மண்மேற் சைவ நெறிவாழ வளர்ந்து முன்னை வழியன்பாற் கண்மேல் விளங்கு நெற்றியினார் கழலே பேணுங் கருத்தினராய் உண்மே வியவன் பினராகி யுரிமை யரசர் தொழில் புரியார் தெண்ணீர் முடியார் திருவஞ்சைக் களத்திற் றிருத்தொண் டேபுரிவார், | 7 | (இ-ள்) மண்...வளர்ந்து - உலகத்தில் சைவநெறி ஓங்கி வளரும் படி வளர்ந்து; முன்னைவழி...கருத்தினராய் - முற்செய் தவத்தின் வழியே தொடர்ந்து வந்த அன்பினாலே, மேலே கண் விளங்கும் நெற்றியினையுடைய சிவபெருமானது திருவடிகளையே பேணுகின்ற கருத்தினை உடையாராகி; உண்மேவிய அன்பினராகி - உள்ளத்திற் பொருந்திய அன்புடையராய்; உரிமை...புரியார் - தமது உரிமையாகிய அரசாட்சிக்குரிய தொழிலைச் செய்யாது; தெண்ணீர்...புரிவார் - தெளிந்த நீரினைச் சடையிற்றரித்த சிவபெருமான் விளங்க எழுந்தருளிய திருவஞ்சைக் களத்தில் திருத்தொண்டினையே செய்வாராய், (வி-ரை) மண்மேற் சைவநெறி வாழ என்றது உயிர்கள் சைவநெறியில் நின்று வாழ்வடைய என்றதாம். முன்னை வழி அன்பு - முற்செய்தவத்தால் உடன் வந்த அன்பு; “முன்பு செய்தவத்தி னீட்ட முடிவிலா வின்ப மான அன்பினை யெடுத்துக் காட்ட” (751) என்றது காண்க. “தவத்தினில்” (போதம். 8) என்ற விடத்து, “இனி இவ்வான்மாக்களுக்கு முற்செய்தவத்தால் ஞான நிகழும்” என்று அதிகரணம் வகுத்து ஓதியதும் கருதுக. வழி - வழியே வந்த; முன்னைவழி - அவ்வரசமரபின் முந்தையோர் வழி வந்த ஒழுக்கம் என்ற குறிப்புமாம்; “மன்னிய சைவத்துறையின் வழிவந்த குடிவளவர்” (1900). மேல் - மேனோக்கியதாக; அக்கினி மேனோக்கும் தன்மை குறித்தது; “ஊர்த்துவ ரேதசு” என்பது வடமொழி வழக்கு. “விரூபாட்சன்” என்னும் நாமமும் காண்க. கழலே - தொண்டே - ஏகாரங்கள் பிரிநிலை. அரசர் உரிமைத் தொழில் - என்க. உரிமையாவது அரசர் மரபின்வந்து வழிவழி தமக்கு உரிமையாய்ப் பெறுதல். புரியாராகிப் - புரிவார் - என்க; புரியார் - முற்றெச்சம். புரியாது. திருத்தொண்டே - இவை மேல்வரும் இரண்டு பாட்டுக்களில் விரிக்கப்படுவன. முன்னைவழி அன்பால் - இளமை தொட்டே சிவனன்பில் விளங்குதல் அரிது; அரசர்மரபில் வந்தோர் அரசுரிமை ஆட்சித் தொழில் புரியாது சிவனது அடிமைத் தொழில் புரிதல் அதனினும் அரிது; இந்நிலை முன்னைத் தவத்தாலன்றி வாராது என்பது கருத்து. “தவத்தினில்” “முற்செய்தவத்தால்” (போதம். 8) |
|
|