பாடல் எண் :3758

வந்த மரபி னரசளிப்பான் வனஞ்சார் தவத்தின் மருவியபின
சிந்தை மதிநூ றேரமைச்சர் சிலநா ளாய்ந்து தெளிந்தநெறி
முந்தை மரபின் முதல்வர்திருத் தொண்டு முயல்வார் முதற்றாக
இந்து முடியார் திருவஞ்சைக் களத்தி லவர்பா லெய்தினார்.
11
(இ-ள்)வந்த....பின் - வழிவழி தொடர்ந்து வந்த அரசமரபில் அரசு செய்வானாகிய மன்னன் முன் கூறியபடி தபோவனத்திற் சார்கின்ற தவநெறியினைச் சேர்ந்தபின்பு; சிந்தை....நெறி - சிந்தை செய்யும் கூர்த்த மதியினையுடையவராய்த்தாய உரிமை அறிதற்கு உரிய நூல்களைத் தேரும் அமைச்சர்கள் சில நாட்கள் ஆராய்ந்து தெளிந்த துணிபாவது; முந்தை...முதற்றாக - முன்னை மரபினாலே முழுமுதல்வனாரது திருத்தொண்டு புரிவாராகிய பெருமாக் கோதையார்பால் அம்முதன்மை நின்றதாக; இந்து...எய்தினார் - பிறையணிந்த திருமுடியினை உடைய இறைவர் எழுந்தருளிய திருவஞ்சைக் களத்தில் அவரிடம் சென்று சேர்ந்தனர்.
(வி-ரை) வந்த மரபு - வழிவழி உரிமைப்பட்டு வந்த அரச மரபு.
அரசளிப்பான் - அரசு செய்ய வேண்டியவனான மன்னவன்; வினைப்பெயர்.
வனஞ்சார் தவத்தின் மருவுதலாவது - நாட்டினை விட்டுத் தபோவனத்தினை அடைந்து தவத்தின் நிற்றல். சிந்தை....நெறி - சிந்தையினாலே தேர் என்று கூட்டுக.
மதிநூல் - அறநூலும் அரசநூலும்.
சிலநாள் ஆய்ந்து தெளிந்த நெறி - அரசுவழி காணுதல் மலை நாட்டுச் செய்தியாதலின் மதிநூல் தேர் அமைச்சர்க்கும் விரைவில் தெளிய வியலாது சில நாட்கள் ஆராய்ந்து துணிய வேண்டியதாயிற்று; நெறி - முதற்றாக - அந்நெறி - தாய உரிமையின் வழி - அவரே முதன்மையினராகச் சென்று நின்றது என்க.
முதற்று - முதலாக உடையது.
அவர்பால் எய்தினார் - அவ் அமைச்சர் என்ற எழுவாய் தொக்கு நின்றது.