முருகு விரியு மலர்ச்சோலை மூதூ ரதன்கண் முறைமரபின் அருகி யழியுங் கலிநீக்கி யறங்கொள் சைவத் திறந்தழைப்பத் திருகு சினவெங் களியானைச் சேரர் குலமு முலகுஞ்செய் பெருகு தவத்தா லரனருளாற் பிறந்தார் பெருமாக் கோதையார். | 5 | (இ-ள்) முருகு....அதன்கண் - மணம் வீசும் மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த பழையஅந்நகரத்தில்; முறைமரபின்....திறம்தழைப்ப - சிறுகி அழிவு செய்யும் கலியினை, விதிமுறை மரபு வழிவரும் ஒழுக்கத்தினாலே நீக்கி அறத்தினை நாட்டும் சைவத்திறம் தழைத்தோங்கும்படி; திருகு...தவத்தால் - மாறுபட்ட கோபமிகுந்த மதமுடைய யானைப் படையினையுடைய சேரர் குலமும் உலகமும் செய்த பெருந்தவத்தினாலே; அரனருளால்...பெருமாக் கோதையார் - சிவனருளாலே பெருமாக் கோதையார் என்பவர் அவதரித்தனர். (வி-ரை) அருகி அழியும் கலி - அருகச் செய்து அழிவிக்கும் கலி என்க; அழியும் - பிறவினைப் பொருளில் வந்தது; கலி - தீநெறியின் விளைவு - “கலியைவாராமே செற்றார்” (தேவா). முருகு - மணம்; “முருகலர் தாமரை”. முறைமரபின் - நீக்கி - என்க; முறை மரபு - வேத நூன்முறை ஒழுக்கம்; மரபின் - மரபினால். அறங்கொள் சைவத்திறம் - அறம் வளரப் பாவம்(கலி) தேயும்; ஆதலின் அவ்வறத்தினை மேற்கொண்டு பெருக்கும் சைவத்திறம்; ஈண்டுக்குறித்த அறம் சிவநெறியாகிய அறம். யானைச் சேரர்குலம் - யானை - யானைப் படை; “வேழ முடைத்து மலைநாடு” என்றபடி யானைகள் மிகுந்த மலைநாட்டினை ஆளும் சேரர் குலம் என்றலுமாம்;“யானை யணிகள்...செல்வன, மான மலைநாட்டினின்மலிந்த மலைகளுடன்போ துவ போன்ற” (3795) சேரர் குலமும் உலகும் செய் தவத்தால் - சேரர்குலம் விளங்கவும் உலகம் சிவநெறியில் ஓங்கி நலம் பெறவும் தாம்தாம் தவஞ் செய்ததன் பயனாக; பெருகுதவம் - அளவு படாது மேன்மேற் பெருகும் தவம். அரனருளால் - தவத்தின் பயன் கொடுக்கும் சிவனருளாலே என்பதாம். பெருமாக் கோதையார் - கோதையார் - சேர அரசர்களது மரபுப் பெயர்; ஆர் - சிறப்புப் பன்மை; பெருமாக்கோதை - சேர அரசர்கள் பெயர் வழங்குமுறை. |
|
|