபற்றி மேற்கொள்ளும் செயல்களும் பலவாதலின் அவற்றுள் உமது கருத்துக்கிசையுமாறு வேண்டியவாறே என்பது; சரித்தல் - உலகத்தில் ஒழுகி வாழ்தல். இஃது உலகியல் பற்றியது. இசைந்து - உய்த்தீர் - என்று கூட்டியுரைக்கவும் நின்றது. |
| செம்மை நெறி....செய்யும் - இஃது உயிரினியல் பற்றி அரசன் கொண்ட விருப்பம். செம்மை - சிவத்தன்மை. |
| விடைகொடுத்தான் - விடை - அரச சேவையினின்றும் விடுதி. |
| இசையுமிது - என்பதும் பாடம். |
| 10 |
3670 | மன்னவனை விடைகொண்டு தம்பதியில் வந்தடைந்து பண்னுபுகழ்ப் பரஞ்சோதி யார்தாமும் பனிமதிவாழ் சென்னியரைக் கணபதீச் சரத்திறைஞ்சித் திருத்தொண்டு முன்னைநிலை மையின்வழுவா முறையன்பிற் செய்கின்றார், | |
| 11 |
3671 | வேதகா ரணரடியார் வேண்டியமெய்ப் பணிசெய்யத் தீதில்குடிப் பிறந்ததிரு வெண்காட்டு நங்கையெனுங் காதன்மனைக் கிழத்தியார் கருத்தொன்ற வரும்பெருமை நீதிமனை யறம்புரிய நீர்மையினை நிலைநிற்பார், | |
| 12 |