| |
| தொண்டானார்க்கு....திருத்தொண்டர் - இவ்வாறு அழைத்துக்கூறுதல் அவரது தன்மையறிந்த நிலையும், சோறு வேட்ட தமது பசியினையும் புலப்படுத்தலாம். |
| இம்மனைக் குள்ளாரோ? - இங்கு மனையில் இருக்கின்றாரோ?என்று வினவிய படி. மனைக்கு - மனையில்; நான்கனுருபு ஏழன்பொருட்டு; உருபு மயக்கம். |
| சோறளிக்குஞ் சிறுத்தொண்டர் - என்பதும் பாடம். |
| 36 |
| 3696. (வி-ரை) வந்து....என்று - இது அவர் வினவுதல் கேட்டுத் தாதியார் கொண்ட கருத்து; மாதவர் - அடியார்; தவம் - சிவனடிமைத் திறத்தின்நிலை; சிவவழிபாடு; மாதினை ஒரு கூறுடைய சிவனேயாம் என்ற குறிப்புமாம். |
| சந்தனமாம் தையலார் - சந்தனத்தார் என்னும் பெயருடைய தாதியார். "சந்தனத்தாரெனும் தாதியார்" (3734); முன்வந்து - வெளியிலிருந்து உசாவி வந்தவர்களுக்கு விடை கூறி அறிவிப்பது முதலில் தாதியார் கடமை என்பது. |
| தாள் வணங்கி - அடியாரை வணங்கி விடை கூறும் மரபு. |
| அந்தமில் சீர் அடியாரைத்தேடி - அடியார் பெருமைகளை அக்குடும்பம் அறிந்து ஒழுகிய நிலை புலப்படக் கூறிய திறமும் மரபும் காண்க. |
| எந்தமை ஆளுடையவரே - இஃது அடியார்களிடத்து அவர்கள் பத்தியுடன் ஒழுகும்நிலை காட்டியபடி; இங்கு வந்தவர் இறைவரே என்பதும், அவர் இத்தாதியாரை யுள்ளிட்டு இக்குடும்ப முழுமையும் அன்று ஆட்கொள்ள வந்தவர் என்பதும் உட்குறிப்புப் படத் தாதியார் வாக்கில் அவரை அறியாமலே போந்தவாறும் கண்டுகொள்க. |
| அகத்துள் எழுந்தருளும் - எம் அகம் (மனம்) நீங்காதுறையும் என்ற குறிப்பும் காண்க. |
| மாதவரேயோ வென்று - என்பதும் பாடம். |
| 37 |
| 3697. (வி-ரை) "மாதரார்....தனிபுகுதோம்" - இஃது சிறப்புடையதோர் உலகியல் நீதி: உலகர் பின்பற்றி ஒழுகத்தக்க பெருநீதியும் நாகரீகத் தன்மையுமாம். |
| தனிபுகுதோம் - நமது அருட்சத்தியாகிய தேவியுடனும் திருமகனாருடனும் பின்னர் வரவுள்ளோம் என்பது குறிப்பு. |
| விட அகல்வார் போலிருந்தார் என வெருவி - விட - அவ்விடத்தை விட்டு நீங்கிவிட; அகல்வார் - வேறிடம் சென்று விடுவார்; வெருவி - அன்று அடியாரைக் காணாது தேடியிருந்த நிலையில் தாமாகவே போந்தவரையும் நழுவவிட நேருமோ என்று அஞ்சி; விரைந்து - விரைவு -இல்லறம் வழுவாதியற்றுதலின் ஆர்வம்; அவர் அகன்று விடும் முன்பே வரும் விரைவுமாம். |
| மனைக்கடனுடைய - இல்லறப் பாரம் முழுமையும் தாமே கடமையாகப் பூண்ட; திருக்குறள் பார்க்க. "மனையறத்தின் வேராகி" (3676). |
| கடைத்தலை எய்தி - முற்றத்தின் முன்வாயிலில்; மனைப்புறம் போகாது இயல்பினாலே மனையினுள் இருந்து ஏவலர் மூலம் மனையின் நிகழ்ச்சிகளைச் செலுத்துவது, உயர்ந்த வாழ்க்கைத் திறமுடைய மனைக்கிழத்தியரது நிலைமை; இங்கு முன் கூறியபடி வெருவுதலால் அதனை நீக்கத் தாமே வெளிப்போந்தனர் என இச்செயலால் அவ்வில்லறத்தினும், அடியார் பணியில் வழுவாவகை வைத்த உறைப்புப் புலப்படுதல் காண்க. |
| மடவரல் - பெண்மை நாற்குணங்களுள் மடமை யுடையவள். |
| 38 |