பாடல் எண் :3753

திருமா நகரந் திருவவதா ரஞ்செய் விழவின் சிறப்பினால்
வருமா களிகூர் நெய்யாட லெடுப்ப வான மலர்மாரி
தருமா விசும்பின் மிக நெருங்கத் தழங்கு மொலிமங் கலந்தழைப்பப்
பெருமா நிலத்தி லெவ்வுயிரும் பெருகு மகிழ்ச்சி பிறங்கினவால்.
6
(இ-ள்) திருமாநகரம்...எடுப்ப - செல்வ நிறைந்த அப்பெரு நகரத்தவர் பெருமாக்கோதையார் திருவவதாரஞ் செய்த திரு விழாவின் சிறப்பினாலே வரும் பெருமகிழ்ச்சி மிக்கு நெய்யாடல் விழாக் கொண்டாட; வானம்...நெருங்க - கற்பகப் பூமாரி மழை பொழியும் ஆகாயத்தில் மிக நெருங்க; தழங்கும்....தழைப்ப - ஒலிக்கும் மங்கல வொலிகள் ஓங்கி முழங்க; பெரு...பிறங்கினவால் - பெரிய இவ்வுலகத்தில் எல்லாவுயிர்களும் மேன்மேலும் பெருகுகின்ற மகிழ்ச்சி பெற்று விளங்கின.
(வி-ரை) விழவின் சிறப்பினால் - நகரம் - நெய்யாடல் - எடுப்ப என்க. நெய்யாடல் - நெய்யணி விழா; “திருமலிநெய் யாடல்விழாச் செங்காட்டங்குடி யெடுப்ப” (3677); “மீதணியு நெய்யணி விழாவொடு திளைப்பார்” (1933).
தழங்கும் மங்கல ஒலி - தழைப்ப - தழங்குதல் - ஒலித்தல்; முழங்குதல்; இவை இயங்களின் ஓசையேயாயினும் மங்கலங்காட்டி எழுதலால் ஒலி என்றார்; மங்கல வொலி என்னாது ஒலிமங்கலம் என்றதன் குறிப்புமிது. தழைத்தல் - மேன்மேல் எழுதல்.
எவ்வுயிரும்....மகிழ்ச்சி பிறங்கின - யாவும் யாருங் கழறினவும் மறிந்து நீதிமுறை புரியும் அரசர் பெருமான் அவதரித்தமையால் எல்லாவுயிர்களும் மகிழ்ச்சியடைந்தன என்பது குறிப்பு. கழறிற்றறிவார் என்ற பெயர்க்காரணம் காண்க. பிறங்குதல் - விளங்குதல்; மகிழ்ச்சியில் விளங்கின.