| |
| பிணிப்பட ஆண்டு - அடியான் என்று பிணித்து - கட்டுப்படுத்தி ஆட்கொண்டு; தடுத்தாட்கொண்ட வரலாற்றின் குறிப்பு. பணிப்பு - அருள்செய்து வழிப்படுத்தல்;-(11) ஒருமையே...உருகும் - இக்கருத்தை ஆசிரியர் முன் (3235) "அடிமை ஒருமையா மெழுமையும்" என விரித்தமை காண்க; அருமையாம் புகழார் - பேரடியார் என்பது; ஆளுடைய பிள்ளையாரின் இத்தல வரலாற்றுக் குறிப்புமாம்; பெருமைகள் பேசி - தடுத்தாட் கொண்ட குறிப்பு; சிறுமைகள் செய்யில் - வேண்டியும் அருளாமை;-(12) ஏசின....பாயின புகழான் - பதிகக் குறிப்பு; ஏச்சுப்போலக் காணப்படினும் புகழ் பரவியதேயாம் என்றபடி; பாயின - பரவின; பேசின - இகழ்ச்சிக் குறிப்பால் பேசின; ஏச்சு - மிக்க இகழ்ச்சி வெளிப்படும் பேச்சு; 3236 பார்க்க. |
| தலவிசேடம்: - திருப்பாச்சிலாச்சிராமம் - முன் ஆளுடைய பிள்ளையார் புராணத்துரைத்தவை பார்க்க. (2217 -2218). |
3236 | இவ்வகை பரவித் திருக்கடைக்காப்பு ‘மேசினவல்ல'வென்றிசைப்ப மெய்வகை விரும்பு தம்பெரு மானார் விழுநிதிக் குவையளித் தருள மைவளர் கண்டர் கருணையே பரவி, வணங்கி,யப் பதியிடை வைகி எவ்வகைமருங்குமிறைவர் தம்பதிகளிறைஞ்சியங்கிருந்தனர் சிலநாள். | |
| 82 |
| (இ-ள்.) இவ்வகை...இசைப்ப - இவ்வாறு துதித்து "ஏசின வல்ல" என்று திருக்கடைக் காப்பும் சேர்த்திப்பாட; மெய்வகை...அளித்தருள - மெய்யன்பினையே விரும்பும் தமது பெருமானார் தூய நிதிக்குவையினை அளித்தருளவே; மைவளர்....வைகி - திருநீலகண்டராகிய இறைவரது பெருங்கருணையினையே துதித்துவணங்கி அந்தப் பதியினிடத்து எழுந்தருளி; எவ்வகை...சிலநாள் - பக்கத்தில் எப்பாலும் உள்ள இறைவரது பதிகளைச் சென்று வணங்கி மீண்டும் அங்கு எழுந்தருளிச் சில நாட்கள் இருந்தருளினர். |
| (வி-ரை.) இவ்வகை - முன் இரண்டு பாட்டுக்களிலும் கூறிய வகையினாலே; திருக்கடைக்காப்பும்...இசைப்ப - முன் பாட்டுக்களில் "இவரலாதில்லையோ பிரானார்" என்று ஏச்சும் இகழ்ச்சியும்படப் பாடியதுடன், திருக்கடைக் காப்பிலும் அதற்கு மாறாக அல்ல என்று இசைப்ப என்று, உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை; அதற்கு மாறாக என்பது இசை யெச்சம். |
| மெய்வகை விரும்பு தம்பெருமானார் - மெய்வகை - மெய்யன்பின்நிலை; மொழிகளின் நிலையன்றி உள்ளத்தின் மெய்ம்மை நிலையினையே; பிரிநிலை ஏகாரம் தொக்கது; மொழிகளின் நிலையன்றி என்பது இசையெச்சம். |
| தம்பெருமானார் - பிணிப்பட வாண்டு ஏவலாளராகக் கொண்ட தலைவர்; (பதிகம். 10) |
| கருணையே - முன்னர்த் தாழ்த்தஅருளின்மையின்றித் திருவுளத்துட்கொண்ட கருணையினையே; இங்குக் கருணையாவது பாடப் பணித்துப் பாடல் கேட்டு மகிழ்தல்; "அருச்சனை பாட்டேயாகும்" (216) "பித்தனென்றே பாடுவாய்" (219) என்ற முற்சரித வரலாறுகள் இங்கு நினைவு கூர்தற்பாலன. |
| எவ்வகை மருங்கும் இறைவர்தம் பதிகள் - இதுவரை போந்தது போல மேற்கு நோக்கியே செல்லாது பலபக்கமாகவும் காவிரியினிருகரையாகவும் சென்றருளினர் என்பது; இவை இன்னவென்று தெரியக்கூடவில்லை; திருப்பாச்சிலாச்சிராமத்தின் அருகிலும் சுற்றிலுமுள்ள பதிகள் போலும்! |
| 82 |