வேத நெறியின் முறைபிறழா மிக்க வொழுக்கந் தலைநின்ற சாதி நான்கு நிலைதழைக்குந் தன்மைத் தாகித் தடைமதில்சூழ் சூத வகுள சரளநிரை துதையுஞ் சோலை வளநகர்தான் ‘கோதை யரசர் மகோதை’ யெனக் குலவு பெயரு முடைத்துலகில். | 4 | (இ-ள்) வேத....தன்மைத்தாகி - வேதங்களின் விதித்த நெறியினது முறைகளின்றும் வழுவாத மிகுந்த நல்லொழுக்கத்திலே சிறந்த நான்கு சாதிகளும் தத்தம் நிலைகளில் நிலைத்து ஓங்கும் தன்மையை உடையதாகி; தடமதில்சூழ்...நகர்தான் - பெரிய மதில் சூழ்ந்த மா - மகிழ் - சரளம் முதலிய மரங்களின் வரிசை நெருங்கிய சோலைகள் சூழ்ந்த வளப்பமுடைய அந்நகரம்; கோதை அரசர்....உலகில் - உலகத்தில் கோதை எனப்படும் சேர அரசர்கள் ஆளும் தலைநகராகிய மகோதை என்ற விளக்கமாகிய பெயரும் உடையது. (வி-ரை) நகர்தான் - தன்மைத்தாகிப் - பெயரும் உடைத்து - என்று கூட்டுக. வேதநெறியின்.....சாதி நான்கு தன்மை - அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்பன; இவையும், இவற்றின் ஒழுக்கமும், நிலைபேறும் வேதங்களுள் விதிக்கப்படுவன; நகரத்தின் நன்னிலைக்கு இவை இன்றியமையாது வேண்டப்படுவன; இவை பற்றி இந்நாளில் மாறுபட்ட கருத்துக்கள் பல பரவி மக்கட் கூட்டத்தை அலைக்கின்றன; எவ்வாற்றானும் ஓரோர் வகையால் சாதிகளும், அவற்றின் உரிய நல் ஒழுக்கங்களின் வழுவாத நிலைபேறும் சமூக நல்வாழ்வுக்கு இன்றியமையாதன என்பது அறிவோர் கருத்து; இப் பாகுபாடுகள் பிறழ்ந்த நிலையே இந்நாளில் உலக முழுதும் காணும் அல்லல்களுக்குக் காரணமாவது என்பது ஊன்றிப் பார்ப்போர்க்கு விளங்காமலிராது. ஆசிரியர் இதனைப் பல விடத்தும் வற்புறுத்திக் காட்டியருளுதல் காண்க; நெறியின் முறைபிறழா என்றும், மிக்க ஒழுக்கம் என்றும், நிலைதழைக்கும் என்றும் கூறியவாற்றால் இவற்றால் மாறுபட்ட பூசல்களுக்கும் அல்லல்களுக்கும் இடமின்மையும் உடன் கூறியபடியும் கண்டுகொள்க. தழைக்கும் என்றதனால் சாதிகள் எல்லாவற்றுக்கும் உள்ள ஆக்கப்பாடும் செழிப்பும் அறிவித்தபடியும் காண்க. சரளம் - நீண்ட இலைகளையுடைய தேவதாரு வகையுட்பட்டதொரு பெருமரம். கோதை அரசர் - சேரமரபின் அரசர்கள். மகோதை - தலைநகரின் பெயர்; பெயரும் - முன்னர்க்கூறிய கொடுங்கோளூர் என்ற பெயரேயன்றி இதுவும் என்று உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை “கடலங்கரைமேன் மகோதை” (தேவா). அரசர் மகோதை - ஆறாம் வேற்றுமைத் தொகை. சோலை வள நகர்தான் - இவ்வழகிய காட்சி இன்றும் சிறப்பாய்க் கண்டனுபவிக்க வுள்ளது. |
|
|