| |
| விடைபெற்று அங்குநின்றும் போவாராகி; பாங்கு...போந்து - பக்கத்தில் உள்ள நல்ல பதிகள் பலவற்றையும் முன்னே வணங்கி இறைவரது திருவடிகளைத் துதித்துச் சென்று; தண் பனிமலர்...ஆதரவால் - குளிர்ந்த மலர்கள் நிறைந்த ஆற்றின் பக்கத்தின் குளிர்ந்த நிலங்களையுடைய விளக்கமாகிய மேல் கொங்குநாட்டிலே காஞ்சிமாநதியின் கரையிலே உள்ள திருப்பேரூரினை மேலெழும் பேரன்பினாலே சென்று சேர்ந்தருளினர். |
| (வி-ரை.) உலகெலாம் உய்ய உறுதியாம் பதிகம் - நமச்சிவாயத் திருப்பதிகம். உலகமுய்யும் உறுதியாவது திருவைந்தெழுத்தாகிய மகாமந்திரம். இதுவே ஆதிமந்திரம், மகாமந்திரம் என்பனவாதியாக விதந்து பேசப்படுவது; உயிருக்கு உறுதிப்பயனாகிய சிறந்த வீடுபேற்றைத் தருவது; இதன் தன்மைகள் முன்னர் உரைக்கப்பட்டன; கடைப்பிடிக்க. இவை உண்மை விளக்கம், திருவருட் பயன் முதலிய ஞானநூல்களினும் சிவாகமங்களினும் அநுபவமுடைய தேசிகர்பால் அறிந்துகொள்ளத் தக்கன. உறுதி ஆம் - உறுதி செய்யும்; ஆகச் செய்யும். "இங்குன் புண்ணிய மணத்துள் வந்தார், யாவரும் என்பாற் சோதி யிதனுள்வந்தெய்தும்" (3144) என்று இறைவர் தந்த ஆணையின்படி அங்கு வந்தார்களுக்கெல்லாம் உய்யுநெறி காட்டி வீடுபெறும் தகுதி பெறுவித்து முத்திக்குவிடுத்திட ஆளுடைய பிள்ளையார் நமச்சிவாயத் திருப்பதிகத்தினையே அருளிய வரலாறு ஈண்டு நினைவுகூர்தற்பாலது. "மாயிரு ஞாலமுய்ய வழி" (3145) என்றும், "ஞானமெய்ந் நெறிதான் யார்க்கு நமச்சிவாயச் சொலாம்" (3146) என்றும் ஆண்டு ஆசிரியர் உரைத்தருளியவையும் நினைவுகூர்க. |
| மெய்...சிந்தை - "இங்கிவர் தம்மை மறக்கவொண் ணாதென் றெழுந்தமெய்க் குறிப்பு" (3240); "இதனைத் திண்ணிய உணர்வினிற் கொள்பவர்" (3241) என்று முன்கூறிய தன்மைபெற்ற சிந்தை என்க; அச்சிந்தையின் நிலைமாறாதபடி. |
| திருவருளால் - திருவருள் விடை பெற்றதனால். |
| பாங்கு நற்பதிகள் - இவை மேல் கொங்குநாட்டிலும், அங்குக் காவிரிக் கரையிலும் உள்ள பல பழைய சிவாலயங்களும், குன்றுதோறாடல்களாகிய கோயில்களுமாம் என்பது கருதப்படும். மூலனூர் சிவன்மலை - சென்னிமலை - ஊதியூர் மலை - பெருந்தலையூர் - குரக்குத்தளி முதலாயின என்பது கருதப்படும். |
| பனிமலர்த் தண் படப்பை என்க. நீலகிரி - வெள்ளிமலைச் சாரல்கள் அணியனவாதல் தண் - பனி என்ற ஒருபொருட் பன்மொழிகளின் குறிப்பு. |
| மீகொங்கிற் காஞ்சிவாய்ப் பேரூர் - முன்னர் "கொங்கில்" (3239); "கொங்கினில்" (3240) என்ற ஆசிரியர் இங்கு "மீகொங்கு" என்றார். "மீகொங்கிலணி காஞ்சிவாய்ப், பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தே பெற்றாமன்றே" (கோயில் - நம்பிகள் 11) என்ற தேவார ஆட்சி போற்றப்பட்டது காண்க. முன் கூறியது கொங்குநாடு என்ற பெரும் பகுதி. அக்கொங்கில் - என்ற பாடம் பிழை. |
| இங்கு "மீகொங்கு" என்றது அதன் உட்பிரிவாகிய மேற்குக் கொங்குநாடு. கொங்குநாடு, கீழ்கொங்கு, மேல்கொங்கு, வடகொங்கு என மூன்று பெரும் உட்பிரிவுகளை யுடையது; இங்கு மீ என்றது மேற்கு என்ற பொருளைக் கொண்டது. |
| காஞ்சி - ஆறு. இது பேரூருக்கு மேற்கில் 25 நாழிகையளவில் வெள்ளிமலைச் சாரலில் வன்னி மூலத்தில் எழுந்து ஓடிவந்து பேரூர்வழி வரும்வரைக் காஞ்சிநதி எனப் பெயர்பெற்றும், அதன்கீழ்க் காவிரியிற் கூடும்வரை நொய்யல் எனப்பெயர் பெற்றும் விளங்கும் ஒரு ஆறு. காவிரியின் கிளை நதிகளுள் ஒன்று. எப்போதும் நீரூற்றுடன் வற்றாது ஓடும். இது காவிரியுடன் கூடும் இடத்தில் நொய்யல் என்ற இருப்புப்பாதை நிலையத்தை அமைத்துள்ளார்கள். இதனுள் இடப்படும் இறந்தோ |