பாடல் எண் :3757

நீரின் மலிந்த கடலகழி நெடுமால் வரையின் கொடிமதில்சூழ்
சீரின் மலிந்த திருநகர மதனிற் செங்கோற் பொறையனெனுங்
காரின் மலிந்த கொடைநிழன்மேற் கவிக்குங் கொற்றக் குடைநிழற்கீழ்த்
தாரின் மலிந்த புயத்தரசன் றரணி நீத்துத் தவஞ்சார்ந்தான்.
10
(இ-ள்)நீரின்...திருநகரமதனில் - நீரினால் நிறைந்த கடல்போன்ற அகழியும் நீண்ட பெரிய மலைபோன்ற கொடிமதிலும் சூழ்ந்த சிறப்புமிக்க அத்திரு நகரத்திலே; காரின்...கீழ் - மேகத்தின் மிகுந்த கொடையின் நிழல் மேலேயும் அதன் கீழே கவிக்கும் வெண்கொற்றக் குடையின் நிழலுமாக அதன்கீழேயிருந்து; செங்கோற்பொறையனெனும் - செங்கோற்பொறைய னென்னும் பெயரையுடைய; தாரின்...சார்ந்தான் - மாலையணிந்த தோள்களையுடைய சேர அரசன் இவ்வுலகந்தாங்கும் செயலை நீத்துத் தவநெறிசாரத் தவ ஒழுக்கத்தினைச் சார்ந்தனன்.
(வி-ரை) கடலகழி - வரையின் மதில் சூழ் நகரம் என்க; கடல் போன்ற அகழியினாலும், மலை போன்ற மதிலினாலும் சூழப்பெற்ற நகரம்; இனி, இந்நாடு கடல் சூழ்ந்த நாடாகவும் மலைகள் நிரம்பிய மலை நாடாகவும் உள்ளமையின் கடலே அகழியாகவும் மலையே மதிலாகவும் சூழ்ந்த என்று உரைக்க வைத்ததுவும் கவிநயம்; கொடிமதில் - கொடிகள் மதிலுக்கும் அரசுக்கும் உரிய அங்கங்களுள் ஒன்று.
செங்கோற் பொறையன் - நாயனாருக்கு முன் அரசு புரிந்த சேர அரசரது பெயர்; பெருஞ்சேரலிரும்பொறை, இளஞ்சேரலிரும்பொறை முதலியனவாக வரும் சேரமன்னர்களின் பெயர்கள் ஈண்டுக் கருதத்தக்கன. செங்கோலைத் தாங்கி அரசு செலுத்துபவன் என்பது பெயர்க்காரணப் பொருள். பெருமாக் கோதை என்பதும் இவ்வாறே காரணம் பற்றிய பெயராய் நிற்றலும் காண்க. பெருமாள் எனவழங்கும் சேர மன்னர் மரபுப் பெயரும் இப்பொருள் தருவது போலும்.
செங்கோல் - செவ்விய கோல்போறலின் நீதி இப்பெயர் பெற்றது; கோல் அதற்கறிகுறியாக வுள்ளது.
