மாவீற் றிருந்த பெருஞ்சிறப்பின் மன்னுந் தொன்மை மலைநாட்டுப் பாவீற் றிருந்த பல்புகழார் பயிலு மியல்பிற் பழம்பதிதான் சேவீற் றிருந்தார் திருவஞ்சைக் களமு நிலவிச் சேரர்குலக் கோவீற் றிருந்து முறைபுரியுங் குலக்கோ மூதூர் கொடுங்கோளூர். | 1 | (இ-ள்) மா...மலைநாட்டு - திருமகள் வீற்றிருக்கும் பெரிய சிறப்பினுள் நிலைபெற்ற பழமையினை யுடைய மலைநாட்டிலே; பா....பதிதான் - பழந்தமிழ்ப் பாட்டுக்களிலே விளங்கிய பல புகழ்களையுடைய சேர அரச மரபினரும் குடிகளும் தொன்றுதொட்டுப் பயின்று வரும் இயல்பினையுடைய பழம் பதியாவது; சே....நிலவி - இடபத்தில் எழுந்தருளிய சிவபெருமானது திருவஞ்சைக் களத்துடனே நிலவப்பெற்று; சேரர் குலக்கோ....கொடுங்கோளூர் - சேரமரபின் அரசர்கள் அரசு கட்டிலேறியிருந்து வழிவழி அரசாட்சி செய்துவரும் பெரிய தலைநகரமாவது கொடுங்கோளூர் என்பதாகும். (வி-ரை) மா - திருமகள்; மாவீற்றிருந்த - திருமகள் விளக்கத்துடன் இருந்த; தொன்மை - “பரசிராமன் பெறுநாடு” (491); பா வீற்றிருந்த பல்புகழார் - பா- பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், புறநானூறு முதலிய சங்கம் மருவிய பழந்தமிழ்ப் பாட்டுக்கள்; பா வீற்றிருந்த பல்புகழாவது சங்கப்பாட்டுக்களில் சேரமன்னர்களது கொடைத் தன்மை பேசப்பட்ட திறம்; பதிற்றுப்பத்து சேர மன்னர்களைப் பற்றியே பாராட்டுவது; சிலப்பதிகாரம் - சேரமரபின் இளங்கோ அரசரால் பாடப்பட்டது; சேரன் செங்குட்டுவனது சிறப்பைச் சிறப்பாய்ப் பேசுவது; புறநானூற்றில் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் - மாந்தரஞ்சேர லிரும்பொறை முதலாகப் பாடப்பட்ட சேர மன்னர்கள் பலர்; இவற்றுள் சேர மன்னர்களின் பல்புகழ் விளங்கும்; புகழாவது பெரும்பான்மை ஈகைத்திறம் பற்றியதாம். “உரைப்பா ருரைப்பவை யெல்லாம்...ஈவார்மே னிற்கும் புகழ்” (குறள்); “போந்தை ஆரே வேம்பென வரூஉம்” (தொல்) சேரரது தொன்மையும் முதன்மையும் குறித்தது. பதிதான் - திருவஞ்சைக் களமும் நிலவி - கொடுங்கோளூர் - திருவஞ்சைக் களமும் கொடுங்கோளூரும் சேர்த்து ஒரே பதியாகக் கொண்டு வழங்கப்படுதலின் பதிதான் என ஒருமையாற் கூறினார்; “அஞ்சைக்களங் கொடுங்கோளூர்” என்று தேவாரத்துட் சேர்த்துப் போற்றப்பட்டது காண்க. அரசரது தலைநகரமும் அவர்களது வழிபடு கோயிலும் கூறியவாறுமாம். சேவீற்றிருந்தார் திருவஞ்சைக்களம் என்றும், கோ....மூதூர் - என்றும் கூறிய அடைமொழிகளின் கருத்துமிது; “அரசர் தொழில் புரியார், தெண்ணீர் முடியார் திருவஞ்சைக் களத்திற் றிருத்தொண்டே புரிவார்” (3754) என்பதும் இக்கருத்துடையது. குலம் - மரபு; முறை புரியும் - அரசாட்சி புரியும். நிகழ்காலத்தாற் கூறியது ஆசிரியரது காலத்தில் சேரநாடு சேரமன்னர்களால் ஆளப்பட்டுவந்தமை குறித்தது; குலமூதூர் - குலம் - மேம்பாடு; கோமூதூர் - அரசரது தலைநகர். இப்பாட்டினால் நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு, பழஞ்சரிதம், குடிவளம் முதலிய பலவும் கூறிய திறம் கண்டு கொள்ளற்பாலது. நாட்டுவளம் முதலியவை முன்னர் விறன்மிண்ட நாயனார் புராணத்துள் விரித்தமையால் ஈண்டுச் சுருக்கிக் கூறினார். பல்புகழின் - சொல்புலவர் - என்பனவும் பாடங்கள். |
|
|