| |
| குஞ்சி திருத்துதல் - முதலியவை குழந்தைகளைத் தாய்மார் கண்டுழிப் பரிந்து செய்யும் செயல்கள் என்பர்; இவை தன்மையணி நயம்; அவ்வியல்புபற்றி இவை செய்தார் திருவெண்காட்டு நங்கையார் என்பாருமுண்டு; அடியார்க் கமுதாக ஆக்கும் பண்டமாக அம்மைந்தரது திருவுடம்பு அப்போது கொள்ளப்பட்டமையால் அப்பண்டத்தினைக் கழுவிச் செப்பமாக்கும் வகையால் அவ்வெண்ணத்துடன் இவை செய்யப்பட்டன என்பதாம். "அச்சமெய்திக் கறியமுதாமென்னு மதனால் - உச்சி மோவார் - அணைத்தே - முத்தந்தாமுண்ணார்" என மேற்கூறுமாற்றால் இக்கருத்துப் புலப்படுமாறறிக. |
| குஞ்சி - ஆண் மக்களின் தலைமயிர்; முகந்துடைத்தல் - வியர்வையினையும், படிந்த மாசுகளையும் போக்குதற்கு; "குஞ்சியழகும்.....மஞ்சள் அழகும்" (நாலடி) என்பதும் காண்க. குஞ்சி - குடுமி. குஞ்சி - முகம்-உம் வேற்றுமைத் தொகை. |
| கொட்டை - அரைநாண் - கொட்டை - கடுக்கன் - காதணி; உம்மைத் தொகை; கொட்டையிலும் அரைஞாணிலும்,. |
| மஞ்சள் - குங்குமப்பூக் கலந்த கலவைச் சாந்து; அழிதல் - முன்னர்ப் பூசினபடியன்றி விளையாட்டு. வியர்வை முதலிய காரணத்தாற் கோலம் சிதைதல். |
| மையும் - மஞ்சளோடு அவ்வாறே தீட்டிய கோலம் சிதைந்த மையினையும் என உம்மை இறந்தது தழுவியது; மருங்கு ஒதுக்குதல் - கண்ணிற்படாமல் இமைகளின் பக்கமே இருக்கும்படி ஒதுக்குதல். |
| பஞ்சு அஞ்சும் மெல் அடியார் - அம்மையார்; இவ் அடை மொழிகள் அவரது திருவடியின் மெல்லிய தன்மை குறித்தன; இத்தகைய மென்மை தனக்கில்லை என்று இலவம்பஞ்சும் அஞ்சி ஒதுங்கக் கூடியபடி உள்ள மெல்லிய அடி என்க; அஞ்சுதல் - உடைந்து வெட்குதல்; தற்குறிப்பேற்றம். பஞ்சியிற் படினும் வருந்தும் அடி என்றலுமாம். "பஞ்சிதனின் மெல்லடி பதைப்ப" (கந்தபு - தெய்வ - மண - 231). |
| பரிந்து - என்பதனை எல்லாவினைகளுடனும் கூட்டுக. |
| எஞ்சலில்லாக் கோலம் - எவ்வாற்றாலும் ஒரு குறையும் இல்லாதவாறு செய்யும் அலங்காரம்; இவ்வாறு குறைபாடில்லாக் கோலஞ் செய்ததனை இங்கு இவ்வளவும் விரித்துக் கூறியது, இக்கோலத்தோடும் தரமில் வனப்பில் தனிப்புதல்வர் உயிர் பெற்று மீள வருதலும், இத்திருக்கோலத்துடனே என்றும் பிரியாதே இறைஞ்சி,இறைவர் - மலைமகளார் - சரவணத்துத் தனயர் - இவர்களுடனே திருக்கயிலையில் வீற்றிருக்கப் பெறுவாராதலும் குறித்தற்கு. |
| எடுத்துக் கணவர் கைக்கொடுத்தார் - பள்ளியினிற் சென்று கணவனாற் எடுத்துக் கொடுவந்த பிள்ளையை அம்மையார் தாமே அவரிடமிருந்து எதிர் வாங்கினார்; கோலம் செய்தார் - மீள அவர் கையிற் கொடுத்தார் என்றது அம்மைந்த னுடலினைக் கழுவித் திருவமுதாக்குதற்குத் தக்கபடி செய்யவேண்டிய நிலை மனைவியாராகிய தமது கடமை என்றதனாலும், அமுதுக்குத் தக்கதாக ஆக்க வேண்டுமென்ற தமது அன்பினாலும் ஆம் என்றதாம். அன்றியும் இக்கோலங்கள் செய்து திருத்துதல் மெய்த்தாயர் தொ ழிலாதலும் காண்க. இவ்வாறு கோலஞ்செய்து எடுத்துக் கணவர் கைக்கொடுத்தது அம்மையாரது உலகியல் கடந்த சிவனடிமைத் திறம் பற்றிய பேரன்பின் நிலை குறித்தது. இனிப், பின்னர்த், தாம் அழைக்கத் தம் மகனாக மீள உயிர் பெற்று ஒடிவந்தபோதும் அம்மையார் "எடுத்துத் தழுவித் தம் கரமுன் அணைத்துக் கணவனார் கையிற் கொடுப்ப"க் காண்கின்றோம்; அந்நிலை வேறு; அது தமது புதல்வன் என்ற தன்மையாற் மேற்கொண்ட உலகியல் அன்புநிலை; இங்குக் கணவர் |