பாடல் எண் :3756

திருமஞ் சனமுங் கொணர்ந்துதிரு வலகு மிட்டுத் திருமெழுக்கு
வருமன் புடனின் புறச்சாத்தி மற்று முள்ள திருப்பணிகள்
பெருமை பிறங்கச் செய்தமைத்துப் பேணும் விருப்பிற் றிருப்பாட்டும்
ஒருமை நெறியி னுணர்வுவர வோதிப் பணிந்தே யொழுகுநாள்,
9
(இ-ள்)திருமஞ்சனமும்...சாத்தி - திருமஞ்சனமுங் கொண்டு வந்து திருவலகும் இட்டுத் திருமெழுக்கும் வருகின்ற அன்போடும் இன்பம் பொருந்தச் சாத்தி; மற்றும்....அமைத்து - மேலும் உள்ள திருப்பணிகளையும் பெருமை விளங்கச் செய்து அமைத்து; பேணும்...ஒழுகுநாள் - பேணுகின்ற விருப்பத்தினாலே ஒன்றித்துச் செல்லும் ஒழுக்கத்தின் உணர்வுவரத் திருப்பாட்டுக்களையும் ஓதிப்பணிந்தே இவ்வாறு ஒழுகுகின்ற காலத்தில்,
(வி-ரை)திருமஞ்சனம், திருவலகு, திருமெழுக்கு, ஏனைய அனைய திருப்பணிகளும், திருப்பாட்டு முதலியவையுமாகிய இவை பெருமாக் கோதையார் இளவரசராயிருந்தபோது திருவஞ்சைக்களத்தில் தங்கிச் செய்து ஒழுகிய திருத்தொண்டுகள்.
திருமஞ்சனமும் கொணர்ந்து - திருமஞ்சனத்துக்குரிய நீரினை எடுத்துக்கொண்டு வந்து.
திருமெழுக்கு..சாத்தி - திருமுற்றத்தினை அன்பும் இன்பமும் பொருந்த மெழுகி; அன்பும் இன்பமும் இவர்பாலும் வரும் அடியார்பாலும் நிகழ.
மற்றும் உள்ள திருப்பணிகள் - திருக்கோயில் உள்ளும் புறம்பும், திருமதில் மண்டபம் முதலிய தலங்களையும் தூய்மையாக்குதல், திருவிளக்கிடுதல் முதலாயின.
பேணும் விருப்பில் - பேணுகின்ற விருப்பத்தினாலே; பேணுதல் - பாராட்டுதல்; அன்பு செலுத்துதல்.
ஒருமை நெறியின் உணர்வுவர - ஒன்றித்த நினைவுடனே; “ஒரு நெறிய மனம் வைத்துணர்”, “ஒன்றியிருந்து நினைமின்கள்” (தேவா).

திருப்பாட்டும் - ஓதி - என்று கூட்டுக; இவை இந்நாயனார் அவ்வப்போது துதிக்கும் வகையில் தாமே அருளியவை போலும்; இப்போது கிடைத்தில! அன்றியும், அம்மையார் திருப்பதிகங்கள், திருமந்திரம், ஆளுடைய பிள்ளையார் அரசுகள் தேவாரங்கள் முதலாயின முன்னோர் திருப்பாட்டுக்களும், கீதங்களும், என்றலுமாம்.
திருப்பாட்டும் - ஓதி - முன் கூறியவை மெய்யினாற் செய்வன; அவற்றினின்றும் வேறு பிரித்து இவை வாக்கினாற் செய்வன என்பார் உம்மை கொடுத்துப் பிரித் தோதினார்; ஒருமை நெறியின் உணர்வு - என்பது மனத்தாற் செய்யும் பணியினைக் குறித்தது; உணர்வு வர - உணர்வுடனே; உணர்வு வந்ததனாலே; வரும் பொருட்டாக எனறலுமாம்.
“நிலை பெறுமா றெண்ணுதியே னெஞ்சே நீவா, நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப், புலர்வதன்முன் னலகிட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச் சங்கரா சயபோற்றி போற்றி யென்றும், அலைபுனல்சேர் செஞ்சடையெம் மாதீ யென்று மாரூரா வென் றென்றே யலறா நில்லே” (தேவா - அரசு); “ஆமாறுன் றிருவடிக்கே யாகங் குழையே னன்புருகேன், பூமாலை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன் புத்தேளிர், கோமானின் றிருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்தாடேன், சாமாறே விரைகின்றேன் சதுராலே சார்வானே” (திருவா. சத - 14); “ஆடுவதும் பாடுவது மானந்த மாகநின்னைத், தேடுவது நின்னன்பர் செய்கை பராபரமே; (தாயுமானார்).