| |
| புலால் உணவு எவ்வகை அகச் சமயத்துக்கும் உடன்பாடன்று; இங்குப் பசு என்பது ஆன் என்றுரைப்பாரு முண்டு; "அமுதாம் பசுத்தான் இன்னதென" "மேல், நரப்பசுவாம்" என்பனவும் பசு என்பதன் பொதுமைப் பொருளை விளக்குதல் காண்க. யாம் உண்பது என்று கூட்டுக; நியமம் என்பது குறிப்பெச்சம், |
| அதற்கு உரிய நாளும் இன்றே - என்க; அதற்கு - அவ்வாறு மூவிருது கழித்துண்பதற்கு; இன்றே - தேற்றேகாரம் விரிக்க; ஆல் அசை. |
| ஊட்ட உமக்கு அரிதாம் - இதனை மீண்டும் சொன்னது தொண்டரது ஆசையினையும் ஆர்வத்தினையும் உறுதிப்பாட்டினையும் மிகுவித்தற்கு. |
| 48 |
3708 | "சால நன்று! முந்நிரையு முடையேன்; தாழ்விங் கெனக்கில்லை; ஆல முண்டா ரன்பருமக் கமுதாம் பசுத்தா னின்னதென ஏல வருளிச் செயப்பெற்றால் யான்போ யமுது கடிதமைத்துக் காலந் தப்பா மேவருவே" னென்று மொழிந்து கைதொழுதார். | |
| 49 |
| (இ-ள்) வெளிப்படை. (அதுகேட்ட சிறுத்தொண்டர்) "மிகவும் நன்று அடியேன் மூன்றுவகை நிரைகளையும் உடையேன்; எனக்கு இங்குக் குறைவில்லை; விடத்தினை உண்டருளிய சிவபெருமா னன்பர் உமக்கு அமுதாகின்ற அந்தப் பசுத்தான் இன்னதென்று பொருந்தும்படி அருளிச் செய்யப் பெற்றேனேல் அடியேன் சென்று விரைவில் அமுது அமைத்து உணவுக்குரிய காலம் தப்பாமே வருவேன்" என்று கைதொழுது உரைத்தனர். |
| (வி-ரை) சால நன்று - பசு வீழ்த்திட உண்பது என்றாராதலின், தாம் பசுவின் நிரைகளாற் குறைவின்றி உடையராதலின் மிக நன்று என்று மகிழ்ந்தார். |
| முந்நிரை - நிரை; பசுக்கூட்டம், ஆட்டுக் கூட்டம், எருமைக் கூட்டம் என்ற இவை முந்நிரை எனப்படும். |
| இங்கு எனக்குத் தாழ்வில்லை - என்க. தாழ்வு - குறைவு. |
| ஆலமுண்டார் அன்பர் உமக்கு அமுதாம் பசுத்தான் - ஆலால முண்ட பெருமானடியாராதலின் நீர் பசுப்படுத்துப் பெறும் அமுது உண்பதில் குறைவில்லை என்றதும் குறிப்பு. பசு - உணவுப்பொதுமை குறித்தது. அன்பர் - அன்பராகிய. |
| இன்னது என - அந்தப் பிராணி வகையுள் எது என்று. |
| கடிதமைத்துக் காலம் தப்பாமே வருவேன் - அடியாரை அமுதூட்டும் ஆர்வமும் பெருமுயற்சியும் குறித்தது. |
| முன்நிரையும் உடையேன் - இங்கு வடநாட்டு அடியார் மாமிசம் உண்பவர்கள் என்றும், கோமாம்சம் கேட்பதற்கென்றே வடநாட்டு அடியார் வேடம் பூண்டு இறைவர் வந்தனர் போலும் என்றும், பசுவூன் இதுவரை எந்த அடியாரும் கேட்டதில்லை என்றும், இப்போது இது கேட்டபோது இது தகாதென்று மறுத்திருப்பின் அடியார் வேண்டிய தளித்து அமுதூட்டும் நியமம் தவறிவிடும் என்றும், ஆதலின் அதனை மறாது முந்நிரையும் உடையேன் என்றார் என்றும் இங்கு, விசேட ஆராய்ச்சி செய்வாருமுண்டு; இங்குக் பசு என்பது ஆன் - (கோ) என்ற பொருள் படவந்ததன்று என்பது முன் உரைக்கப்பட்டது. நாயனார், தமது மாமாத்திரர் குலமரபின் றன்மையால் புலாலுணவு விலக்கியவரல்லர் என்பது, புலாலுணவைத் தாமே அமைக்கும் திறத்தானும், சந்தனத் தாதியார் தலையிறைச்சியமைத்த திறத்தானும்,சந்தனத் தாதியார் தலையிறைச்சியமைத்த திறத்தானும், இவை பற்றியே உத்திராபதியார் இவர்பால் பசுப்படுத்த புலால்) அமுது வேண்டினார் என்ற நிலையாலும் கருத உள்ளன. |