வல்லார்க டமைவென்று சூதினால் வந்தபொருள் அல்லாருங் கறைக்கண்ட ரடியவர்க டமக்காக்கும் நல்லார்நற் சூதரா மூர்க்கர்கழனாம் வணங்கிக் சொல்லார்சீர்ச் சோமாசி மாறர்திறஞ் சொல்லுவாம். | 12 | (இ-ள்) வல்லார்கள்...நல்லார் - சூதாடுபவர்களை வெற்றிகொண்டு சூதினால் வந்த பொருள்களை யெல்லாம் கருமை பொருந்திய விடமுடைய கண்டராகிய சிவபெருமானது அடியவர்களுக்கே திருவமுதுக்கு ஆக்குகின்ற நல்லாராதலின்; நற்சூதராம்......வணங்கி - நற்சூதர் எனப்பெறும் மூர்க்கரது திருவடிகளை நாம் வணங்கி; சொல்லார்.. சொல்லுவாம்-நிறைந்த சொற்களாற் புகழும் வேத வாய்மைச் சிறப்பினையுடைய சோமாசிமாற நாயனாரது திறத்தினைச் சொல்லப் புகுகின்றோம். (வி-ரை) இது கவிக் கூற்று. ஆசிரியர் தமது மரபின்படி இதுவரை கூறிவந்த புராணத்தை வடித்தெடுத்து முடித்துக்காட்டி, இனிக் கூறப்புகும் புராணத்திற்குத் தோற்றுவாய் செய்தருளுகின்றார். வல்லார்கள் - வல்லினை உடையவர்கள்; சூதாடுபவர்கள்; வல் - சூது; சூதாடு கருவி; வலியவர்கள் என்று கொண்டு இப்புராணத் தொடர்பால் சூதில் வலியவர்கள் என்று கொள்வதுமாம்; அப்பொருளில் வல்லார்கள் தமையும் என்று சிறப்பும்மை விரிக்க. அல்லாரும் கறைக் கண்டர் - "இருளாரு மணிகண்டர்" (3625); தீய விடத்தினை ஏற்றருளியது போலத் தீய சூதில் வந்த பொருளினையும் ஏற்றவர் என்பது குறிப்பு. ஆக்கும் - அமுதாக்கும் என்றும், ஆகச்செய்யும் - பயன்படுத்தும் - என்றும் உரைக்க நின்றது. நல்லார் நற்சூதராம் - நல்லாராதலின் நற்சூதர் எனப்பெற்றார் என்பது. (3626) பார்க்க. வணங்கிச் சொல்லுவாம் - வணங்கி அத்துணையாற் பெற்ற வலிமைகொண்டு சொல்லப் புகுவோம். சொல்லார் சீர் - "வேதம் பயிலும் மறையாளர் குலத்தின்வந்த மேலோராகிய சிறப்பு" (3630) என இதனை மேல் விரிப்பது காண்க. சொல் இங்கு இறைமொழியாகிய வேதத்திற் சிறந்த ஐந்தெழுத்தாகிய சொற்களின் தொகுதி என்ற பொருள்தந்து நின்றது; வேதச் சொல் நிறைந்த சிறப்பு; எடுத்துச் சொல்லத்தக்க சிறப்பு என்றலுமாம். முடிபும் தோற்றுவாயும் இவ்வாறு கண்டுகொள்க. "வேதப் பொருளஞ் செழுத்தும் விளம்பி யல்லான் மொழியான்" (திருத்தொண்டர் திருவந்தாதி - 39). |
|
|