| |
| சீர்பெருகச் செய்யவளர் திருமகனார் சீறடியிற் றார்வளர்கிண் கிணியசையத் தளர்நடையின் பதஞ்சார்ந்தார். | |
| 20 |
| (இ-ள்) ஆர்வ....அளித்து - பெருவிருப்புடைய பெருஞ் சுற்றத்தார்களெல்லாம் மனமகிழக் கொடுத்து; அவர் தாம்....செய்ய - அந் நாயனார், உலகத்திற் பெருகும் மகிழ்ச்சியுடனே அவ்வப் பருவங்கடோறும் செய்யப் பெறும் சடங்குகளை எல்லாம் சிறப்புப் பெருகச் செய்ய; வளர்....சார்ந்தார் - வளரும் திருமகனாராகிய சீராள தேவர் தமது சிறிய திருப்பாதங்களில் மாலையாகக் கோத்த கிங்கிணிச் சதங்கை அசையும்படி தளர்நடைப் பருவத்தினைச் சார்ந்தனர். |
| (வி-ரை) ஆர்வநிறை....அளித்து - சுற்றத்தார்க்கு மிகச் சிறப்புடன் வரிசைகள் தந்து; இஃது இம்மகிழ்ச்சி சடங்குகளும் ஒன்று; அடியார்க்கு நிதியளித்தலைச் சிறப்பும் பயனும் பற்றி முன்னர்க் கூறினார். |
| பார்பெருகு மகிழ்ச்சி - உலகில் உள்ளார்களும் பெருமகிழ்ச்சி கொள்ளுதல் ஈகைத் திறத்தினாலாவது. |
| பருவமுறைப் பாராட்டு - செங்கீரைப் பருவ முதலாக வகுத்துச் சொல்லப்பட்ட பிள்ளைப் பருவங்களிற் செய்யும் சிறப்புக்கள்; ஆளுடைய பிள்ளையார் புராணம் பார்க்க. சீர் - இவை சந்தி மிதிப்பித்தல் - அன்னமூட்டுதல் முதலியவை என்பாருமுண்டு. |
| கிண்கிணி - சதங்கை; ஒலிக் குறிப்புப் பெயர், இங்குக் கூறியது திருவடியிற் சாத்தும் அணி. |
| தளர் நடையின் பதம் - ஓராண்டு நிறைவு அணையும் பருவம். |
| தார்வளர் - தார்போல என்றலுமாம். |
| 20 |
3680 | சுருளுமயிர் நுதற்சுட்டி துணைக்காதின் மணிக்குதம்பை மருவுதிருக் கண்டநாண் மார்பினிலைம் படைகையிற் பொருவில்வயி ரச்சரிகள் பொன்னரைஞாண் புனைசதங்கை தெருவிலொளி விளங்கவளர் திருவிளையாட் டினிலமர்ந்தார். | |
| 21 |
| (இ-ள்) வெளிப்படை. சுருளுடைய மயிர் நிறைந்த நெற்றியிலே சுட்டியும், இரண்டு காதுகளிலும் குதம்பைக் காதணிகளும், திருக்கழுத்திற் பொருந்தும் கண்ட சரமும், மார்பில் ஐம்படைத் தாலியும், கைகளில் ஒப்பற்ற வயிரத்தாலாகிய சரிகளும், (இடையில்) பொன்னரை ஞாணும், திருவடியிற் பூணுகின்ற சதங்கையும் ஆகிய இவற்றைப் பூண்டு தெருவிலே ஒளிவிளங்க வளரும் பிள்ளைத் திருவிளையாட்டிலே விரும்பியிருந்தனர் (சீராள தேவர்). |
| (வி-ரை) இத்திருப்பாட்டினாலே சீராளதேவரைப் பிள்ளைப் பருவத்தே அணி செய்த திருக்கோலம் கேசாதிபாதம் கூறப்பட்டது. திருவுரு அணிசெய் தரிசனம். |
| சுருளுமயிர் நுதல் - மயிர் சுருண்டிருத்தலும், நெற்றியிற் சுருண்டு வீழ்தலும் உடல் அழகிலக்கணங்கள் என்பர். |
| குதம்பை - காது வளர்ச்சிக் கிடும் காதணி என்பர்; ஈண்டு (மணி - அழகு;) அழகிய காதணி என்ற அளவில் பொருள் தந்து நின்றது; மணி - இரத்தினமுமாம். |
| திருக்கண்ட நாண் - திருக்கண்டத்தில் - நாண் என்க. நாண் - பொற்சரம். |