| |
| (வி-ரை.) முன் தம்மை ஆண்டவர் - திருவெண்ணெய் நல்லூரிலும், அதன் முன் திருக்கயிலையிலும் தம்மை ஆளாகக்கொண்ட இறைவனார். |
| மெய்த்தவர் - உண்மை யடியார்கள். நம்பிகளுடனே சூழ்ந்து திருக்கோயிலில் இறைவரை வணங்கப் பேறு பெற்றது மெய்த் தவப் பயனாம் என்பது. திருக்கோயில் வழிபாடு அடியார்களுடன் கூடிச் செய்யத் தக்கது என்ற குறிப்புமாம். |
| நித்தனார்...கோலம் - விளங்கக் - காட்ட - தில்லை திருநடனத்தின் காட்சியே இங்குக் காணும்படி விளக்கமாகக் காட்டியருள; திருவீழிமிழலையில் திருப்புகலிக் காட்சியும், திருமருகலிற் றிருச்செங்காட்டங்குடிக் காட்சியும் ஆளுடைய பிள்ளையாருக்கு இறைவர் அருளிய நிலைகள் இங்கு நினைவுகூர்தற்பாலன; ஒரு பதியிற் கும்பிட்டு வழிபட்டால் அப்பதியின் இறைவரது திருவடையாளங்கள் முதலிய திருமேனியின் கோலங்கள் முழுதும் மனத்துட் பதியும்படி கண்டு வைத்து வழிபட வேண்டுமென்ற நிலையுங் காட்டப்பட்டது. |
| நேர் காட்டக் - கண்டார் - காட்டக் காண்பது உயிரியல்பு. இந்நினைவின் உறைப்புப் பற்றியே, பின்னர்த் தில்லையில், இக்காட்சியே கண்டு பேரூரிற்கண்ட நிலை சிறப்பித்துப் "பேரூரர் பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தே பெற்றாம்" (தேவா) என்றருளிச் செய்கின்றார். |
| ஆனந்தக் கலுழிநீர் - ஆனந்த வெள்ளமாகி அருவிபோலப் பாய்ந்தொழுகும் கண்ணீர்; கலுழி - காட்டாறு; நீர்ப் பெருக்கு; பெரு வெள்ளம் என்றலுமாம். |
| வலங்கொடுதிருமுன் - என்பதும் பாடமாம். |
| 89 |
3244 | காண்டலுந் தொழுது வீழ்ந்துட னெழுந்து கரையிலன் பென்பினை யுருக்கப் பூண்டவைம் புலனிற் புலப்படா வின்பம் புணர்ந்துமெய் யுணர்வினிற் பொங்கத் தாண்டவம் புரியுந் தம்பிரா னாரைத் தலைப்படக் கிடைத்தபின் சைவ ஆண்டகை யாருக் கடுத்தவந் நிலைமை விளைவையா ரளவறிந் துரைப்பார். | |
| 90 |
| (இ-ள்.) காண்டலும்...எழுந்து - முன் கூறியவாறு காட்டக் கண்டவுடனே தொழுது நிலமுற விழுந்து உடன் எழுந்து நின்று; கரையில்...உருக்க - கரை காணாத பேரன்பானது எலும்பினையும் உருகச் செய்ய; பூண்ட...பொங்க - இயைந்த ஐம்புலங்களாலும் அறியப்படாத பேர் ஆனந்தம் தம்முள்ளே கலந்து மெய்யுணர்வினிலே நிறைந்து மேம்பட; தாண்டவம்...கிடைத்தபின் - ஆனந்தப் பெருங்கூத்தியற்றும் தமது பெருமானாரை நேரே பெறும்படி கிட்டிய பின்னர்; சைவ....உரைப்பார் - சைவ ஆண்டகையாராகிய நம்பிகளுக்குப் பொருந்திய அந்நிலைமையின் அதீதமாகிய ஆனந்தத்தின் விளைவினை அளவறிந்துரைக்க வல்லவர் யாவர்? (ஒருவருமிலர்.) |
| (வி-ரை.) காண்டலும் - முன் கூறியபடி திருவருள் காட்டக் காணலும். |
| பூண்ட ஐம்புலனிற்....பொங்க - பூணுதல் - ஒவ்வோர் புலனும் உரிய ஒவ்வோர் பொறியினைப் பொருந்தியறிதலாற் பூண்ட ஐம்புலன் என்றார்; ஐம்புலனிற் புலப்படா இன்பம் - ஐம்பொறிகளுக்கும் விடயமாகிய ஐம்புல வின்பங்களுக்குட்படாத பேரின்பம். புலன்களுக்குமெட்டாத என்க; ஐம்புலனாலும் அறியப்படாத சிவானந்த இன்பம். ஐம்புலனிலும் என முற்றும்மை தொக்கது. |