| |
| 3696. (இ-ள்) வந்தணைந்து.....வணங்கி - வந்து சேர்ந்து கேட்கின்றவர் மாதவராகிய அடியவரே யாவர் என்று உட்கொண்டு சந்தனத்தாதியார் என்ற அம்மையார் முன்னால் வந்து அரவது திருவடிகளை வணங்கி; அந்தமில்.... அருளும் என - எல்லையில்லாச் சிறப்பினையுடைய அடியவர்களைத் தேடும் பொருட்டு அவர் புறத்தே சென்றனர்; எம்மையாளுடைய முதல்வரே? அகத்துள்ளே எழுந்தருளுவீராக என்று சொல்ல, |
| 37 |
| 3697. (இ-ள்) மடவரலை....என்றருள - அவ்வம்மையாரைப் பார்த்துப் "பெண்கள் தாம் தனியே இருந்த இடத்தில் நாம் தனியே புகுத மாட்டோம்" என்று அருளிச்செய்ய; அது கேட்டு.....எய்தி - அதனைக்கேட்டு அவர் அவ்விடம் விட்டுச் சென்று விடுவார்போல இருந்தார் என அஞ்சி விரைந்து மனையின் கடமை முற்றும் உடையவராகிய திருவெண்காட்டு அம்மையார் உள்ளிருந்து மனையின் முன்கடையில் வந்து, |
| 38 |
| 3698. (இ-ள்) அமபலவர் அடியாரை.....போனார் - திருவம்பலமுடைய இறைவரடியார்களைத் திருவமுது செய்விக்கும் நியமமுடைய அவர், அந்நியம முடித்தற்கு, எமது பெருமானே! இன்று அடியார் எவரையும் காணாமையால் தேடிச் சென்றார்; வம்பென......மகிழ்வர் - புதிதாக நீர் எழுந்தருளி வரும் இத்திருவேடத்தினைக் கண்டால் தமது பெரும் பேறென்றே மிகவும் மகிழ்ச்சியடைவர்; இனித் தாழார் - இனித் தாமதிக்க மாட்டார், |
| 39 |
| 3699. (இ-ள்) இப்பொழுதே......என்ன - இப்போதே விரைவில் வந்து அணைகுவர்; அவ்வளவும் தேவரீர் இங்கு எழுந்தருளி யிருக்கவேண்டும் என்று கூற; ஒப்பில் மனை......என்றருளி - ஒப்பற்ற இல்லறத்தை வழுவாது காத்து நடத்துகின்றவர்களே! வடதேசத்தில் உள்ளோம்; சொல்லுதற்கரிய சிறப்பினையுடைய சிறுத்தொண்டரைக் காணும்பொருட்டு இங்கு வந்து சேர்ந்தோம் யாம்; எவ்வகையாலும் அவர் இல்லாதபோது இங்கு இரோம் என்று அருளிச் செய்து, |
| 40 |
| 3700. (இ-ள்) கண்ணுதலிற் காட்டாதார் - நுதற்கண்ணை மறைத்து வந்த அவர்; கணபதீச்சரத்தின்கண்.....என்றருளி - கணபதீச்சரத்திலே அழகிய மலர்களை உடைய திருவாத்தியின் கீழே சென்று அமர்கின்றோம்; அவர் வந்தால் நாம் அங்கிருக்கும் தன்மையினைச் சொல்வீராக என்றருளிச் செய்து; அண்ணலார்.....இருந்தார் - இறைவனார் திருவாத்தி மரத்தினடியிற் சேர்ந்தருளி விரும்பி எழுந்தருளியிருந்தனர். |
| 41 |
| இந்த ஆறுபாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
| 3695. (வி-ரை) தண்டாதது ஒரு வேட்கை - பெரும்பசி; தண்டாத - தணியாத; ஒரு - ஒப்பற்ற; அளவற்ற. |
| போல - பசியில்லாராயினும் பசியுடையார் போல நடித்தனர் என்க. சோறிடுவர் மனை வினவும் தொழில் பற்றி வந்த உவமம். |
| கண்டாரை - தம்மாற் காணப்பட்டார்களை; தம்மைக் கண்டுவினவும் பேறு பெற்றாரை என்றலுமாம். |