வெவ்வருக்கன் மண்டலமும் விளங்குமதி மண்டலமும் அவ்வனற்செய் மண்டலமும் முடனணைந்த தெனவழகை வவ்வுதிருக் காதின்மணிக் குழைச்சங்கு வளைத்ததனுட் செவ்வரத்த மலர்செறித்த திருத்தோடு புடைசிறக்க, | 29 | (இ-ள்) வெவ்வருக்கன்....என - வெப்பமுடைய சூரிய மண்டலமும் விளக்கமுடைய சந்திர மண்டலமும் அந்த அக்கினி மண்டலமும் ஒருங்கு கூடியதுபோல; அழகை....சிறக்க - அழகைத் தன்வயமாக்கும் திருச்செவியிலே அழகிய சங்கக் குழையினை வளைத்து அணிந்து, அதனுள்ளே செவ்வரத்தம் பூவைச் செறித்த திருத்தோடு இருபக்கங்களிலும் சிறந்து விளங்க; (வி-ரை) அவ் அருக்கன் மண்டலமும்....உடன் அணைந்ததென - அருக்கனும் மதியும் அனலும் உடன் அணைந்ததென என்னாது அவ்வவர்களின் மண்டலங்களும் உடன் அணைந்தது என்றார்; அவை மூன்றும் கண்களாய் மேலே விளங்குகின்றன; அக்குறிப்பினை முன்பாட்டில் மதி - விரிசுடர் - வெயில் - என்று கூறியருளினாராதலின், அவ்வொளிகள் விளங்குதற் கிருப்பிடமாயுள்ள மண்டலங்கள் கீழே மூலம் போலக் காதுகளில் அமைந்தனபோல என்று கவி நயம்படக் கூறியருளிய திறம் காணத்தக்கது; மண்டலம் - தோற்றத்திற் கிடம்; புவனம் (பு - தோன்றுதல்;) என்பதும் குறிப்பு. வெவ் அருக்கன் - விளங்குமதி - அவ் அனல் - வெம்மை - சூடு; விளங்குதல் - முன்பாட்டில் விளக்கம் கூறியது குறிப்பு; அவ்வனல் - முன்னர்க் கூறிய; விரி....சுடர்த் திருநுதல் என்று விரித்ததனாற் குறிப்புப் பெற்ற அந்த என முன்னறி சுட்டு; முன் பாட்டில் திருநீற்றுப் பொட்டின் தூய ஒளிக்கு உவமிக்கப்படும் பெருமை பெறுதல் குறிக்க விளங்கும் என்றார் என்றலுமாம். உடனணைந்ததென - உடன் அணையலாகாத இவை மூன்றும் உடனியைந்ததென என்று அபூத உவமைத்திறம் வெளிப்படக் கூறியவாறு. அழகை வவ்வுதல் - உலகில் உள்ள அழகெல்லாந் தாமே கவர்ந்து கொள்ளுதல்; காது - காதுகள். சங்குக் குழை - என்க. மணி - மணிபோன்ற அழகிய; "சங்கக் குழையார் செவியா! வழகா!" (தேவா), சங்கு மணிக் குழையை வளைத்து. செவ்வரத்த மலர் செறித்த - குழையினுள் மலரைப் புகுத்திய; செறித்தல் திணித்தல். காதும் - அதனுள் குழையும் அதனுள் மலரும் ஆக விளங்குதல் அருக்கண் மண்டலம், மதிமண்டலம், அனல் மண்டலம் மூன்றும் முறையே பட ஒருங்கு தோன்றுதல் போல உள்ளன என்பது; மண்டலம் வளைவும் குறிப்பது. மணிக்குழை சங்கு என்று வேறுபிரித்துக் கூறுவாருமுளர். வளைத்து - துளைத்து வளைவு பட ஆக்கி; புடை - இருபக்கங்களிலும். |
|
|