அன்றுபோய்ப் பிற்றைநா ளந்நியதிக் கணையுங்காற் கொன்றைமுடி யார்மேற்றாங் கல்லெறிந்த குறிப்புதனை நின்றுணர்வா "ரெனக்கப்போ திதுநிகழ்ந்த தவரருளே" என்றதுவே தொண்டாக வென்றுமது செயநினைந்தார். | 11 | (இ-ள்) அன்றுபோய்...அணையும்கால் - அந்நாள் சென்று பின்னாளில் (சிவலிங்கம் கண்டபின் உண்ணுவது எனத் தாம் மேற்கொண்ட) அந்த நியதியின்படி செய்வதற்காக அணைந்தபோது;கொ ன்றைமுடியார்..நின்றுணர்வார் - கொன்றை மாலை சூடிய முடியினையுடைய இறைவரது திருமேனியின்மேல் தாம் முன்னை நாளில் கல் எறிந்த திருக்குறிப்பினைப் பற்றி நின்று உணர்வினிற் கொள்பவராய்; எனக்கு....என்று - "எனக்கு அப்போ திவ்வெண்ணம் நிகழ்வித்தது அவ்விறைவரது திருவருளேயாம்" என்று துணிந்து; அதுவே...நினைந்தார். அதுவே தாம்செய்யும் திருத்தொண்டாக மேற்கொண்டு இனி நாள்தோறும் அதனையே செய்ய எண்ணினார். (வி-ரை) அன்று - கற் கண்டு அதனைப் பதைப்போடும் எடுத்தெறிந்த அன்று என முன்னறிசுட்டு; போய் - நாட்சென்று; கழித்து. அந்நியதிக்கு - நாடோறும் சிவலிங்கம் முன்கண்டு உண்பேன் என்று நயந்து (3644) மேற்கொண்ட அந்த நியமமாகிய நியதியின் என முன்னறி சுட்டு; நியதிக்கு - நியமத்தின்படி செய்வதற்கு. குறிப்பதனை நின்றுணர்வார் - குறிப்பு - தாம் வழிபட்டுய்ய எண்ணிய கடவுளின்றிருமேனிமேல் கல்லெறியும்படி நிகழ்ந்த அந்த ஒவ்வாத செயலின் காரணமாகிய திருக்குறிப்பு; அந்நிகழ்ச்சியின்போது "நீடோடு களியுவகை நிலைமைவர" அதன் வயமேயாகி, இது செய்வது இது தவிர்வது என்ற செயல் அறியாது - ஆராய்ந்து உணராது -செயல் செய்தனர்; அது நிகழ்ந்ததற்கோர் ஏதுவேண்டும்; அஃதெது? "அவனன்றி யோரணுவு மசையாது" என்ற உண்மைப்படி தம் செயலால் நிகழாமையின் அதனை நிகழ்வித்தவன் அனைத்துயிர்க்கு உள்ளே நின்று நியமிக்கும் சங்கரனேயாம் என்று இவ்வாறு நினைந்து உணர்ச்சியிற் றெளிவாராகி. முன்னை நாள் நினையாது செயல் புரிந்தனர்; பிற்றைநாள் அதன் காரணத்தினை ஆய்ந்து உணர்வாராயினர்; என்பதாம். நின்று - தீர நிதானித்து ஆய்ந்து; உணர்வார் - முற்றெச்சம்; உணர்வாராகி; உணர்வார் - நினைந்தார் என்று முடிக்க. "எனக்கு.....அருளே" என்று - நின்று உணர்வார்துணிந்த நிலை; எனக்கு இது நிகழ்ந்தது - இது - கல்எறிந்த இவ்வொவ்வாத செயல்; எனக்கு - சிவலிங்கத்தினைக் கண்டு வழிபட்டு உய்ய எண்ணிய எனக்கு; நிகழ்ந்தது - ஒவ்வாச் செயல் நான் நினையாமலே செய்ய நேர்ந்தநிலை; அவர் - "பொருள் சிவன்"என் றருளாலே உணர்ந்தறிந்த (3640) அப்பெருமான் என முன்னறிசுட்டு; அருளே - ஏகாரம் பிரிநிலை; தேற்றமுமாம்; என்று - என்று உணர்ந்து தெளிந்து துணிந்து. அதுவே தொண்டாக என்றும் அதுசெய - அதனைத் தொண்டாக மேற்கொண்டு இனி வருநாள் எல்லாம் அதனையே செய்ய; அதுவே தொண்டாக - தொண்டுக்கு மாறுபட்ட அதனையே தொண்டாகக்கொண்டு; ஏகாரம் தேற்றம்; அது - அதனையே; இரண்டனுருபும் பிரிநிலை யேகாரமும் தொக்கன. அதுவே தொண்டாக ஆகும் நிலையின் தன்மையினை மேல்வரும் மூன்று பாட்டுக்களினால் விரித்துக் கூறுகின்றார். நினைந்தார் - துணிந்தார்; இதனை அருளே நிகழ்வித்தமையால் இதனையே அவரது அருளாணையாம்; ஆதலின் அவ்வாணையின்வழி நிற்பேன் என்பது துணிந்தனர். அதுவே தொண்டாக என்றும் செய - என்க. |
|
|