காரின்....கீழ் - இவ்வரசன் இரண்டு நிழல்களின் கீழ்இருந்து அரசுபுரிந்தான்; ஒன்று கொடை நிழல்; மற்றொன்று குடை நிழல்; அவற்றுள் மேலே நிற்பது கொடை நிழல்; குடைநிழல் அதனின் கீழ்ப்பட்டது என்பதாம்; மேல் - மேம்பட்டது என்ற குறிப்புடனும் நின்றது; நிழலின்கீழ் அரசு புரிதல் என்பது வெயில் மழை பனித் துன்ப நீக்கிக் குடைநிழல் காத்தல் போல, நாட்டினைத் துன்ப நீக்கியின்பம் பொருந்தக் காத்தல்; குடை - வெண் கொற்றக்குடை. இது முடியுடை அரசர்க்குரிய சிறப்பு அடையாளங்களுள் ஒன்று; அரசன் நாட்டின் நலத்திற்கு ஒருங்கே காரணமாயிருத்தற்கு அறிகுறியாம் என்ப. “பிரபஞ்சமெல்லாவற்றிற்கும் மூலகாரணமா மியல்பாகிய ஒரு பெரு வெண்கொற்றக்குடையும்....... பிறரொருவருக்கின்றித் தனக்கே யுரிமையாகச் சிறந்தமைபற்றி.....முதல்வனை மன்னவனாகவும்” (போதம். 8. சிற்றுரை); கொடைநிழல் - கொடையின் பயனாகிய தருமத்தின் நன்மை; காரின்மலிந்த - பயன் கருதாது பெய்து உலகளிப்பது மேகம்; மலிதல் - அதனினும் நன்மையால் மேம்படுதல்; இன் - உவமவுருபு; உம்மை தொக்கது; கார் - இந்நாட்டினை அளிக்கும் இரண்டனுள், பருவந் தவறாது மிக்குப் பெய்யும் இயல்புடைய (மேகம்) கார் ஒன்று; அரசனது கொடை மற்றொன்று. அவற்றுள் நற்பயனால் மிக்கது கொடை என்பதாம். “கார் கொண்ட கொடை” என்ற திருத்தொண்டத் தொகையும் காண்க. சேரர்களது கொடைத்திறம் பற்றிப் பதிற்றுப்பத்து, புறநானூறு முதலிய பழந்தமிழ் நூல்களுள் உரைத்தவையும் பார்க்க.
மேல் - கீழ் - உலகளிக்கும் நீழல் இரண்டனுள் கண்ணாற் காணப்படாது பயனால் மேம்பட்டு நாடு எங்கும் பரவியது கொடை நிழல்; கண்ணாற் காணப்பட்ட அறிகுறியாக அரசன்முடிமேல் அளவுபட நிழற்றுவது குடைநிழல் என்ற குறிப்பும்பட மேல் - கீழ் என்ற சொன்னயமும் காண்க. இவ்விரண்டும் கவிகை எனப்படுதலும் அறிக.
தரணி நீத்துத் தவஞ்சார்ந்தான் - உலக அரசாட்சியினைத் துறந்து தவஞ் செய்யும் ஒழுக்கத்தினை மேற் கொண்டனன். தபோவனம் சென்றான் என்பாருமுண்டு; அது மேற்பாட்டிற் கூறப்படும். இவ்வாறு அரசாட்சியினைத் தாமாகவே நீத்துத்துறவு சார்தல் இம்மரபினில் இன்றும் காணும் சிறப்பு நிலையாம்; கொச்சி அரசர் மரபு நிலைகள் காண்க; ஐயடிகள் காடவர்கே னாயனார், அரசாட்சி “இன்னலென விகழ்ந்ததனை யெழிற்குமரன் மேலிழிச்சி, நன்மைநெறித் திருத்தொண்டு நயந்தளிப்பா ராயினார்” (4048) என்னும் வரலாறும் “படிமுழுதும் வெண்குடைக் கீழ்ப் பாரெலா மாண்ட, முடியரசர் செல்வத்து மும்மைத் - தொடியிலங்கு, தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட் டோடேந்தி யுண்பதுறும்” (11-ம் திருமுறை - க்ஷேத்திரத் திருவெண்பக - 10) என்ற அவரது திருவாக்கும், ஈண்டு நினைவுகூர்தற்பாலனவாம். முடிமன்னராகும் நிலையினையும் துறந்து தவஞ்சாரும் பெருநிலை எமது தமிழ்நாட்டுப் பெருவேந்தர்க்கே சிறப்பாய் உரியது; இந்நாளில், இதனோடொப்பின், ஒன்றுக்கும் பற்றாத சிறிய அமைச்சு முதலிய சின்னாட் சிற்றதிகார பதவிகளுக்கும் விடாமுயற்சியினுடன் பேய்போல அலையும் உலக மாக்களின் கீழ்மை யிதனுடன் ஒப்பிட்டு உண்மை கண்டுகொள்ளத்தக்கது.