எய்தி யவர்த மெதிரிறைஞ்சி “யிருந்தண் சாரன் மலைநாட்டுச் செய்தி முறைமை யாலுரிமைச் செங்கோ லரசு புரிவதற்கு மைதீர் நெறியின் முடிசூடி யருளு மரபால் வந்த”தெனப் பொய்தீர் வாய்மை மந்திரிகள் போற்றிப் புகன்ற பொழுதின்கண், | 12 | (இ-ள்) பொய்தீர் வாய்மை மந்திரிகள் - பொய்யினைத் தீர்க்கும் வாய்மையினையுடைய (அந்த) மந்திரிகள்; எய்தி...இறைஞ்சி - முன் கூறியவாறு திருவஞ்சைக் களத்திற் சேர்ந்து அவர் திருமுன்பு வணங்கி; இருந்தண் சாரல்...வந்தது என - பெரிய குளிர்ந்த சாரல்களையுடைய மலை நாட்டின் அரசர் மரபு வழிவழி வரும் செய்தி முறையினாலே உரிமைச் செங்கோல் அரசு செலுத்துவதற்குக் குற்றமற்ற வழியினால் முடிசூடியருளும் தாய மரபால் (தேவரீர்) வந்தது என்று; போற்றி....பொழுதின் கண் - துதித்துச் சொல்லியபோது, (வி-ரை) இருந்தண்....வந்தது - இஃது அமைச்சர் நாயனாரிடம் மொழிந்தது. மலைநாட்டுச் செய்தி முறைமை - மலைநாட்டுச் சட்ட ஒழுங்கின்படி வழிவழியில் தாயபாகம் வரும் முறைமை; இதனை மருமக்கட் டாயம் எனவும் வழங்குவர். தமிழ் நாட்டினுள் ஏனைச் சோழர் பாண்டியர் முதலாகிய நாடுகளிற்போல மலைநாட்டுத் தாயமுறை மகன் - மகன்மகன் முதலாக வரும் ஆண் மரபு வழி வருவதில்லை; உடன் பிறந்த பெண் வழியாகத் தாயம் வருவது இம் முறை என்பர். இதன் விரிவெல்லாம் இன்றும் அந் நாட்டில் வழங்கும் சட்டங்களின் மூலம் அறியத் தக்கன. இம்முறைமையாலேதான் அந்நாட்டிற் பெண்களுக்கு அதிக உரிமை பெருமைகள் இருக்கக் காண்கின்றோம். “பெண் மலையாளம்” என்ற பெயரும் வழங்கும். முடிசூடி யருளும் மரபால் வந்தது - இஃது அரசரிடம் மந்திரிகள் விண்ணப்பிக்கு முறை. தாயமுறை, மரபினால் தேவரீரிடம் வந்து நின்றது என்றும், மரபால் தேவரீரது திருவவதாரம் வந்தது என்றும் உரைக்க நின்ற பணிவுச் சொன் மரபு வழக்குக் காண்க. பொய்தீர் வாய்மை - பொய்யினைத் தீர்க்கும் சொல் நலம்; பொய் - பொய்ச் சொல்லும் அதுகாரணமாக வரும் தீமைகளுமாம். அமைச்சரது பண்புகளையும் கடமைகளையும் குறித்தவாறு. போற்றிப் புகன்ற - பெரியோர் - அரசர் - முதலாயினவர் முன்பு எச் செயலையும் விண்ணப்பிக்கும் முன்பு அவர்களைப் போற்றித் தொடங்குதல் முறை. இங்கு நாயனார் அரசராதலுடன் பேரன்புடையராய்ச் சிவனடிமைத் திறத்தினின்ற பெரியோராதலானும் போற்றுதல் வேண்டப் பட்டது. பொழுதின் கண் - அறிவேன் எனப் புக்கு - விண்ணப்பஞ் செய்தார் - என மேல் வரும் பாட்டுடன் முடிபு கொள்க. |
|
|